BB Tamil 8 Day 33: `என்னைப் பத்தி பேசினா கொலை விழும்' - டெரர் மோடில் ரியா; அசத்திய அருண், சவுந்தர்யா
மந்தமான போட்டியாளர்களாக கருதப்பட்ட சவுந்தர்யா மற்றும் அருண், இந்த வாரத்தின் Best performer-களாகத் தேர்வாகியிருக்கிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 33
பொதுவாக பாத்ரூம் போக வேண்டும் என்றால் தண்ணீர் கொண்டு போவார்கள். ஆனால் பாவம் தீபக்கிற்கு வெடிகுண்டு எடுத்துப் போக விதிக்கப்பட்டிருக்கிறது. ‘நேரடி நாமினேஷன்’ என்கிற தண்டனையைப் பெற்ற பிறகும் ஏன் அவர் வெடிகுண்டை இன்னமும் சுமக்க வேண்டும்? எதற்காக இந்த இரட்டைத் தண்டனை? பிக் பாஸ் கோர்ட்டின் சட்டவிதிகள் கோக்குமாக்கானவை.
ஒருவரின் மேனர்ஸ், ஸ்டைல், க்ரூமிங் போன்றவற்றை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும். இதுதான் மார்னிங் டாஸ்க். ‘முடிய சரியா வாரு.. நகத்தை வெட்டு, சட்டைல பட்டனைப் போடு’ என்று மக்கள் தங்களிடம் ஒளிந்திருந்த வன்மத்தை சற்று வெளியே தெளித்து விட்டார்கள்.
முதலில் வந்த சாச்சனா, ஜெப்ரியிடம் “பேசும் போது நாக்கைக் கடிக்கறத அவாய்ட் பண்ணு. எப்பவும் ஷார்ட்ஸ் போடாம வேற வேற டிரஸ் போட்டா நல்லாயிருக்கும்’ என்று அட்வைஸ் செய்ய “என்னைப் பத்தி மட்டும் பேசு. வீட்ல இருக்கறவங்களை பத்திலாம் இன்னொரு முறை பேசாத” என்று ஜெப்ரி கோபித்துக் கொண்டார். தீபக் மற்றும் சவுந்தர்யாவிற்கு இடையில் எப்போதுமே ஏழரைதான். “டேபிள் மேனர்ஸ் பார்த்துக்க.. சாப்பாட்டுல தலைமுடி படறா மாதிரி நடந்துக்காத’ என்று மாஸ்டர் போல தீபக் அட்வைஸ் செய்தவுடன் தனது விநோதமான முழிகளால் ஆட்சேபம் தெரிவித்தார் சவுந்தர்யா. (Expression Queen). சத்யாவும் எழுந்து வந்து சவுந்தர்யா தரும் அலட்சியமான எக்ஸ்பிரஷன்கள், மற்றவர்களை provoke செய்வதாக குற்றம் சாட்டினார்.
மாற்றிக் கொள்ள வேண்டிய மேனரிசங்கள்
ஜாக்குலின் எழுந்து வந்து ரியாவின் பெயரைச் சொல்ல “ஹலோ.. நீ கேர்ல்ஸ் டீம். மறந்துட்டியா?” என்று பெண்கள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். “ஹலோ.. நான் இப்ப பாய்ஸ் டீம்ல இருக்கேன். அதை நீங்க மறந்துட்டீங்களா?” என்பது போல் கவுன்ட்டர் தந்தார் ஜாக். “எங்க தலைவியைப் பேச விடுங்க.. நீங்க பேசுங்க தலைவி” என்று ஆண்கள் ஏகமனதாக ஜாக்கிற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
‘அங்க போனா.. என்னை வெச்சு செய்வாங்க’ என்று பயந்து கொண்டிருந்த ஜாக்குலின், இப்போது தலைவி என்று (சர்காஸம்தான்) ஆண்களால் அழைக்கப்படுமளவிற்கு பாய்ஸ் டீமில் ஜெல் ஆகி விட்டார். ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ போல எவரையும் அரவணைத்துக் கொள்ளும் பரந்த மனது ஆண்களிடம் உண்டு என்கிற வரலாற்று உண்மை மீண்டும் நிரூபணமாகிறது.
