Varanasi: "என் அப்பா சொன்னதைச் செய்திருக்கிறேன்!" - மகேஷ் பாபு

மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு 'வாரணாசி' எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டைட்டில் டீசருக்கே ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட நிகழ்வை நடத்தியிருக்கிறது படக்குழு.

Varanasi Movie
Varanasi Movie

மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள்.

பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.

"உங்களை சந்தித்து ரொம்ப நாட்களாகிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் சாதாரணமாக உங்களிடம் வருவேன் என்று சொன்னேன். ஆனால், இயக்குநர் ராஜமெளலி இப்படி சிறப்பாக உங்களை என் முன் கொண்டு வந்திருக்கிறார்.

என் தந்தை கிருஷ்ணா எப்போதும் என்னிடம் ஒரு விஷயத்தை கேட்பார். 'நீ ஒரு புராணக் கதாபாத்திரத்தில் நடிப்பதைப் பார்க்க விரும்புகிறேன்.' எனச் சொல்லிக் கொண்டேயிருப்பார். இப்போது அவர் சொன்னதைச் செய்திருக்கிறேன்.

அவருடைய ஆசீர்வாதங்கள் எப்போதும் நம்மோடு இருக்கின்றன. இது என் கனவுப் படம். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழும் விஷயத்தைப் போன்றது இது . இதற்காக நான் கடினமாக உழைப்பேன். அனைவரையும் பெருமைப்படுத்துவேன்.

Rajamouli and Mahesh Babu
Rajamouli and Mahesh Babu

மிக முக்கியமாக, என் இயக்குநர் ராஜமெளலியை பெருமைப்படுத்த கடினமாக உழைப்பேன். 'வாரணாசி' வெளியானதும், இந்தப் படத்தைப் பார்த்து இந்தியாவே பெருமைகொள்ளும். இது வெறும் தலைப்பு அறிவிப்பு மட்டுமே.

உங்கள் ஆதரவு எப்போதும் எனக்கு வேண்டும். நீங்கள் காட்டும் அன்புக்கு 'நன்றி' என்று சொல்வது போதாது.

நீங்கள் காட்டும் அன்பை வார்த்தைகளில் விவரிக்கமுடியாது. உங்கள் ஆசிர்வாதங்களும் அன்பும் என்னோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சி சுமுகமாக நடைபெற உதவிய காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்."



from விகடன்

Comments