"பொம்மையாகச் செயல்பட முடியாது" - நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜிநாமா செய்த ஸ்வேதா மேனன்!

மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பில் 31 ஆண்டுகளாக நடிகர்கள் மட்டுமே கோலோச்சி வந்தனர். இதற்கிடையே நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீப் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து விரிவான தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து  அம்மா அமைப்பில் பிரச்னை ஏற்பட்டது. நடிகர் மோகன்லால் தலைமையிலான நிர்வாகக்குழு கூண்டோடு ராஜிநாமா செய்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் நடைபெற்ற நடிகர்கள் சங்க தேர்தலில் புதிய தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வுசெய்யப்பட்டார். அம்மா அமைப்பின் முதல் பெண் தலைவராக ஸ்வேதா மேனன் பதவியேற்றார். இதற்கிடையே அம்மா அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக பதவியேற்ற 10 மாதங்களில் ராஜிநாமா செய்துள்ளார். அத்துடன் பொதுச் செயலாளர் குக்கூ பரமேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினரும் ராஜிநாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்தபின்னர் ஸ்வேதா மேனன் கூறுகையில், "நானும் எனது 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளோம். திட்டமிட்டே எங்களை வெளியேற்ற சிலர் சதி செய்துள்ளனர். முன்னரே தயார் செய்யப்பட்ட ஒரு அஜெண்டாவைப் பயன்படுத்தி, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து எங்களை வேட்டையாட முயன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைகளுக்கு மீண்டும் சங்கத்தைக் கொண்டு செல்லும் முயற்சியே இது.

நடிகை ஸ்வேதா மேனன்

நிர்வாகக் குழுவில் நாங்கள் வெறும் பொம்மைகளாகச் செயல்பட வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். எனக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளத்தைப் அடகு வைத்துவிட்டு, ஒரு பொம்மையாகச் செயல்பட்டு சங்கத்தை வழிநடத்த முடியாது. அதனால்தான், சுயமரியாதையுடன் பதவியிலிருந்து விலகுகிறேன். ​சங்கத்தின் தற்போதைய நெருக்கடிக்கு, நிர்வாகக் குழுவின் பொருளாளர் உன்னி சிவபால் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் திடீரென தலைமறைவானதே காரணம். கடந்த மே 1-ம் தேதி, எந்த முன்னறிவிப்போ அல்லது மெயில் தகவலோ இன்றி பொருளாளர் காணாமல் போனது பெரும் சிக்கல்களை உருவாக்கியது.

நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஸ்வேதா மேனன்

முந்தைய நிர்வாகக் கமிட்டியில் பாபுராஜ் செய்த பல காரியங்களில் பெரும் குளறுபடிகள் உள்ளன. சங்கத்தின் கண்ணியத்தைக் கருதி இதுவரை அமைதி காத்து வந்தேன். ஆனால், நான் இப்போது அம்மா சங்கத்தில் இல்லை. எனவே இனி அத்தனை விஷயங்களையும் ஊடகங்களுக்கு முன்னால் வெளிப்படையாகப் பேசப்போகிறேன்.​ பெண்களின் தலைமைக்குச் சவால் விடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதுபோன்ற ஆதிக்க மனப்பான்மையுடனான அமைப்பில் தொடர்வதில் அர்த்தமில்லை" என்றார்.



from விகடன்

Comments