Suriya: "அவரின் மகன் என்பதே எனக்கான அடையாளம்" - தந்தை சிவகுமார் குறித்து சூர்யா நெகிழ்ச்சி

தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவகுமாருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த நவ.28ஆம் தேதி வழங்கியிருக்கிறார்.

ஓவியர், நாடக நடிகர், திரைப்பட நடிகர் இன்று பேச்சாளர் எனப் பல பரிமாணங்களில் இயங்குபவர் சிவக்குமார். இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்திருப்பதற்குத் திரைத்துறையினர் மற்றும் பிற துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு கவின் கலை பல்கலைக்கழத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமார்
தமிழ்நாடு கவின் கலை பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற சிவக்குமார்

அந்த வகையில் அவரது மகனும் நடிகருமான சூர்யா, தமிழக முதல்வர், தமிழ்நாடு கவின் கலை பல்கலைக்கழகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

"அவரின் மகன் என்பதே என்றென்றைக்கும் எனக்கான அடையாளம்" - Suriya அறிக்கை

வணக்கம்,

ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு புள்ளியில் தொடங்கும் கோடு எவ்வளவு நுட்பமாக ஓவியமாக மாறுகிறதோ... அதைப் போலவே தன் வாழ்வையும் நெறியையும் நேர்த்தியுமாய் வகுத்துக் கொண்டவர்.

ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறு டாக்டர் பட்டம் என்பது மிகப் பொருத்தமானது. எள்ளளவும் நெறி பிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்.

சிறுவனாக இருந்த காலம்தொட்டு இன்று வரை அப்பாவின் ஆச்சர்ய உயரங்களைக் கண்டு வியக்கும் நான், அவரது உறுதி, உழைப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையே எனக்கான பாடமாகக் கொள்கிறேன்.

அவரது சாதனைகளைவிட அவரது வாழ்வியல் விழுமியங்களே (Life Values) என் வாழ்க்கையையும் எண்ணங்களையும் செதுக்கி இருக்கின்றன. 'சிவகுமார் அவர்களின் மகன்' என்பதே என்றைக்கும் எனக்கான அடையாளம். என் வாழ்நாளுக்கான அங்கீகாரம்.

எங்கள் தந்தையின் 60 ஆண்டுக்காலப் பயணம் தமிழ்ச் சமூகத்திற்குப் பயன்பட்டிருப்பதன் அங்கீகாரமாகவே இந்த டாக்டர் பட்டத்தைக் கருதுகிறோம். இந்தத் தருணத்தில் மதிப்பிற்குரிய ஓவியர் திரு. சந்துரு (எ) குருசாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் எங்களுக்குக் கூடுதல் மகிழ்வைத் தருகிறது.

இருவருக்கும் மகத்தான கெளரவத்தை வழங்கிய தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்திற்கும், இச்சிறப்பை முன்னின்று வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பிலும், எல்லோர் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



from விகடன்

Comments