கொரிய படத்தை ரீமேக் செய்ய சொன்ன சல்மான்கான்; மறுத்த ஏ.ஆர்.முருகதாஸ் - சிகந்தர் படம் உருவானது எப்படி?
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடித்து உருவாகி இருக்கும் சிகந்தர் படம் வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தை சல்மான் கானும், ஏ.ஆர்.முருகதாஸும் பல ஆண்டுகளாக திட்டமிட்டு தயாரித்துள்ளனர்.
சிகந்தர் படம் தொடர்பாக சல்மான் கானை எப்போது சந்தித்து பேசினேன் என்பது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ''மும்பை மத் தீவில் படப்பிடிப்பு நடந்தபோது அதில் சல்மான் கான் கலந்து கொண்டிருந்தார். நான் அங்கு சென்று முதன் முதலில் அவரை சந்தித்து பேசினேன். அச்சந்திப்பின் போது உங்களுடன் இணைந்து ஒரு படம் பண்ண விரும்புவதாக குறிப்பிட்டேன்.

உடனே அவரும் நானும் உங்களுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண விரும்புவதாக குறிப்பிட்டார். அதன் பிறகு சில ஆண்டுகள் சென்ற நிலையில் திடீரென ஒரு முறை என்னை அழைத்து கொரிய படம் ஒன்றை ரீமேக் செய்யும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் நான் படம் பண்ணுவதாக இருந்தால் அது எனது சொந்த கதையாக இருக்கவேண்டும் என்று கூறி மறுத்துவிட்டேன்.
கொரோனா காலத்தில் தயாரிப்பாளர் சாஜித் நாடியாவாலா நல்ல கதைக்காக என்னை சந்தித்தார். இருவரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மும்பையில் உள்ள சல்மான் கான் வீட்டில் சென்று அவரை சந்தித்து பேசினோம்.
கதையை சல்மான் கான் அரை மணி நேரம் கேட்டார். பிறகு சிகரெட்டை புகைத்துக்கொண்டே எழுந்து சென்றுவிட்டார். பின்னர் என்னிடம் 'நான் எப்படி வேலை செய்வேன் என்று தெரியுமா?' என்று கேட்டார். நான் தெரியாது என்று தெரிவித்தேன். உடனே நான் பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை வேலை செய்வேன். உங்களுக்கு அது ஓகேவா என்று கேட்டார். இதன் மூலம் எனது கதை அவருக்கு பிடித்து விட்டதாக நினைத்தேன்.
ஒரு காட்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு எங்களுக்குள் பலவிதமான கருத்துக்கள் இருக்கும்.
எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாதபோது, நாங்கள் இரண்டு வழிகளிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு எடிட்டிங்கின் போது இறுதி முடிவு எடுத்துகொள்வோம்.
ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து வழக்கமான படம் எடுப்பது என்பது சாத்தியமில்லை, ஏனெனில் அந்த படத்தில் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சூப்பர் ஸ்டார்களுடன் பணிபுரியும் போது, ஒரிஜினல் திரைக்கதைக்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க முடியாது. பார்வையாளர்களுக்காக, ரசிகர்களுக்காக, ஓபனிங்கிற்காக நாம் சமரசம் செய்ய வேண்டும். ரசிகர்களை திருப்திப்படுத்த அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ரசிகர்களுக்காக சூப்பர் ஸ்டார்கள் மெனக்கெடுவதை பார்த்து நாம் காற்றுகொள்ளலாம்." என்று அவர் தெரிவித்தார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel

from விகடன்
Comments