பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அவரைப் பற்றிய முக்கிய தகவல்களை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
* பல படங்களில் நடித்து மக்கள் மனதை மகிழ்வித்த டெல்லி கணேஷ், உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் காலமானார்.
* இவர் 1964 முதல் 1974 வரை இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார். அப்போது டெல்லியில் தக்ஷின பாரத நாடக சபையில் பல மேடை நாடகங்களில் பங்கேற்று தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இவர் டெல்லியில் நாடகங்கள் நடித்த காரணத்தினாலேயே இவருக்கு டெல்லி கணேஷ் என்ற பெயர் வந்தது.
* இவர் சென்னையில் காத்தாடி ராமமூர்த்தியிடம் பணிபுரிந்து கொண்டிருந்தபோது `வரதட்சணை கல்யாணம்' என்ற நாடகத்தில் நடித்து இயக்குநர் பாலசந்தர் கவனத்தை ஈர்த்தார். அந்த நாடகம்தான் அவருடைய சினிமா கரியருக்கு விதைப்போட்டது. 1977-ல் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான `பட்டினப் பிரவேசம்' என்னும் படத்தில் நடித்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
* தமிழ் சினிமாவில் இவர் பல முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கமல்ஹாசனோடு இவர் நடித்த படங்களே இவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றன. குறிப்பாக `நாயகன்' திரைப்படத்தில் ஐயர், `அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் பிரான்ஸிஸ் அன்பரசு , `மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் மணி ஐயர், `அவ்வை சண்முகி' படத்தில் சேதுராம ஐயர் , `தெனாலி'-யில் டாக்டர் பஞ்சபூதம் போன்ற கதாபாத்திரங்கள் இவருக்கு சிறப்பு தேடி தந்தது.
* இவர் குணச்சித்திர நடிகராக மட்டுமல்லாமல் நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மனதை ஈர்த்தவர்.
* திரைத்துறைக்கு வந்த மூன்றே வருடங்களில் 1979-ல் தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். `பசி' படத்தின் முனியாண்டி கதாபாத்திரத்திற்காக இந்த விருதைப் பெற்றார். அதுமட்டுமல்ல, 1993-ல் தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்தது.
* இவர் நாடக துறைக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை பாராட்டி டிசம்பர் 2023 ஆம் ஆண்டு இவருக்கு கௌரி மணோகரி விருதும் வழங்கப்பட்டது.
* திரைப்படங்களில் மட்டுமல்லாமல் டெல்லி கணேஷ் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். ப்ரதீப் ரங்கநாதனின் `லவ் டுடே' படத்தின் கதையை வைத்து அவர் ஒரு குறும்படம் எடுத்திருந்தார். அப்போது அதில் கதாநாயகியின் தந்தையாக டெல்லி கணேஷ் நடித்த்திருந்தார்.
* ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த மனிதராகவும் வாழ்ந்தவர். "இவரிடம் உதவி என்று கேட்டு வந்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் அதை நமக்கு முடித்து தருவார்" என்று நடிகர் பாஸ்கி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
* ரஜினி, கமல், விஜய் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தார். இவர் நடிப்பில் கடைசியாக `இந்தியன் 2' திரைப்படம் வந்திருந்தது .
from விகடன்
Comments