Vijay: "அப்போ விஜய் - லைலா வச்சு ரெண்டு சாங் ஷூட் பண்ணிட்டோம்" - 'போராளி' திலீபன் பேட்டி

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் 'மூன்று முடிச்சு' சீரியலில் அசோகன் கதாபாத்திரத்தில், ரகளையான நடிப்பைக் கொடுத்து வருகிறார் நடிகர் 'போராளி' திலீபன். சமுத்திரக்கனி இயக்கிய படங்கள் மூலம் இவர் நமக்கு நடிகராக அத்தனை பரிச்சயம்.

சினிமா, சீரியல் என நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் இயக்குநராகும் கனவோடுதான் சென்னைக்கு வந்திருக்கிறார். அப்படி சினிமாவுக்கு வந்தவர், தொடக்கத்தில் இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஒரு காலை வேளையில், பரபரப்பான 'மூன்று முடிச்சு' சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இவரைப் பேட்டி கண்டோம்.

Poraali Dileepan
Poraali Dileepan

போராளி திலீபன், "'போராளி', 'அப்பா', 'தொண்டன்'னு இதுவரைக்கும் 40 படங்களில் நான் நடிச்சுட்டேன். ஆனா, அந்தப் படங்கள் எனக்கு ஏற்படுத்தித் தராத ரீச் எனக்கு இந்த 'மூன்று முடிச்சு' சீரியல் ஏற்படுத்தித் தந்திருக்கு.

எங்கே போனாலும், மக்கள் என்னை அடையாளப்படுத்தி 'ஷார்ப்பு மாமா'னு சொல்லும்போது பெரும் திருப்தி கிடைக்குது. சில குழந்தைகள் 'ஷார்ப்பு மாமா'னு இழுத்துச் சொல்லி என்னை மாதிரியான பாடி லாங்குவேஜ் பண்ணிக் காட்டுவாங்க. இதெல்லாம் பார்க்குறப்போ கண்ணு கலங்கும்!" என்றவர், "இதுக்கு முன்னாடி ஜீ தமிழ் சேனல்ல 'சத்யா' சீரியல் பண்ணினேன். அதுக்கு எனக்கு நல்ல ரீச் தந்தது. இப்போ, இந்த அசோகன் கேரக்டர் நல்லபடியாகப் போயிட்டு இருக்கு.

என்னுடைய கேரக்டர் சாதாரணமானதுதான். எங்களுடைய இயக்குநரும், ரைட்டரும் சேர்க்கிற விஷயங்கள்தான் கலகலப்பாக மாத்துச்சுனு சொல்லலாம். அதுகூட எங்க சீரியல் டீமோட பங்களிப்பும் முக்கியம்ங்க! நியாஸ் கான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ஏன்னா, அவரைப் பார்த்துதான் நான் வொர்க் அவுட் பண்ணனும்ங்கிற எண்ணத்துக்கே வந்தேன்.

அது மாதிரி ஸ்வாதியும் அற்புதமான நடிகை. என் மாமியாராக நடிக்கிற ப்ரீத்தி மேம் பத்தியும் சொல்லணும். இப்போதும், காலையில 4 மணிக்கு எழுந்து ரொம்ப தூரத்துல இருந்து ஷூட்டுக்கு வர்றாங்க.

அதே மாதிரி, சீரியல்ல என்னுடைய மனைவியாக வர்ற கிருத்திகாவும் நான் காமெடிக்கான விஷயங்கள் பண்றதுக்கு இடம் கொடுக்கிறாங்க. ஒரு முறை என்னுடைய மனைவி என்னுடைய தலையில அடிச்சாங்க. நான் என்னடானு திரும்பி பார்த்து அவங்களை முறைச்சு பார்த்தேன்.

அப்போ அவங்க 'சீரியல்ல மட்டும் அடி வாங்குறீங்க, இங்கையும் வாங்குங்க'னு ஜாலியாகச் சொன்னாங்க" எனப் பலமாகச் சிரித்தவர் அவருடைய சினிமா பயணம் குறித்து விவரிக்கத் தொடங்கினார்.

Poraali Dileepan
Poraali Dileepan

"ஊர்ல இருந்து சென்னைக்குக் கிளம்பி வந்த நான் முதல்ல சீரியல்லதான் உதவி இயக்குநராகப் பயணத்தைத் தொடங்கினேன். அங்கதான் சமுத்திரக்கனி சாருடைய நட்பும் கிடைச்சது.

பிறகு, அங்கிருந்து விக்ரமன் சார்கிட்ட உதவி இயக்குநராகச் சேர்ந்து 'வானத்தைப் போல', 'உன்னை நினைத்து' என ரெண்டு படங்களில் வேலை பார்த்தேன். நான் விக்ரமன் சார்கிட்ட வேலைக்குச் சேர்ந்ததே பெரிய கதைங்க! அவர் உதவி இயக்குநர் தேடிட்டு இருக்கார்னு எனக்கு தகவல் சொன்னாங்க.

முயற்சி செய்து பார்ப்போம்னு போனேன். அங்க 1000 பேருக்கு மேல இருந்தாங்க. பிறகு விக்ரமன் சார் வச்ச டெஸ்ட்ல கடைசில நான்கு பேர் ஷார்ட்லிஸ்ட் ஆனோம். பிறகு அதுல இருந்து என்னையும் இன்னொருவரையும் செலக்ட் பண்ணினாங்க.

இப்போ சமீபத்துல விக்ரமன் சார் 'உன்னை நினைத்து' படத்துல விஜய் சார் நடிச்ச ஃபுட்டேஜஸ் விட்டிருந்தாரு. அது மாதிரி நாங்க இன்னொரு சாங்கும் விஜய் சார் - லைலா வச்சு ஷூட் பண்ணினோம்.

மற்றொரு பக்கம், சமுத்திரக்கனி சார் 'நிறைஞ்ச மனசு' பண்ணும்போது, அவர்கிட்ட கோ டைரக்டராகவும் வொர்க் பண்ணினேன். அந்தப் படத்திலேயே ஒரு சீன்ல என்னை அவர் நடிக்க வச்சாரு.

Poraali Dileepan in Moondru Mudichu Serial
Poraali Dileepan in Moondru Mudichu Serial

அங்கேயே நான் நடிகனாகிட்டேன்னு சொல்லலாம். பிறகு, 'போராளி', 'அப்பா'னு எங்களுடைய பயணம் தொடர்ந்துச்சு. இதற்கிடைப்பட்ட சமயத்துல நான் சொந்தமாக படம் டைரக்டர் பண்றதுக்கும் முயற்சிகள் பண்ணினேன்.

ஆனா, அது எதுவும் நான் நினைச்ச மாதிரி கைகூடி வரல. இதுவரைக்கும் ஐந்து முறை ஆபீஸ் போட்டு படம் டிராப் ஆகிடுச்சு. இப்பவும் அந்த ஆசை எனக்குள்ள நடக்கும்னு நம்புறேன், பார்ப்போம்!" எனப் பேச்சுக்கு ஓரிரு நொடிகள் இடைவேளை விட்டவர், "இப்போ சீரியல்ல நான் நடிக்கிறதைப் பார்த்துட்டு சிலர் 'ஏன் சினிமாவுல வாய்ப்பில்லாம சீரியல் பக்கம் வந்துட்டீங்களா'னு பேசுறாங்க. ஆனா, அதெல்லாம் கிடையாதுங்க, எல்லாமே நடிப்புதான்!" என்றார்.



from விகடன்

Comments