BB Tamil 8 Day 31: அம்மா சென்டிமென்ட்; 'பிக் பாஸே நினைத்தாலும் அதைத்தடுக்க முடியாது' கொந்தளித்த ரியா
முதன் முறையாக ஆண்கள் அணி நாமினேஷன் ஃப்ரீ பாஸை வென்றிருக்கிறது. பாயஸ் டீமிற்குள் ஜாக்குலின் நுழைந்த அதிர்ஷ்டமாம் இது. நக்கல்தானே?!
புதிய என்ட்ரிகளில் சிலர் இன்னமும் ‘சைலன்ட்டாக’ இருக்க, சிலர் ‘வயலென்ட்’ ஆக செயல்பட்டு கலக்குகிறார்கள். இந்த வரிசையின் முன்னணியில் ரியாவும் மஞ்சரியும் இருக்கிறார்கள். வர்ஷினியும் ராணவ்வும் பயங்கரமாக சொதப்புகிறார்கள்.
அதிகாலை 04:40. தூக்கம் வராத வர்ஷினி, காமிரா முன்பாக அனத்திக் கொண்டிருந்தார். ‘எனக்கு இங்க செட் ஆக மாட்டேங்குது. விரோதி மாதிரி பார்க்கறாங்க. எல்லோருமே இங்க நடிக்கறாங்க. எனக்கு நடிக்கத் தெரியாது. உண்மை ஒரு நாள் வெல்லும்’ என்று சினிமா காட்சி போல சவால் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார். பார்வையாளர்கள் தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று இவர் மெனக்கெடுகிறார் போல. இது போல் அனத்துகிறவர்கள் எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து விட்டுத்தான் வருகிறார்களா என்று சந்தேகம் வருகிறது. இது என்ன ‘விக்ரமன்’ திரைப்படமா? ரத்த பூமி அய்யா!.
‘வடக்கே கேட்டுப்பாரு என்னைப் பத்தி சொல்லுவான்’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. தேனிலவுத் தம்பதி மாதிரி வெடிகுண்டுடன் இணைபிரியாமல் சுற்றிக் கொண்டிருந்தார் தீபக். சவுந்தர்யா பாணியில் தனியாக நடனம் ஆடிக் கொண்டிருந்தார் ராணவ்.
வீட்டில் வளரும் போது கிச்சன் இருக்கும் பக்கமே வர்ஷினி சென்றது கிடையாது போல. ‘பிளாக் காஃபி போடுங்க’ என்று சுனிதா கேட்க ‘அதுக்கு என்னென்ன பொருட்கள் வேணும்? சுடுதண்ணின்னா.. என்னது.. அதை எப்படி ரெடி பண்றது.. காஃபி போடற வேலை ரியாவோடதுதானே..” என்றெல்லாம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்த வர்ஷினிக்கு நமட்டுச் சிரிப்புடன் சுனிதா பதில் சொல்லிக் கொண்டிருந்தார். வர்ஷினி அடுப்பைப் பற்ற வைக்க முயற்சி செய்த சாகசங்களைப் பார்த்தால் Oppenheimer அணுகுண்டை கண்டுபிடிப்பதற்காக செய்த முயற்சியைப் போல் கலவரமாக இருந்தது.
‘எந்த இரண்டு நபர்கள் மற்றவர்களை அதிகமாக manipulate செய்கிறார்கள் அல்லது செய்யக்கூடியவர்கள்? எந்த இரண்டு நபர்கள் எளிதாக manipulate ஆவார்கள்?’ என்கிற டாஸ்க்குடன் காலையிலேயே கலகத்தை ஆரம்பித்து வைத்தார் பிக் பாஸ். ‘Manipulateன்னாலே அது கேர்ள்ஸ்தானே.. இதுக்கெல்லாம் எதுக்கு டாஸ்க்.. சின்னப்புள்ளத்தனமா இருக்கே?” என்பது போல் கேள்வி கேட்டு பெண்கள் அணியின் விரோதத்தை இன்ஸ்டன்டாக சம்பாதித்தார் வர்ஷினி. ‘என் வழி தனி வழி’ என்கிற பாலிசியைப் பின்பற்றுகிறார் போல.
