சித்தா விமர்சனம்: `அந்த ஒற்றைக் காட்சி'- சித்தார்த் 2.0; வெல்கம் நிமிஷா; படம் எப்படி இருக்கிறது?

பழனி நகராட்சி அதிகாரியான ஈஸ்வரன் (சித்தார்த்) கணவனை இழந்த தன் அண்ணி (அஞ்சலி நாயர்), தன் அண்ணன் மகள் சுந்தரி (சஹஸ்ரா) ஆகியோருடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

தந்தையை இழந்த எட்டு வயதான சுந்திரி மீது ஈஸ்வரனுக்கு எல்லையில்லா பாசம். சுந்தரிக்கும் தான் 'சித்தா' என்று அழைக்கும் தன் சித்தப்பா ஈஸ்வரன்தான் எல்லாம். இந்நிலையில், சுந்தரியின் தோழிக்கு ஓர் அசம்பாவிதம் நடக்கிறது. அதையொட்டி ஈஸ்வரன் சிக்கலில் மாட்டுகிறார். அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அதே அசம்பாவிதம் சுந்தரி வீட்டிலும் நடக்கிறது. இந்தப் பிரச்னையை அந்தக் குடும்பம் எப்படிக் கையாண்டது, ஈஸ்வரன் எடுக்கும் முடிவு என்ன, உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை விவாதிக்கிறது இயக்குநர் S.U.அருண்குமாரின் 'சித்தா'.

சித்தா

பிரதான கதாபாத்திரங்கள் தொடங்கி சின்ன கதாபாத்திரங்கள் வரைக்குமான நடிகர்கள் தேர்வு, அவர்களிடமிருந்து இயல்பான நடிப்பை வாங்கிய விதம் என எல்லா ஏரியாவிலும் பாராட்டைப் பெறுகிறார் இயக்குநர். படம் ஆரம்பித்தவுடன் கதை சார்ந்திருக்கும் நிலம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மைகள் ஆகியவற்றை நிதனாமாக கட்டமைத்த விதம் சிறப்பாக இருந்தது. இதில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு பின்னால் நடைபெறும் பின்னணி காட்சிகளுக்கும் சிரத்தை எடுத்திருந்த விதத்தில் இயக்குநர் குழுவுக்கு பாராட்டுகள்.

'சித்தா'வாக வரும் சித்தார்த் தன் தோளில் முழுபடத்தையும் தாங்கியிருக்கிறார். பள்ளிக் காதலி மீதான தன் காதலை மீட்டெடுக்க உருகுவது, தன் அண்ணன் மகள் மீதும், தன் நண்பனின் அக்கா மகள் மீதும் அன்பு காட்டுவது, பிரச்னைகளுக்கு பின் பதறுவது, உடைந்து அழுவது, மீண்டும் வெகுண்டெழுவது என எல்லா பரிமாணங்களிலும் சபாஷ் போட வைத்திருக்கிறார் சித்தார்த். அதிலும் கண்களில் நிற்கும் கண்ணீருடன், ஆதங்கமும் புன்னகையும் கலந்த அந்த ரியாக்ஷன் மாஸ்டர் கிளாஸ் நடிப்பு... இது சித்தார்த் 2.0!

தமிழில் அறிமுகமாகியிருக்கும் கதாநாயகி நிமிஷா சஜயன், தன்னுடைய எல்லா காட்சிகளிலும் தன் அழுத்தமான நடிப்பை வழங்கி கதைக்கருவிற்கு வலுச்சேர்த்திருக்கிறார். தன் தேர்வை நியாயப்படுத்தியிருப்பதோடு, தமிழ் சினிமாவில் ஒரு நல்வரவையும் நிகழ்த்தியிருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸில் அவருக்கும் சித்தார்த்துக்குமான அந்த உரையாடல் காட்சி ஒன்று போதும். தான் எப்பேர்ப்பட்ட தேர்ந்த நடிகை என்பதை சில நிமிடங்களிலேயே நமக்கு உணர்த்திவிடுகிறார்.

சித்தா

சிறுமிகளாக வரும் குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பும் மிகையின்றி உயிர்ப்போடு இருக்கிறது. முக்கியமாக, சுந்தரியாக நடித்த சஹஸ்ரா கவனிக்க வைக்கிறார். சித்தப்பாவுடனான அவரின் காட்சிகள், வழி தெரியாமல் அப்பாவியாகத் திண்டாடுவது, தோழியுடன் பழகுவது, க்ளைமாக்ஸில் தன் சித்தாவுடன் பேசுவது என எல்லா இடங்களிலும் அத்தனை யதார்த்தம்! அஞ்சலி நாயர், சித்தார்த்தின் நண்பர் வடிவேலுவாக வரும் பாலாஜி, பெண் காவல்துறை அதிகாரி என படம் நெடுக பலரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்துள்ளனர். பலர் புது முகங்களாக இருந்தும் முதிர்ச்சியான நடிப்பை வழங்கி படத்துக்குப் பலம் சேர்க்கின்றனர்.

பாலாஜி சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவும், சுரேஷ் ஏ.பிரசாத்தின் படத்தொகுப்பும் பரபரப்பான இரண்டாம் பாதிக்குக் கைகொடுத்திருக்கின்றன. அதே சமயம் நிதானமாகக் கதைக்களத்தை விவரிக்கும் முதற்பாதிக்கும் ஏற்றவாறு இசைந்து, அதற்கும் உயிர்க்கொடுத்திருக்கின்றன. திபு நினன் தாமஸ் இசையில் யுகபாரதி வரிகளில் ஒலிக்கும் 'கண்கள் ஏதோ' பாடல் காதலைக் கடத்துவதோடு, நம்மை முணுமுணுக்கவும் வைக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை உணர்வுகளின் ஆழத்தையும், பரபரப்பையும் கச்சிதமாகக் காட்சியாக்க உதவியிருக்கிறது. படத்தின் பிரதான கதாபாத்திரமாகவும் பின்னணி இசை பயணிக்கிறது.