மற்றவர்களைப் பேச விடாமல், தான் சொன்னது மட்டுமே சரி என்பதை உடல்மொழியாலே வெளிப்படுத்தும் முத்துவின் மீது நிறைய விமர்சனங்கள் வந்தன. ‘எதற்கெடுத்தாலும் கையெடுத்து கும்பிடுவது, மண்ணைத் தொட்டு வணங்குவது, காமிரா பார்த்து பேசறது’ என்று ரியாவின் மேனரிசங்களைப் பற்றி அருண் சொல்ல அதற்கு விளக்கம் அளிக்க எழுந்து வந்தார் ரியா.
“இப்படி ஒவ்வொருத்தரும் விளக்கம் சொல்லி பழக்கப்படுத்திடாதீங்க. வெளியே போய் பேசி கிளாரிஃபை பண்ணிக்கிங்க” என்று ரியாவை கடுமையாக ஆட்சேபித்தார் தீபக். “அப்ப நானும் விளக்கம் சொல்லட்டுமா,?” என்று ஒரண்டை இழுத்தார் அருண். “சரி.. அவங்க சொல்ல வந்ததை சொல்லட்டுமே?” என்று சுனிதா ஆதரவு தர “நான் என்ன செய்யணும்ன்னு சொல்ற ரைட்ஸ் யாருக்கும் கிடையாது” என்று அருணின் கமெண்ட்டிற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார் ரியா. “இதோ.. ரெண்டாவது முறையா வந்து பேசறீங்க.. இதுவே மானர்ஸ் கிடையாது” என்று அருண் காண்டாக்க, ரியாவின் கோபம் அதிகமானது.
“என்னைப் பத்தி பேசினா கொலை விழும்’ - டெரர் மோடில் ரியா
பின்பு வழக்கம் போல் கண்ணாடி முன்னால் நின்று ‘நான் அப்படித்தான் பேசுவேன். அதுக்கு எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது. கேட்டா கொலை விழும். இங்க யாருமே காமிரா பார்த்து பேசறதில்லையா?” என்று பொங்க ஆரம்பித்து விட்டார் ரியா. தன்னுடைய உரிமை குறித்து ரியா குரல் எழுப்புவது நியாயமானதுதான். ஆனால் மற்றவர்களின் மேனரிசம் குறித்து சொல்லலாம் என்று டாஸ்க் தந்து கோத்து விட்டதே பிக் பாஸ்தானே?!
தங்கள் மீது சொல்லப்பட்ட கமென்ட்களால் சிலர் அதிருப்தியடைந்தார்கள். “என்னக்கா.. இது.. நான் எப்பவுமேவா ஷார்ட்ஸ் போட்டு சுத்தறேன்?” என்று சாச்சனா சொன்ன கமெண்ட்டினால் ஜெப்ரி புண்பட்டுக் கொண்டிருந்தார். “நீங்க கொஞ்சம் க்ரூம் பண்ணா நல்லாயிருக்கும். நடிப்புத் துறையில் இருப்பவர்கள் தன்னாலேயே அதைப் பண்ணிப்பாங்க” என்று மஞ்சரி குறித்து சிவக்குமார் சொல்லியிருந்தார். டாஸ்க் முடிந்த பிறகு மீண்டும் அதை விளக்கமாகச் சொன்னார்.
