'கிழக்குச் சீமையிலே' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர் நடிகர் விக்னேஷ்.
கடந்த சில வருடங்களாக சீரியல் பக்கமும் இவர் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 'கனா கண்டேனடி' சீரியலில் வில்லனாக நடித்து வருகிறார். 'கனா கண்டேனடி' சீரியல் அனுபவங்களைக் கேட்க அவரைப் பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசியவர், "நிஜ வாழ்க்கையிலும், சினிமாவிலும் எல்லாரும் என்னை "ரொம்ப சாஃப்ட், இன்னெசன்ட், நல்லவன்" என்றுதான் சொல்வார்கள். படங்களிலும் அப்படியான கதாபாத்திரங்களில்தான் நடித்தேன்.
ஆனால், எனக்குள் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. சினிமாவில் அதற்கான வாய்ப்புக் கிடைக்காதபோதுதான், விகடன் தயாரிப்பில் 'கனா கண்டேனடி' சீரியலில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருப்பதாகக் கூப்பிட்டார்கள்.
நெகட்டிவ் ரோல் வேண்டாமே என்று வீட்டில் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், எனக்குள் இருந்த ஆசையால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நான் நினைத்ததை விட அந்தக் கேரக்டருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. சமீபத்தில் நான் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் என்னிடம் பேசவே பயந்தார்கள். "ஏன் சார் காவியாவை அப்படி டார்ச்சர் பண்றீங்க?" என்று கேட்டார்கள்.
வெளியில் போகும் இடங்களிலெல்லாம் மக்கள் அதைப்பற்றிக் கேட்கிறார்கள். வீட்டில் நான் சண்டையே போடாத சாஃப்ட் கேரக்டர் என்பதால், டிவியில் என் வில்லத்தனத்தைப் பார்த்து என் மனைவியே ஆச்சரியப்பட்டுப் போனார்" என்றார் உற்சாகத்துடன்.

அவருடைய சினிமா பயணத்தில் ஏற்பட்ட விஷயங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டவர், "ஒரு வெற்றியை நாம் தக்கவைத்துக்கொள்வது மிக முக்கியம். ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த வெற்றியை நான் கொண்டாடினேனே தவிர, அதை அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை.
அந்தச் சமயத்தில் எனக்கு வழிகாட்ட யாருமே இல்லை. அதுவே எனக்குப் பெரிய மைனஸ் ஆகிவிட்டது. சென்னைக்கு வந்த புதிதில் எனக்குத் தங்க இடமில்லை. தெரிந்தவர்களும் யாரும் இல்லை. என்னுடைய உழைப்பாலும் முயற்சியாலும்தான் எல்லாவற்றையும் உருவாக்கிக்கொண்டேன்.
இப்போது இருக்கும் உறவுகள், நண்பர்கள் என எல்லாமே நானாகத் தேடிக்கொண்டதுதான்" என்றவர், "ஒருமுறை அஜித், விஜய் மற்றும் என் பெயரைப் போட்டு, 'அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு இருக்கிறது' என்று எழுதினார்கள். ஆனால், அப்போது எனக்கு இது புரியவில்லை. 'கிழக்குச் சீமையிலே' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, பல தயாரிப்பாளர்கள் என்னிடம் அட்வான்ஸ் கொடுத்தார்கள்.
100, 1000 ரூபாய்க்கே கஷ்டப்பட்ட எனக்கு அது மிகப்பெரிய தொகையாகத் தெரிந்ததால், அது நல்ல கதையா, பெரிய இயக்குநரா என்று யோசிக்காமல் செய்துவிட்டேன்.
'சின்னத்தாயி', 'கிழக்குச் சீமையிலே' படங்கள் பெரிய ஹிட்டான பிறகு, பெரிய இயக்குநர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் என்னை அணுகியபோது, என்னால் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது. முன்பே அட்வான்ஸ் வாங்கிப் படங்களை ஒப்புக்கொண்டதால், பெரிய வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டேன்" என்றார்.

மேலும் பேசியவர், "சமீபத்தில் விஜய்யின் 'லியோ' திரைப்படத்தில் என்னுடைய 'தாமரை பூவுக்கும்' பாடல் திடீரென ஒலித்தபோது எனக்கு பெரிய சர்ப்ரைஸாக இருந்தது.
விஜய் சார் தன் திரையுலகில் சூர்யா மற்றும் எனக்கு மட்டும்தான் பாடியிருக்கிறார். இப்படி ஒரு புதிய படம் மீண்டும் எனக்கு பெயர் வாங்கித் தந்தது" என்றார்.
from விகடன்
Comments