Manipulation டாஸ்க், அதாவது முத்துவின் மொழியின் மொழியில் சொன்னால் ‘மத்தவங்க மண்டையைக் கழுவறது', ஆரம்பித்தது. “இந்தப் பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி இருந்த பொண்ணுன்னு என்னைப் பத்தி சொல்றாங்க. இங்க எல்லாப் பூனையும்தான் பால் குடிக்குது’ என்று ரகளையாக கமெண்ட் அடித்த சவுந்தர்யா, முத்து - ஆனந்தியை ‘செல்வாக்கு செலுத்தும்’ நபர்களாக குறிப்பிட்டார். தனது தேர்வை முத்து சொன்ன விதம் நகைச்சுவையாக இருந்தது. சம்பந்தப்பட்டவர்களே இதற்கு சிரித்தார்கள்.
‘மற்றவர்களின் மண்டையைக் கழுவும்’ டாஸ்க்கில் முத்துதான் அதிக வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்த்தால், புதிதாக வந்திருக்கும் ரியாவிற்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. ஆனந்திக்கும் கணிசமான வாக்குகள் கிடைத்தன. ‘இந்தப் பயல ஈஸியா ஏமாத்திப்புடலாம்’ என்கிற தேர்வில் ராணவ்வின் பெயர் அதிகமாக வந்தது. அவரும் எல்கேஜி பாப்பா மாதிரி புன்னகையுடன் இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு நபராக பவித்ராவின் பெயர் அதிகம் சொல்லப்பட்டது.
டாஸ்க் முடிந்ததும் ரியா விளக்கம் அளிப்பதற்காக எழுந்து வர “30 செகண்ட் டாஸ்க் இல்லல்ல” என்று ஜாக்கிரதையாக கேட்டுக் கொண்டு அருண். “நான் வந்தே நாலுநாள்தான் ஆச்சு. அதுக்குள்ள என் பெயர் அதிகமா வருதுன்னா, நான் முன்னேறி வரேன்னு அர்த்தம். இது என்னோட வெற்றி. அதற்காக நன்றி” என்று சபையைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் ரியா.
இதற்கு முனனால் ஏதாவது கவுன்சிலர் எலெக்ஷனில் நின்றாரா என்று தெரியவில்லை, யார் தன்னைப் பற்றி என்ன சொன்னாலும் உடனே கையெடுத்தும் கும்பிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் ரியா. இந்த மேனரிசத்தை பிறகு கிண்டலடித்துக் கொண்டிருந்தார் சாச்சனா. “இந்த உலகமே என்னைத் தடுத்தாலும் என் கருத்தைப் பதிவு செஞ்சே தீருவேன். பிக் பாஸே நினைத்தாலும் அதைத் தடுக்க முடியாது” என்பது போல் பிறகு கண்ணாடி முன்பாக பேசிக் கொண்டிருந்தார் ரியா.
தனக்கு போட்டியாகத்தான் மஞ்சரியை உள்ளே அனுப்பியிருக்கிறார்கள் என்பது முத்துவிற்கு நன்றாக உரைக்க ஆரம்பித்திருக்கிறது. “மஞ்சரி ஒரு முடிவோடதான் வந்திருக்காங்க.. ஆனா ஸ்ட்ராங்கா பேசாம, கேப் கிடைச்ச இடத்துல எல்லாம் பேசறாங்க.. இந்த ரியா இருக்கே.. ஓவர் கான்பிடன்ஸ்.. உடம்பிற்கு ஆகாது” என்று சாச்சனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. இந்தக் கமெண்ட் அவருக்கே பொருந்தும் என்பதை முத்து உணர்வாரா?
தட்டு கழுவுவதற்காக வந்த பெண்கள் அனைவருக்கும் ஒரே டாஸ்க் தந்தார் ஜெப்ரி. “பேசாம கொஞ்ச நேரம் உக்காருங்க” என்பதுதான் அது. பெண்களிடம் போய் ‘பேசாம அமைதியா இருங்க’ என்று சொல்வது எத்தனை பெரிய விபரீதம்?! அவ்வளவுதான். சுனிதா சண்டைக்கு வர மற்ற பெண்களும் இணைந்து கொண்டார்கள். இதைப் பற்றி பிறகு சத்யாவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் ஜெப்ரி. ‘சுனிதா எது சொன்னாலும் ரியா கூட சேர்ந்துக்கறாங்க’ என்று ஜெப்ரி சொல்ல ‘அது ஒரு ஜால்ரா’ என்றார் தீபக்.