தன்னுடைய நிறம் குறித்த கமெண்ட்டாக இருக்கும் என்று மஞ்சரி நினைத்து விட்டாரோ, என்னமோ?! ஒருவரை கன்வின்ஸ் செய்து பேசும் திறமை சிவக்குமாரிடம் இருக்கிறது. ‘பெண்களுக்கு இயல்பாகவே natural sense of grooming இருக்கிறது’ என்றெல்லாம் அடித்து விட்டார்.“நான் எப்படி பேசினாலும் கேட்டை சாத்தினா என்னதான் பண்ணுவேன்.. நானும் என் பாணியை வாரா வாரம் மாத்திப் பார்க்கறேன்.. இவங்களா ஒண்ணு நெனச்சிக்கிட்டு என்னை இம்சை பண்றாங்க” என்பது போல் மஞ்சரியிடம் சலித்துக் கொண்டார் முத்து. ‘டாமினேட் செய்கிறார்’ என்று தொடர்ந்து வரும் கமென்ட்டுகள் காரணமாக இந்த வாரம் முத்து அடக்கி வாசித்தார். இது அவருக்கே பேக் பயராக ஆகி விடலாம். ஜெப்ரி சொன்னது போல் முத்து, முத்துவாக இருக்கும் வரைதான் மதிப்பு. மஞ்சரியின் வரவு முத்துவிடம் சலனத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
மாற வேண்டிய ஆண்கள் - வீட்டில் ‘பப்பரப்பே’ என்று இருக்காதீர்கள்
இந்த ஸ்டைலிங் விஷயம் தொடர்பாக ஒரு நடைமுறைச் சிக்கலையும் சொல்ல வேண்டும். அலுவலகத்திலிருந்து திரும்பும் போது தன்னுடைய மனைவி நல்ல ஒப்பனையுடன் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று பல கணவன்மார்கள் எதிர்பார்ப்பார்கள். ‘என்ன.. எப்பப்பாரு. இந்த அழுக்கு நைட்டியைப் போட்டு சுத்தறே?” என்று கிண்டலடிப்பவர்களும் உண்டு. ஆனால் விடுமுறை நாட்களில் ஆண்கள் என்னும் கனவான்கள், அதை விடவும் கண்றாவியான கோலத்தில்தான் வீட்டில் இருப்பார்கள். ஷேவ் செய்யாமல், முகம் கழுவாமல், கலைந்த தலையுடன் ஓட்டை பனியன், அழுக்கு லுங்கி அணிந்து கொண்டு பப்பரப்பே என்று வீடு முழுக்க ‘பிளடி பெக்கர்’ கெட்டப்பில் சுற்றுவார்கள். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நீட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்கள், தங்களையும் அது போல் பராமரித்துக் கொள்வது நலலது.
‘Audience Poll என்கிற சமாச்சாரம் உண்மையா, அல்லது பிக் பாஸ் டீமாக அடித்து விடுவதா என்று தெரியவில்லை. மக்கள் கருத்துக் கணிப்பின் படி “பெண்கள், ஆண்களை அலங்கரித்து அழகு பார்க்க வேண்டுமாம்’.. ஒவ்வொரு பெண்ணும், ஓர் ஆணைத் தேர்ந்தெடுத்து சிங்காரித்துக் கொண்டிருந்தார்கள். ரஞ்சித்தின் காதில் வளையம் எல்லாம் போட்டு ‘புள்ளீங்கோ’ ஸ்டைலுக்கு மாற்றியிருந்தார். முத்துக்குமரனை விநோதமான சிகையலங்காரத்துடன் ஜாக்குலின் உருமாற்றிக் கொண்டிருக்க ‘ஒரு திருஷ்டிப் பொட்டு வெச்சா கம்ப்ளீட் ஆயிடும்” என்று பிக் பாஸ் கிண்டலடிக்க “அப்படிச் சொல்லுங்கய்யா.. இம்சை பண்றாங்க” என்று சிணுங்கினார் முத்து.
“வெளில பார்த்த அன்ஷிதா வேற. உள்ளே வேற மாதிரி இருக்காங்க.. சவுந்தர்யாவை ஆரம்பத்துல எனக்குப் பிடிக்கலை. ஆனா இப்ப பிடிக்குது” என்று வெளியிலும் ஷோவைப் பார்த்து விட்டு வந்திருக்கும் மஞ்சரி, ஜெப்ரியிடம் தன்னுடைய அபிப்ராயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். “இந்த வாரம்தான் அப்படி மாறியிருக்கா. சவுண்டு எப்பவுமே ரூல் பிரேக் பண்ண மாட்டா.. யாரோ அவ கிட்ட இன்ப்ளுயன்ஸ் பண்ணியிருக்காங்க.. இந்த வாரம் ஜாக் குழந்தையாவே மாறிட்டதைப் பார்க்க பயமா இருக்கு” என்பது ஜெப்ரியின் அபிப்ராயம்.
தங்களால் சிங்காரிக்கப்பட்ட பலியாடுகளை ஒவ்வொரு பெண் போட்டியாளரும் அழைத்து வர, Ramp Walk show நடந்தது. சற்று முகம் கழுவி, தலை சீவினால் பல ஆண் போட்டியாளர்கள் சகிக்கும் அளவிற்கு தோன்றுகிறார்கள் என்கிற உண்மை இப்போது தெரிய வந்தது. படையப்பாவாக சிவக்குமார் செய்த சேஷ்டைகள் சுவாரசியமாக இருந்தன. இந்த ஷோவை அனைவருமே கைத்தட்டி ரசித்து மகிழ்ந்தார்கள்.
