பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபின் காரைக் குறிவைத்து மும்பையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குற்றவாளிகளுக்கு அவர்களுடைய மொழியிலேயே தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசியிருக்கிறார்.

ஏக்நாத் ஷிண்டே, நடிகர் டைகர் ஷெராஃபையும் அவரது தாயார் ஆயிஷா ஷெராஃபையும் சந்தித்து ஆறுதல் கூறினார். இத்துப்பாக்கிச் சூட்டில் காரின் கண்ணாடிச் சில்லுகள் பட்டு டைகர் ஷெராஃபின் இடது கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றி ஏக்நாத் ஷிண்டே, "டைகர் ஷெராஃபின் காரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகவும் கவலைக்குரியது; அத்தோடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக மும்பை காவல் ஆணையரிடம் பேசியுள்ளேன். குற்றவாளிகளைப் பிடிக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்களுக்குப் புரியும் சொந்த மொழியிலேயே தகுந்த பதிலடி வழங்கப்படும்.
மும்பையையும், இங்குள்ள மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே நமது முதன்மை நோக்கம். அது பிரபலங்களாக இருந்தாலும் சரி, சாதாரணக் குடிமக்களாக இருந்தாலும் சரி, அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.

இதில் எந்தவித மெத்தனப் போக்கும் பொறுத்துக்கொள்ளப்படாது. 1990-களில் இதுபோன்று நடந்த கேங் வார் சம்பவங்களை மும்பை காவல்துறை எப்படி இரும்புக்கரம்கொண்டு அடக்கியதோ, அதேபோன்றுதான் இப்போதும் நடவடிக்கை இருக்கும்.
மும்பையில் மீண்டும் நிழல் உலக தாதாக்களின் அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைக்கும் எந்தவொரு கும்பலும் இருமுறை யோசிப்பது நல்லது" எனப் பேசியிருக்கிறார்.
இச்சம்பவத்திற்குக் காரணமான நபர்களைப் பிடிக்க மும்பை காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
from விகடன்
Comments