‘தடை அதை உடை’ என்கிற டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்தது. ஆண்கள் ஏற்கெனவே ஒரு வெற்றியைப் பெற்றிருப்பதால் பெண்களுக்கு நெருக்கடியான சூழல். இன்னொரு வெற்றியையும் ஆண்கள் பெற்று விட்டால் நாமினேஷன் பாஸ் அவர்களுக்குத்தான் கிடைக்கும். எனவே பெண்கள் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
“நான் போறேன்” என்று வர்ஷினி கைதூக்க “அவங்க போன டாஸ்க்லயே சொதப்பினாங்க.. இது ரொம்ப முக்கியமான ஆட்டம்” என்று சாச்சனா ஆட்சேபிக்க வர்ஷினிக்கு கோபம் வந்து விட்டது. ‘எனக்கு காஃபிதான் போடத் தெரியாது. ஆனா ஸ்போர்ட்ஸ்ல கப்பு நிறைய வாங்கியிருக்கேன்” என்பது போல் மல்லுக்கட்ட “அவளுக்கு ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்க்கலாம்” என்று ஆதரவு தெரிவித்தார் சவுந்தர்யா. ஒருவரை எந்த டாஸ்க்கிலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதன் வலி சவுந்தர்யாவிற்குத்தான் நன்றாக தெரியும்.
பந்தை தட்டித் தட்டி அடுத்தவருக்கு ஒரே பிட்ச்சில் தடையைத் தாண்டி தர வேண்டும். அவர் இன்னொருவருக்கு தருவார். இப்படியாக ஐந்து தடைகளைத் தாண்டி கடைசி பாயிண்டில் போட்டால் வெற்றி. ஆரம்பம் முதலே பெண்கள் அணி தடுமாறிற்று. ‘கிரிக்கெட் தெரியும். டென்னிஸ் தெரியும்’ என்றெல்லாம் சொல்லி உற்சாகமாக கிளம்பிய சாச்சனா மிகவும் தடுமாறினார். அவருக்கே நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தார் சவுந்தர்யா. ஆக கடைசி வரையிலும் பெண்கள் அணியால் எந்தவொரு பாயிண்டையும் எடுக்க முடியவில்லை.
அடுத்ததாக உற்சாகத்துடன் களம் இறங்கியது ஆண்கள் அணி. ‘மூளை சம்பந்தப்பட்ட டாஸ்க்’ என்றால்தான் பாய்ஸ் டீம் பலவீனமாக ஆகி விடும். பந்தடிப்பது என்றால் கொண்டாட்டம்தான். இந்த ஆட்டத்தை டிவி வழியாக பார்த்துக் கொண்டிருந்த சுனிதா, ‘ஜூப்ரா.. காப்ரா’ என்று விநோதமான மொழியில் சாபம் இட்டுக் கொண்டிருந்தார். ஆண்கள் அணி தோற்று விட வேண்டுமாம்.
“ஏம்மா தங்கம்.. யாரு ஜெயிச்சாலும் சந்தோஷப்படணும். இப்படி ஜமீன்கோட்டை கிழவி மாதிரி சாபம் விடக்கூடாது” என்பது போல் இதை ஆட்சேபித்தார் ரஞ்சித். ‘கோபமே வரமாட்டேங்குது’ என்று மற்றவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பதால் ரஞ்சித் ஒரு டெமோ காட்டினார் போலிருக்கிறது. இந்த மெலிதான டெமோவிற்கே சுனிதா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார்.
பந்து தள்ளும் விளையாட்டில் ஆண்கள் முதலில் தடுமாறினாலும் விரைவில் சுதாரித்துக் கொண்டார்கள். ஜெப்ரி சிறப்பான முறையில் கையாண்டார். ஒருவழியாக கடைசி வரைக்கும் பந்தை தள்ளிச் செல்ல, ரயான் அதை கோல் ஆக்க.. ஒரேயொரு பாயிண்ட் எடுத்தாலும் ஆண்கள் அணி வெற்றி. கூடி நடனம் ஆடி இந்த வெற்றியை பாய்ஸ் டீம் கொண்டாடியது. ஆக முதன்முறையாக நாமினேஷன் ஃப்ரீ பாஸை ஆண்கள் அணி கைப்பற்றியிருக்கிறது.
