The Color Purple: `வாழ்வில் நம் இருத்தல்தான் முக்கியம்!' நம்பிக்கை விதைக்கும் மூன்று தலைமுறையின் கதை
என்று அழுத்தம் திருத்தமாக செலி பாட ஒட்டுமொத்த திரையரங்கமும் ஆர்ப்பரிக்கிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடைபெறவில்லை. சென்னையின் ஒரு மல்டிபிளக்ஸ் திரையரங்கில் அரங்கேறியது. இந்த மார்ச் மாதம் உலகம் முழுக்க ‘பெண்கள் வரலாற்று மாத’மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கு முந்தைய மாதமான பிப்ரவரி மாதம் ‘கறுப்பர் வரலாற்று மாத’மாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
இதனையொட்டி பல்வேறு பண்பாட்டு கலாசார நிகழ்வுகள் உலகம் முழுக்க நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் (Consulate General of the United States, Chennai) சத்யம் திரையரங்கில் 2023-ம் ஆண்டு வெளியான ‘தி கலர் பர்ப்பிள்’ படத்தினை சிறப்புத் திரையிடல் செய்ய ஏற்பாடு செய்திருந்தது. அப்போது ஏற்பட்ட ஆரவாரம் இந்தப் படத்தின் விமர்சனத்தைத் தாண்டி வரலாற்றினை நம்மைத் தேட வைத்தது.
2023-ல் வெளியான `தி கலர் பர்ப்பிள்' திரைப்படம், ஆலிஸ் வாக்கர் எழுதி, அதே பெயரில் வெளிவந்த உலகப் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. மேலும் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்றால் 1985-ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இதே பெயரில் இயக்கிய திரைப்படத்தின் `மியூஸிக்கல் ரீமேக்' என்று இந்த 2023 படத்தைச் சொல்லலாம். கடந்த நாற்பது ஆண்டுகளாகக் காவியமாகப் போற்றப்படும் `கல்ட் கிளாசிக்' தன்மையடைந்த இந்த எழுத்துக்குப் பல திசைகளிலிருந்து விமர்சனங்களும் இருக்கின்றன. சிலர் இதைத் தடை செய்ய வேண்டும் என்கிறார்கள், சிலர் இதைப் போற்றிப் புகழ்கிறார்கள், இன்னும் சிலர் இதை இன்றுவரையிலும் கொண்டாடுகிறார்கள்.
அமெரிக்காவில் இனவெறி, பெண்களுக்கு எதிரான பாகுபாடு உச்சத்திலிருந்த 1900-களின் தொடக்கக் காலகட்டம். அப்போது ஜார்ஜியாவில் தந்தையின் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான ஆப்ரோ அமெரிக்கப் பெண்மணி செலி, பிறகு ஆணாதிக்க கணவன் ஆல்பர்டிடம் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவரது வாழ்க்கைப் பயணம் எப்படி மாறுகிறது என்பதை உணர்வுபூர்வமாக பேசுவதே ‘The Color Purple (2023)’ படத்தின் கதை. இந்த ரீமேக் 1985-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய நாவலின் தழுவலிலிருந்து பெரிதும் மாறுபடுகிறது. கானிய (Ghana) திரைப்பட இயக்குநர் பிளிட்ஸ் பஜாவூல், பாடல்களின் உதவியுடன் ஒரு புதிய பார்வையிலிருந்து இந்தக் கதையை அணுகியிருக்கிறார்.
கணவரின் கொடுமைகளை எதிர்கொள்வது, பிரிந்த சகோதரியின் கடிதத்துக்காக ஏங்குவது, செக் (Shug) என்ற பாடகியிடம் காதல் வயப்படுவது, ‘என் இருப்பு முக்கியம், என் குரல் கேட்கப்பட வேண்டும்’ என திமிறி எழுவதென செலியாக வாழ்ந்திருக்கிறார் ஃபாண்டாசியா பாரினோ. ஆணாதிக்க கணவராக ‘மிஸ்டர்’ ஆல்பர்ட் (கோல்மன் டொமிங்கோ) பல இடங்களில் நமக்கே கோபம் வருகிற அளவுக்கு நேர்த்தியான வில்லனாக வலம்வருகிறார். செலிக்கு அப்படியே நேர்மாறான கதாபாத்திரத்தில் சோஃபியாவாக நடித்துள்ள டேனியல் ப்ரூக்ஸ், யாருக்கும் அஞ்சாத உடல்மொழி, தேர்ந்த நடனம், ஆணாதிக்கத்தைக் கேலி செய்வதென அதகளம் செய்கிறார். அதே நேரத்தில் நிறவெறி ஆதிக்கத்தால் ஒடுங்கிப் போகிற காட்சிகளில் கண்களைக் குளமாக்குகிறது அவரது நடிப்பு.