ஆச்சரியப்படுத்திய சவுந்தர்யாவும் அருணும்
போட்டியாளர்கள் சிரித்து விட்டால் பிக் பாஸிற்கு வயிற்றில் புளியைக் கரைத்து விடும். ‘பொழப்ப பார்க்கணுமே’ என்று அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்து விடுவார். ‘இந்த வாரம் முழுக்க சிறப்பாகப் பங்கேற்ற இரு நபர்கள்’ என்னும் டாஸ்க் ஆரம்பித்தது. ‘கடைசி பென்ச் மாணவி’ என்று பலராலும் திட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒருவர், ஸ்டேட் ஃபர்ஸ்ட் வநதால் எப்படியிருக்கும்? சவுந்தர்யாவின் உருமாற்றம் அப்படித்தான் இருக்கிறது. ‘பேச்சுப் போட்டி, நடனப் போட்டி’ என்று தொடர்ந்து மேடையேறி கோப்பைகள் வாங்கும் பெஸ்ட் ஸ்டூடண்ட் போல ‘சிறந்த போட்டியாளராக’ சவுந்தர்யாவின் பெயரை பலரும் சொல்ல ‘பாண்டியராஜனின் முழிகளால்’ அந்த மகிழ்ச்சியை அவர் ஏற்றுக் கொண்டார்.
சவுந்தர்யாவைப் போல் இன்னொரு ஆச்சரியம் அருண். ‘ஆண்கள் அணியின் பின்னால் ஒளிந்து கொள்கிறார். சரியாகப் பேசுவதில்லை. முத்துவின் நிழல். டம்மி பீஸ்’ என்றெல்லாம் கிண்டலடிக்கப்பட்டுக் கொண்டிருந்த அருண், இப்போது ‘பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல’ என்று பெண்கள் அணியே ஜெர்க் ஆகும் அளவிற்கு டெரரான ஆளாக மாறியிருக்கிறார். லாஜிக் பாயிண்ட் பேசி பெண்கள் அணியை திணறடிக்கிறார். ‘வேதாளம்’ படத்தின் ‘தல’ மாதிரி முதல்ல அழுதுக்கிட்டே வந்து அப்புறம் வெறித்தனம் காட்றாரு’ என்று இதை சரியாக வர்ணித்தார் சிவக்குமார்.
ஆக.. இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளர்கள் சவுந்தர்யா மற்றும் அருண். இருவரும் தலைவருக்கான போட்டியில் மோதுவார்கள். எதற்கு future tense-ல் சொல்ல வேண்டும்? பிறகு இந்தப் போட்டி நடந்தது. அருண் வெற்றி பெற்று அடுத்த வாரத்தின் கேப்டன் ஆனார். தனது உதவியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சொதப்பியதாலும் பதட்டம் காரணமாகவும் சவுந்தர்யா தோற்றார். “ஈஸியா ஜெயிச்சிருக்க வேண்டிய கேம்” என்று இதை விமர்சனம் செய்தார் சுனிதா. “ஆமாக்கா” என்று சாச்சனாவும் இதற்கு ஒத்து ஊதினார். வெளியில் இருந்து ஆயிரம் பேசுவதை விடவும் தானே களத்தில் இறங்கினால்தான் பிரச்சினைகளைப் பற்றி நன்கு தெரியும்.
சுமாரான போட்டியாளராக முத்துவா?