“அதெல்லாம் இருக்கட்டும் தம்பிகளா.. யாரைக் காப்பாத்தப் போறீங்க.. அதைச் சொல்லுங்க” என்று கொளுத்திப் போட்டார் பிக் பாஸ். பெண்களாக இருந்தால் வீடே வெடித்து சிதறியிருக்கும். ஆனால் ஆண்கள் அணி இந்த விவாதத்தை அஹிம்சை வழியில் கையாண்டார்கள். ‘எனக்கு இல்லைன்னாலும் பரவாயில்லை. டீம் எடுக்கற முடிவிற்கு முழு மனசோட கட்டுப்படுவேன்’ என்று ஆரம்பத்திலேயே சாத்வீகமாகப் பேசினார் ரஞ்சித்.
நாமினேஷனில் இருந்த மற்றவர்களும் ‘தனக்கு எதற்காக இந்த பாஸ் வேண்டும்’ என்கிற காரணத்தை அமைதியாகச் சொன்னார்கள். “நான் இல்லாமப் போனா சமைக்க ஆளில்லாம கஷ்டப்படுவீங்க.. பார்த்துக்கங்க” என்று சொல்லி சிரிக்க வைத்தார் விஷால். வாக்கெடுப்பில் தீபக்கிற்கும் ரஞ்சித்திற்கும் அதிக வாக்குகள் வந்தன. ‘விலகிப் போனால் நெருங்கி வரும்’ என்கிற தத்துவத்தின் படி ‘வேண்டாம்’ என்று மறுத்த ரஞ்சித்தை தேடி பாஸ் வந்தது. அவர் சிறந்த எண்டர்டெயினராக இருக்கிறாராம். ஆக ரஞ்சித் இந்த வாரத்தில் காப்பாற்றப்படும் நபராக இருக்கிறார்.
டாஸ்க் முடிந்த சமயத்தில், வரவேற்பறையில் உரையாடல் நடந்தது. முடிந்தது. ஆண்கள் என்ன சுவாரசியமாக செய்யப் போகிறார்கள் என்று பார்க்க ஆவலாக இருந்தது. 30 செகண்ட் முடிக்கும் வரை எல்லைக்கோட்டில் நின்று ஆண்கள் அனைவரும் ஒன்றாக நடனம் ஆடியது பார்க்க நன்றாக இருந்தது. அடப்பாவிகளா! இதை முன்பே செய்திருக்கலாமே?! இந்த விஷயத்திற்கா இரண்டு நாட்கள் மல்லுக் கட்டினீர்கள்? எந்தவொரு குழுவிலும் ஆட்டத்தைக் கலைப்பதற்கென்றே ஒரு ஸ்பாயிலர் இருப்பார். அதன்படி “எனக்கு இதில இஷ்டமில்ல. இஷ்டமில்லாதவங்க பண்ண வேணாம்ன்னு சொன்னீங்கள்ல” என்றபடி வேகமாக விலகிச் சென்றார் அருண்.
பொழுது போகாமல், பெண்கள் அணி கார்டன் ஏரியாவில் திருடன் விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள் . ஒருவர் மற்றவர்களை துரத்திப் பிடிப்பதற்காக காத்திருப்பார். அவர் சொல்லும் நிறம் இருக்கிற பொருளை ஓடுபவர்கள் எங்காவது தேடித் தொட்டு நிற்க வேண்டும். அப்படி இல்லையென்றால் துரத்துபவர் தொட்டு அவுட் ஆக்கி விடுவார். இதுவொரு ஆதி கால விளையாட்டு. ‘பிங்க்’ என்று ஜெப்ரி சொன்னவுடன் பெண்கள் பலரும் ஓடி அருகிலிருந்த பிங்க் நிற விளம்பரப் பலகையைத் தொட்டுக் கொண்டார்.