இந்த ரீமேக் இசைத்திரைப்படம் வெறும் இசையினால் மட்டும் ஸ்பீல்பெர்க்கின் படத்திலிருந்து வேறுபடாமல், உணர்வாகவே பல இடங்களில் வேறுபடுகிறது. ஸ்பீல்பெர்க் தன் படத்தில் வலியை அதிகமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். இந்தத் திரைப்படமும் அப்படிக் கடத்தியிருந்தாலும் வேகமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்து விடுகிறது. அதேபோல ஸ்பீல்பெர்க், செலியின் வாழ்க்கைப் போராட்டத்தையும் வெற்றியையும் மட்டுமே படத்தின் மையக் கருத்தாக வைத்திருப்பார். ஆனால் பஜாவூலின் இந்தத் தழுவல், செலி மற்றும் ஷக் (டாராஜி பி.ஹென்சன்) இடையேயான காதலை உணர்ச்சிகரமாகச் சித்திரித்திருக்கிறது. அன்றைய சூழலில் வாழ்ந்த வயதான ஆப்ரோ அமெரிக்கப் பெண்களுக்கு இடையேயான காதலை இவ்வளவு அழகாகக் காட்டுவது மிகவும் புதுமையானது.
நடிகர் அனைவரின் நடிப்பும் மிக அற்புதமாக இருந்தாலும் இசைப்பட வடிவம் காரணமாக, கதையை விடப் பாடல்கள் வேகமாகச் செல்கின்றன. இதனால் செலியின் உணர்ச்சிகளை முழுமையாகப் புரிந்துகொள்வதில் சற்று சிரமம் இருக்கிறது. செலியின் கணவன் ஆல்பர்ட், அவரது தந்தை அல்போன்சோ (டியோன் கோல்) ஆகியோரின் கொடுமைகள் மிக அவசர அவசரமாகக் காட்டப்பட்டுள்ளன. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் படத்திலிருந்த கதாபாத்திர உணர்வுகளின் ஆழம் இதில் மிஸ்ஸிங். சில இடங்களில் கறுப்பின ஆண்களை அதீதமான வில்லன்களாகக் காட்டுவது போன்ற உணர்வும் தோன்றுகிறது.
40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வசனமாக இருந்தாலும் இன்றும் அதன் தாக்கம் இருக்கவே செய்கிறது.
“இதுவரைக்கும் சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன். என் அப்பாக்கூட சண்டை போட வேண்டியிருந்தது. என் தம்பிங்க கூட சண்டை போட வேண்டியிருந்தது. என் மாமாக்களோட சண்டை போட வேண்டியிருந்தது. ஆண்கள் அதிகமா நிறைஞ்சிருக்குற குடும்பத்துல ஒரு பெண் குழந்தைக்குப் பாதுகாப்பு இல்ல. ஆனா, என் சொந்த வீட்டுலயே சண்டை போட வேண்டியிருக்கும்னு நான் நினைச்சதே இல்லை” பெரும் மூச்சுவிட்டு மீண்டும் பேச ஆரம்பிக்கிறாள் சோபியா, “கடவுளின் சாட்சியாக நான் ஹார்போவை (கணவன்) மிகவும் காதலிக்கிறேன். ஆனா, அவன் என்னை அடிச்சா, அவனை நான் கொன்னுடுவேன்” என்று அவர் பேசும் வசனத்துக்கு இன்றும் ஆர்ப்பரிக்கிறது அரங்கம். இது அக்காலம் ஆனாலும் கலை தனக்கான வாழ்நாளை நீட்டித்துக் கொண்டே இருக்கிறது என்பதற்கான சாட்சியம் இது!
மொத்தத்தில், `தி கலர் பர்ப்பிள்' ஆப்ரோ அமெரிக்கப் பெண்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி ஒரு சக்திவாய்ந்த பார்வையை இன்றும் வழங்குகிறது. தொழில்நுட்பம், பாடல் என அதன் மணம் சற்றே மாறினாலும், வாழ்வின் இருத்தலை அழுத்தமாகப் பேசும் அந்த பர்ப்பிள் பூக்களின் நிறங்கள் மாறவே இல்லை.
from விகடன்
Comments