Dhruva Natchathiram: மலேசியாவில் இசை வெளியீடு, இறுதி செய்யப்பட்ட ரிலீஸ் தேதி - உண்மை நிலவரம் என்ன?

கௌதம் மேனனின் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படம், வருகிற ஜூலை 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நமது அப்டேட்டில் கூட, 'தங்கலான்' படத்திற்கு முன்னதாகவே இந்தப் படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று சொல்லியிருந்தோம். இது குறித்து விசாரித்ததில் கிடைத்த கூடுதல் தகவல்கள் இனி...
Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

சீயான் விக்ரம் இப்போது பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு முன்னரே அதாவது கடந்த 2017லேயே 'துருவ நட்சத்திரம்' படத்தைத் தொடங்கிவிட்டனர். முதற்கட்டப் படப்பிடிப்பு துருக்கியில் நடந்தது. விக்ரம், ராதிகா, ரிதுவர்மா, சிம்ரன் எனப் பலரின் காம்பினேஷனில் காட்சிகள் படமாக்கப்பட்டன.

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்

இந்தப் படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் சொன்னார் கௌதம் மேனன். த்ரில்லர் ஜானரான இந்தக் கதை அவருக்குப் பிடித்திருந்தாலும், 'அண்ணாத்த' போல குடும்பக் கதைகளில் நடிக்க விரும்பி, இதில் நடிக்காமல் விட்டுவிட்டார். அந்தக் கதையில்தான் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உட்படப் பலரும் நடித்துள்ளனர்.

துருக்கியில் நடந்த முதல் ஷெட்யூலைத் தொடர்ந்து வேறு சில நாடுகளிலும் படப்பிடிப்பு நடந்தது. விக்ரம் இதில் துருவா, ஜான், ஜோஸ்வா எனப் பல கெட்டப்களில் நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ரிதுவர்மா நடித்துள்ளார். 'தங்கலான்' படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே, இதற்கான டப்பிங்கையும் பேசிக் கொடுத்துவிட்டார் விக்ரம்.

விக்ரமின் பிறந்த நாள் அன்று, இயக்குநர் கௌதம் மேனன், 'துருவ நட்சத்திரம்' இரண்டு பாகங்களாக வெளிவருகிறது என்றும் இது சாப்டர் ஒன் எனவும், 'யுத்த காண்டம்' எனவும் குறிப்பிட்டு இருந்தார். அதனால், இப்போது வெளியாகும் சாப்டர் ஒன்னில் ஆக்‌ஷன் தூக்கலாக இருக்கும் என்கிறார்கள்.

Dhruva Natchathiram | துருவ நட்சத்திரம்
படத்தின் புதிய டீசர், வருகிற 17ம் தேதி வெளியாகிறது. அதற்கு அடுத்த நாளான ஜூன் 18ல் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கச்சேரி மலேசியாவில் நடக்கிறது, அதில் படத்தின் இரண்டு பாடல்களை வெளியிடுகிறார்கள். கிட்டத்தட்ட இசை வெளியீட்டு விழா போலவே இது நடக்கவிருக்கிறது.

படம் ஜூலை 14ல் வெளியாவதால், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் படத்தை முன்னதாகவே பார்த்து வருகிறார்கள். முதற்கட்டமாக 'லியோ' தயாரிப்பாளர் லலித் படத்தைப் பார்த்துவிட்டார். அவரது நிறுவனம் தமிழக உரிமையை வாங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீஸ் தேதி உறுதியாகிவிட்டதால், போஸ்ட் புரொடக்‌ஷனில் இன்னும் மெரூகேற்றிவருகிறார் கௌதம் மேனன்.



from விகடன்

Comments