‘இந்த வாரத்தின் சுமாரான போட்டியாளர்கள்’ பிரிவிலும் ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், இதுவரை முதல் பென்ச் மாணவனாக இருந்த முத்துக்குமரன், பார்டர் மார்க் கூட எடுக்க முடியாமல் ஃபெயிலாகிப் போனார். மற்றவர்களின் கமெண்ட் காரணமாக முத்து தன்னை மாற்றிக் கொண்டதுதான் காரணமா அல்லது முன்னணி போட்டியாளராக இருக்கும் முத்துவின் மீது கொலைவெறி கொண்டு மற்றவர்கள் முதுகில் குத்தினார்களா என்பது விவாதத்திற்கு உரியது. இரண்டாவதுதான் காரணமாக இருக்கும். இன்னொரு சுமாரான போட்டியாளராக வர்ஷினி தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமே இல்லை. அடுத்த வாரமே வெளியே அனுப்பி வைக்கலாம் என்கிற அளவிற்கு மோசமான போட்டியாளராக இருக்கிறார். ஆனாலும் சொல்ல முடியாது. சவுந்தர்யா போல இவரிடமிருந்தும் ஆச்சரியம் நிகழலாம்.
முத்துவிற்கும் வர்ஷினிக்கும் விநோதமான தண்டனையைக் கொடுத்தார் பிக் பாஸ். அதாவது பெஸ்ட் ஸ்டூடண்டாக தேர்வாகியிருப்பவர்களிடமிருந்து இவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமாம். ‘எல்லாம் என் நேரம்டா” என்று முத்து மைண்ட் வாய்ஸிற்குள் அலறியிருப்பார். ‘அவ தன்னை சந்திரமுகியாவே நெனச்சிக்கிட்டா’ என்கிற வசனத்தைப் போல சவுந்தர்யாவைக் காப்பியடிக்க முயல்கிறார் என்று சொல்லப்படும் வர்ஷினிக்கு இதுவொரு நல்ல வாய்ப்பு.
முத்துவிற்கு செக் பாயிண்ட் வைத்தாலும் ‘அவங்க கத்துக்கற மாதிரி நடந்துக்கங்க” என்று அருணிற்கும் சவுந்தர்யாவிற்கும் ஊமைக்குத்தாக குத்தினார் பிக் பாஸ். ‘நான்தான் இவன் கிட்ட இருந்து கத்துக்கணும்’ என்று தன்னடக்கத்துடன் பேசினார் அருண். ‘You don't deserve this’ என்று முத்துவிடம் ஜாக்குலின் சொன்னது ஆடியன்ஸ் பலரின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.
வாரயிறுதியை சுவாரசியமாக்குவாரா விஜய்சேதுபதி?
சசி - ஜெயா போல இணை பிரியாத தோழிகளாக இருந்த தர்ஷிகா - பவித்ரா நட்பிற்கு இடையில் குழம்பு கொட்டி கறையை ஏற்படுத்தி விட்டது. ‘உடனே துடைக்கக்கூடாதா,’ என்று பவித்ரா கேட்டதற்கு ‘சாப்பிட்டப்புறம் துடைப்பேன். என்ன இப்ப?’ என்று பதிலுக்கு கோபமடைந்தார் தர்ஷிகா. பிறகு இருவரும் தனியாகப் பேசி சமாதானம் அடைந்தார்கள். ‘தர்ஷிகாவின் நிழலாக இருக்கிறீர்கள், வெளியே வாருங்கள்’ என்று பவித்ராவிற்கு தொடர்ந்து அட்வைஸ் சொல்லப்பட்டதின் எதிரொலிதான் இந்தப் பிரச்சினைக்கு காரணமா?
முத்துவிற்கும் ஜாக்குலினிற்கும் இடையில் நடந்த ஒரு உரசல் மற்றும் விவாதத்துடன் இந்த எபிசாடு நிறைவுற்றது. ஆண்கள் எப்போதுமே தங்களுக்குள் காமெடியாக பேசி கலாய்த்துக் கொள்வார்கள். அந்தப் புரிதல் அவர்களுக்குள் இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் பெண்கள் வெடிகுண்டுபோல. எப்போது சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியாது.
இன்று சனிக்கிழமை. எனவே பஞ்சாயத்து நாள். விஜய் சேதுபதி சுருக்கமான விசாரணைகளின் மூலம் வீக்கெண்டை சுவாரசியமாக்குவார் என்று எதிர்பார்ப்போம். மாறாக குழம்பு கொட்டிய கதையை அரை மணி நேரத்திற்கு இழுத்தால் மக்கள் சானலை மாற்றிப் போய்க் கொண்டே இருப்பார்கள். ஆமாம்தானே?!
இந்த வாரத்தில் யார் வெளியேற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? கமெண்டில் வந்து சொல்லுங்கள் மக்களே!
from விகடன்
Comments