எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் 'லிங்கம்' வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
80களில் குமரியில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து எழுத்தாளர் பா. ராஜநாராயணன், ஜூனியர் விகடனில் 'லிங்கம்' என்கிற தலைப்பில் தொடர்கதை எழுதினார். அதைத் தழுவித்தான் இந்த 'லிங்கம்' சீரிஸ் எடுக்கப்பட்டிருக்கிறது.

கதிர், திவ்யபாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் மிளிர, நடிகர் போஸ் வெங்கட்டும் நல்லதொரு பெர்பார்மென்ஸை இந்தச் சீரிஸுக்குத் தந்திருக்கிறார். 'லிங்கம்' சீரிஸுக்காகப் போஸ் வெங்கடை பேட்டி கண்டோம்.
லிங்கம் சீரிஸுக்கும், அதில் நடித்திருக்கும் உங்களுக்கும் எப்படியான பாராட்டுகள் கிடைத்து வருகின்றன?
"முக்கியமா, பத்திரிகையாளர் தரப்பிலிருந்து சீரிஸுக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சிட்டிருக்கு. அதை எனக்கு ரொம்ப முக்கியமானதாகப் பார்க்கிறேன். 'இந்த வெப் சீரிஸ், தியேட்டரில் சினிமா பார்த்த எஃபெக்ட்டை அப்படியே கொடுக்குது'ன்னு பத்திரிகையாளர்கள் பலரும் பாராட்டினாங்க.
சினிமா நண்பர்களும் எனக்கு அப்ரிசியேஷன் கொடுத்துட்டு இருக்காங்க. நானும் ஏற்கெனவே 'லிங்கம்' கதையைப் படிச்சிருக்கேன். அவரைப் பத்தின பல விஷயங்களையும் கேள்விப்பட்டிருக்கேன். அதை ஒரு தொடரா பார்க்கும்போது உண்மையிலேயே பிரமிப்பா இருக்கு.
ஒரு மனுஷன் எப்படி இவ்வளவு துணிச்சலா இருந்திருக்க முடியும்னு ஆச்சரியமாகவும் இருந்தது. எப்போதுமே எழுத்து வடிவம் வேறு. அதைத் திரைவடிவமா படம் பிடிப்பது வேறு. அதை நான் 'ஆட்டோ சங்கர்' கதையில நடிக்கும்போதே உணர்ந்தேன். அவருடைய வாழ்க்கை குறிப்பை முழுமையா படிச்சிட்டுத்தான் நடிச்சேன். ஆனா, படிச்சப்ப கிடைச்ச தாக்கத்தை விட, கேமரா முன்னாடி நடிக்கும்போது வேறு மாதிரி இருந்தது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, 'லிங்கம்' கதை முழுவதுமே உண்மைச் சம்பவம்தான். இன்னைக்கு உலகத்துல இருக்குற எல்லாருமே ஏதோ ஒரு காலகட்டத்துல, ஏதோ ஒரு சூழலால தள்ளப்படுறாங்கங்கிறதுதான் உண்மை. அது லிங்கத்துக்கும் நடந்திருக்கு. அதைப் படமா பார்க்கும்போதுதான் அந்தச் சூழலை முழுமையா நம்மால் உணர முடியும்."