பின்னணி இசைக்கு உறுதுணையாக ஒலியமைப்பாளர் வினோத் தணிகாச்சலம் தன் பணியினை சிறப்பாக செய்துள்ளார். மொத்தத்தில் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் தங்களுக்கான பணியை திறம்பட செய்துள்ளனர்.

காட்சி அமைப்பின் சூழலை உயிர்ப்போடு வைத்திருக்கும் யதார்த்ததன்மையை கலை இயக்குநர் சி.எஸ் பாலச்சந்தர் கலை இயக்கத்தில் சிறப்பாக கையாண்டுள்ளார். குறிப்பாக நகராட்சி அலுவலகம் மற்றும் மருத்துவமனை ஆகிய இடங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

சித்தா

தன் மேற்பார்வையில் பணி செய்யும் தூய்மைப் பணியாளரான தன் காதலியிடம் தன் காதலையும் குடும்பச் சூழலையும் சித்தார்த் விளக்கும் காட்சிகளும், தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமையை மனதிற்குள் மறைத்துக்கொண்டு நிமிஷா சஜயன் உடைந்து அழும் காட்சிகளும் எமோஷனலாக சரியாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. காவல்துறையின் விசாரணை தொடர்பான காட்சிகள் யதார்த்தமாக அதேநேரம் ஒரு பரபரப்பையும் கடத்துகின்றன. காவல்துறையும் சித்தார்த்தும் குற்றவாளியை நெருங்கும் ஷேர் ஆட்டோ காட்சித் தொகுப்பு ஒரு த்ரில்லர் படத்திற்குத் தேவையான பக்கவான காட்சியாக மாறியிருக்கிறது.

'குட் டச் - பேட் டச்' குறித்து எளிமையாக குழந்தைகளுக்கு விளக்கும் காட்சி, பொது மக்கள் சிலரால் தூய்மைப் பணியாளர்கள் இழிவுப்படுத்தப்படுவது, அதற்கு நிமிஷா சஜயன் 'மாஸ்' ஆக பதிலடி கொடுப்பது, பாலியல் சுரண்டல்கள் என்பது வல்லுறவு மட்டுமல்ல, அது பெண்களின் தினசரி வாழ்க்கையில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது என்பதைக் கூறும் நிமிஷா சஜயனின் வசனங்கள் என ஒரு புறம் சமூகத்திற்குத் தேவையான தெளிவைத் தெளிவாகவே பேசுகிறது படம். ஆனால், அதே சமயம் சிறுமிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமையின் கோரத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்த வைக்கப்பட்டிருக்கும் அந்த வன்முறை ஷாட்டைத் தவிர்த்து முதிர்ச்சியாகக் கையாண்டிருக்கலாம்.

சித்தா

'குழந்தைகளிடம் மொபைலைக் கொடுக்க வேண்டாம்' என்பதாக கதாநாயகன் அறிவுறுத்துவது அவர் கதாபாத்திரம் சந்தித்த சம்பவங்களின் தாக்கம் என்றாலும் ஒரு விஷயத்தைப் பொதுமைப்படுத்தும் வசனத்தை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். சித்தார்த்தை சிக்கலுக்குள்ளாக்கும் வீடியோவை எடுத்த நபர் அந்த சம்பவத்தையே தட்டிக் கேட்டிருக்கலாமே? அவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்த சித்தார்த்தை நண்பராக வரும் எஸ்.ஐ காப்பாற்றுவது எப்படி என்ற லாஜிக் கேள்விகளை இந்த யதார்த்த சினிமாவில் நிச்சயம் கேட்டாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

பெருங்குற்றம் இழைத்துவிட்டு மீண்டும் அதை விரும்பும் சித்தார்த்திடம் நிமிஷா பேசும் அந்தக் காட்சிதான் இந்தப் படத்தின் அடிநாதம். ஒரு பாலியல் வன்முறை குற்றத்தை பெண் எப்படி பார்க்கிறாள், ஆண் எப்படி அணுகுகிறான் என்ற தெளிவான பகுப்பாய்வு அந்தக் காட்சியில் வீரியத்துடன் வெளிப்படுகிறது. நிமிஷாவின் வசனங்களும் நடிப்பும் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதியாக அவரை மாற்றி ஆண்களின் கோபத்தை கேள்வி கேட்க வைக்கின்றன.

சித்தா

ஒரு தேர்ந்த இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் அந்த இடத்தில் ஜொலிக்கிறார் S.U.அருண்குமார். ஆனால், அங்கேயே முடிந்திருக்க வேண்டிய கதையை, உப க்ளைமாக்ஸ் என்பதாக வழக்கமான காட்சியை வைத்தது ஏன் என்பது புரியவில்லை.

இதனாலேயே நிமிஷா பேசும் வசனங்கள் கடைசியில் அதன் வீரியத்தை இழந்து நிற்கின்றன. இந்தக் குழப்பங்கள், லாஜிக் மீறல்களை எல்லாம் மீறி இரண்டாம் பாதி முழுவதும் ஒரு பரபரப்பையும், 'அடுத்த காட்சி என்ன?' என்பதற்கான ஆர்வத்தையும் படம் கடத்தியிருக்கின்றது.

சித்தா
பாதிக்கப்பட்டவர்களின் தவிப்பை பார்வையாளர்களுக்கும் கடத்தியதோடு, சித்தார்த்திற்கும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான காட்சிகளால் நம்மையும் அன்புடன் அரவணைத்துக் கொள்கிறான் இந்த 'சித்தா'.


from விகடன்

Comments