'லிங்க'த்தில் உங்களுக்குப் பழக்கப்பட்ட அதே வில்லன் கதாபாத்திரம்தான். இக்கதாபாத்திரத்திற்குத் தயாராகும் முறை எப்படி இருந்தது?
"ஒரு புத்தகம் படிக்கும்போது நமக்குள்ள ஒரு தனி உணர்வு கடத்தப்படும். அப்படி 'லிங்கம்'ல என்னுடைய கேரக்டரைப் படிக்கும்போது, 'என்ன இவன் இப்படி பண்றானே'ன்னு அவன் மேல பயங்கர கோபம் வந்தது. ஆனா காலப்போக்குல அதே கேரக்டர்ல நடிக்கும்போது, நாம படிச்சப்ப என்ன உணர்வை உள்வாங்கினோமோ, அதைத்தான் பார்க்கிறவங்களுக்கும் கடத்தணும்.
அதற்கேற்ப நான் ரெடியானேன். லட்சுமி சரவணக்குமார் சார் அடிப்படையில் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர். அவருடைய எழுத்துல எப்போதுமே ஒரு வீரியம் இருக்கும். 'லிங்கம்' சீரிஸை மக்கள் இந்தளவுக்குப் பிரமாண்டமா பேசுறதுக்கு அவருடைய எழுத்தின் வீரியம்தான் காரணம். இலக்கியப் பின்னணி கொண்டவரால மட்டும்தான் இதைச் செய்ய முடியும்.
சொல்லப்போனால், படப்பிடிப்புத் தளத்துல காட்சிகளை நமக்கு சொல்லிக் கொடுக்கும்போதே, அந்த கேரக்டரோட 100% உணர்வுகளை நமக்குள்ள ஈஸியா கடத்திருவாரு. 'லிங்கம்' சீரிஸ்ல வர்ற கேரக்டர் முற்றிலும் மாறுபட்டது. நல்லவனா இருந்துகிட்டே வில்லத்தனம் செய்வது வேறு. நல்லவன் மாதிரியே நடிச்சு ஏமாத்தி அப்புறம் கெட்டவனா மாறுவது வேறு.
முகத்துல எவ்வளவுதான் நல்லவனை வெளிக்காட்டினாலும், அந்த வஞ்சகம் தெரிஞ்சுகிட்டே இருக்கணும். அதை நாங்க முக்கியமாக மெயின்டைன் பண்ணோம்."
நிறைய வில்லன் கேரக்டர் நடித்துவிட்டீர்கள், நடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்... தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடிப்பதால் என்றைக்காவது உங்களுக்கு அயர்ச்சி உண்டாகியிருக்கிறதா?
"நிறைய வில்லன் கேரக்டர் பண்றதால எனக்கு எந்த அயர்ச்சியும் வர்றதில்லை. ஏன்னா, நான் பண்ற ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர் இருக்க மாட்டாங்க. பாசிட்டிவ், நெகட்டிவ் தாண்டி கதாபாத்திரங்களை முழுமையா உணர்ந்து நடிக்கும்போது எல்லாமே புதுசுதான்.
'அய்யய்யோ நிறைய நடிச்சுட்டோம், திருப்தியாயிட்டோம்' என்ற எண்ணம் எனக்கு வர்றதே இல்லை. ஒவ்வொரு கேரக்டர்லயும் புதுசா ஏதாவது பண்ணிட மாட்டோமான்ற தேடுதல் எனக்குள்ள தொடர்ந்து நடந்துகிட்டேதான் இருக்கு. ஆனால், எனக்கு வெப் சீரிஸ் ஃபார்மட் ரொம்பப் புதுசு.
இதோட ஆடியன்ஸும் புதுசுதான். விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்புல, 'லிங்கம்' சீரிஸைத் தொடர்ந்து, 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' சீரியஸிலும் நடிச்சிட்டு வர்றேன். அதனுடைய ஒன்-லைன் கேட்கும்போதே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது."

சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில், 'லிங்கம்' உங்களுக்கு முக்கியமான ப்ராஜெக்ட்டாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்தளவிற்கு இந்த சீரிஸில் உங்களுக்குத் திருப்தியளித்த விஷயம் என்ன?
"ஒரு நடிகராக நமக்கு ஒரு படத்துல 72 சீன் இருந்தாலும், நாம நடிக்கும் போதே நமக்குள்ள ஒரு உணர்வுபூர்வமான திருப்தி கிடைக்கணும். நடிக்கிறதுக்கு ஒரு நல்ல ஸ்கோப் கிடைச்சா அதை நாம கொண்டாடுவோம். எனக்கு அது இந்த 'லிங்கம்' சீரிஸ்ல கிடைச்சது.
இவ்வளவு நாட்கள்ல எனக்குப் பல வெற்றிப் படங்கள் அமைஞ்சிருந்தாலும், தற்போதைய காலகட்டத்துல 'லிங்கம்' எனக்கு முக்கியமான ப்ராஜெக்ட். அதுபோக இயக்குநர் லக்ஷ்மி சரவணக்குமார், நடிகர் கதிர், பிரசாந்த் பாண்டியராஜ் ஆகியோருடன் இணைந்து வேலை பார்த்ததும் மனநிறைவான அனுபவம்.
நான் தொடக்கத்திலிருந்தே ஹீரோ, வில்லன்னு நிறைய கேரக்டர்ஸ் பண்ணிட்டு இருக்கேன். 'மெட்டி ஒலி' காலத்திலிருந்தே கேரக்டர் ரோல்ஸும் பண்ணிட்டு இருக்கேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அந்த வயதுக்கு ஏத்த மாதிரியான கேரக்டர்ஸ்தான் வரும். 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' மற்றும் 'லிங்கம்' இரண்டுமே என் வயதுக்கான கதாபாத்திரங்கள்."
அடுத்து எப்போ டைரக்ஷன்?
என்னுடைய அடுத்த டைரக்ஷன் படத்துக்கான வேலைகளெல்லாம் முடிஞ்சிருச்சு. ரொம்ப சீக்கிரமே அது குறித்த அறிவிப்பு வரும். நிச்சயமா என்னுடைய படம் மக்களுக்கு ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் சொல்ற கன்டென்டை கொண்டதாகத்தான் இருக்கும். இந்தத் தடவை படத்துல நீர் பகிர்வு அரசியல் பற்றிப் பேசியிருக்கிறேன்.

முன்பிருந்தே உங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாகப் பேசி வருகிறீர்கள். அப்படி நீங்கள் பேசிய விஷயங்கள் எதுவும் உங்கள் வாய்ப்புக்குத் தடையாக மாறியிருக்கிறதா?
"நான் ஓப்பனா அரசியல் பேசுறதால சினிமா வாய்ப்புகள் தவறுவது நடக்கும்தான். ஆனா, அதெல்லாம் நமக்குக் கண்ணுக்குத் தெரியாம பின்னால நடக்குற விஷயங்கள். ஒருவேளை நான் அமைதியா இருந்திருந்தா இந்நேரம் இன்னும் ஒரு நாலு படங்கள் கூடுதலாக நடிச்சிருக்கலாம்.
'இப்பதான் விஜய் பற்றிப் பேசியிருக்காரு, அவரோட ரசிகர்கள் கோவிச்சுப்பாங்க, இவரைப் போட வேண்டாம்'னு தவிர்க்கிற தயாரிப்பு நிறுவனங்களும் உண்டு. அந்தப் படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோகூட விஜய் ரசிகராக இருக்கலாம். நான் நடிப்பையும் அரசியலையும் தனித்தனியாகத்தான் பார்க்கிறேன். ஆனா இண்டஸ்ட்ரியில பல பேர் அப்படிப் பார்க்கிறது இல்லை."

தவெக ஆட்சி எப்படி இருக்கிறது? உங்கள் கருத்து....
"ஒரு புதிய ஆட்சி வந்தால் மாநிலத்தில் ஒரு செழிப்பு நடக்கிறது நமக்கே தெரியும். ஆனா இதுவரைக்கும் அந்த மாதிரி எதுவுமே நடக்கல. இப்போ யாரெல்லாம் இவரை வரவச்சாங்களோ, அவங்க அனைவரும் அமைதியாகிட்டாங்க. ஏன்னா, கடந்த ஒன்றரை மாதத்துல தமிழகத்துல பாலியல் வகொடுமைகள், கொலைகள், ஆணவக்கொலைகள் நிறைய நடந்திருக்கு.
சட்டம் ஒழுங்கு அந்தளவுக்குச் சீர்கெட்டுப் போயிருக்கு. தவெக, திமுக-வின் ஐந்து வருஷ ஆட்சியை விமர்சிச்சு ஓட்டுக் கேட்கும்போதே, பாலியல் வன்கொடுமைகள் நூறைத் தாண்டிடுச்சுன்னுதான் பேசினாங்க. ஆனா இவங்க வந்த ஒன்றரை மாசத்துக்கே அது இருநூறைத் தொடப் போகுது.
அதுமட்டுமில்ல, இப்போ போதைப்பொருளுக்காகக் கைது ஆகுற பாதி பேர் தவெக கட்சியைச் சேர்ந்தவங்களாகத்தான் இருக்காங்க. பாலியல் வன்கொடுமைகள்ல பிடிபடுற 175 பேர்ல 100 பேரு தவெக இளைஞர்கள்தான்.
உதாரணத்துக்கு, தாம்பரம் எம்.எல்.ஏ சரத்குமார், 500 ரூபாய் நோட்டு, செல்போன், மாத்திரை, ஏடிஎம் கார்டுன்னு பிடிபடுகிறார். இவங்கதான் போதைப்பொருளை ஒழிக்கப் போறாங்களா? வாச்சாத்தி வன்கொடுமையை விட ஒரு மோசமான வன்கொடுமை இருக்க முடியுமா? அப்படிப்பட்ட செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில இருக்கும்போது அவர் மேல எத்தனை ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தன.
அவரை வச்சுக்கிட்டு ஊழல் இல்லாத ஆட்சியை இவங்க அமைச்சிடுவாங்களா? விஜயபாஸ்கரை கட்சியில சேர்க்கிறதும், அதிமுக-விலிருந்து எம்.எல்.ஏ-க்களைத் தூக்குறதும் ஊழலற்ற ஆட்சிக்கா? அதிமுக-வோட பழைய அமைச்சர்களையும் எம்.எல்.ஏ-க்களையும் வச்சுக்கிட்டு எப்படி ஊழல் இல்லாத ஆட்சி நடத்த முடியும்? அதுக்கு ஆதவ அர்ஜுனா முக்கிய புள்ளியா இருக்க போறாரா?
ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட நிர்மல்குமாரை வச்சுக்கிட்டு மதச்சார்பற்ற ஆட்சி நடத்த முடியுமா? மொத்தத்தில் அது ஒரு குளறுபடியான கட்சி. கட்சியே அப்படி இருக்கும்போது அவங்க ஆட்சி மட்டும் எப்படிச் சிறப்பா இருக்கும்? இப்போ மக்கள் தப்பு பண்ணிட்டோம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால இடைத்தேர்தல்ல விசில் சின்னம் ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா பண்ணின தொகுதிகள்ல தவெக மிகப்பெரிய அடியைச் சந்திக்கும்ங்கிறது உறுதி!
from விகடன்
Comments