சவுந்தர்யாவின் அருகில் பிங்க் நிறத்தில் எதுவுமில்லை. மற்றவர்கள் சுட்டிக் காட்டியவுடன் தீபக்கின் டிஷர்ட்டில் இருந்த பிங்க் நிறத்தை ஓடிப் போய் தொட்டார். நாள் பூராவும் வெடிகுண்டுடன் சுற்றிக் கொண்டிருக்கும் கடுப்பில் இருக்கும் தீபக், அவரே ஒரு வெடிகுண்டாக மாறி விட்டார் போல. ‘உனக்கு மேனர்ஸ் இல்லையா.. இப்படியா ஒருத்தர் அனுமதியில்லாம வந்து தொடுவாங்க..?” என்று சாலையில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை துரத்தும் ‘அங்கிள்’ மாதிரி சத்தம் போட்டார் தீபக். பதிலுக்கு சவுந்தர்யாவும் சீறினார். விளைவு, ஜாலியாக நடந்து கொண்டிருந்த ஆட்டம் நின்று போனது.
‘கடந்து வந்த பாதை’ டாஸ்க் ஆரம்பித்தது. முந்தைய சீசன்களில் பிழியப் பிழிய அழுவார்கள். ஆனால் அதெல்லாம் கிண்டலடிக்கப்படலாம், அவுட் ஆஃப் பேஷன் என்பது இப்போதைய போட்டியாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது போல. எனவே சொந்த சோகக் கதையை சிரிப்புடன் சொன்னார்கள்.
ஜாக்குலின், தர்ஷிகா, அன்ஷிதா, சாச்சனா, சத்யா ஆகியோர் இன்று கதை சொன்னார்கள். போட்டியாளர்களுக்கு பின்னால் இருக்கிற துயரங்களை அறிய நேரும் போது அதிர்ச்சியாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் single parent-ஆல் போராட்டத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது அப்பாவை இழந்து அம்மா என்கிற ஜீவன் மட்டும் தன்னந்தனியாக நின்று போராடி பிள்ளைகளை வளர்த்திருக்கிறது.
குடும்பம் என்கிற நிறுவனத்தில் அம்மா என்கிற பாத்திரத்தின் முக்கியத்துவமும் தியாகமும் இந்த டாஸ்க்கின் மூலம் வழக்கம் போல் நிரூபணமாகிறது. அதைப் போலவே பொறுப்பற்ற அப்பாக்கள் இருந்தால் அந்தக் குடும்பம் எவ்வாறெல்லாம் அலைக்கழிப்பிற்கு ஆளாகிறது, மிக முக்கியமாக குழந்தைகள் எவ்வாறு மனபாதிப்பை அடைகிறார்கள் என்பதை இந்தக் கதைகள் உணர்த்தின. ‘சம்மந்தி’ என்கிற விஷயம்தான் இளமையில் என்னுடைய முக்கியமான உணவாக இருந்தது என்பதை அன்ஷிதா உருக்கத்துடன் சொல்ல “இப்பத்தான் எனக்கு புரிஞ்சது’ என்று பழைய சம்பவத்தை சாச்சனா நினைவு கூற, அவரை எல்லோரும் பாராட்டினார்கள். உபதேசம் சொல்லி திருந்துவது போல் பாவனை செய்வது வேறு. உண்மையாகவே மனம் மாறி திருந்துவது வேறு.
சத்யா சொன்ன காதல் கதையும் நெகிழ்ச்சியாக இருந்தது. ‘இந்த மாதிரி பசங்கள்லாம் எங்கேடா இருக்கீங்க?” என்று சுனிதா கேட்டதும் சபை கலகலத்தது. ஐந்து பேர் சொன்ன கதைகளும் சிறப்பாக இருந்ததால், வெடிகுண்டு வைத்திருப்பதை தீபக் தொடர வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பாக சொன்னார்கள். ஒருவகையில் இது சரிதான் என்றாலும், நாள் பூராவும் சுமந்து கொண்டிருக்கிற தீபக்கை விடுவித்திருக்கலாம். ஐந்து பேரில் கடைசியாக உள்ளவருக்கு அதை மாற்றி விட்டிருக்கலாம்.
தீபக் தண்டனையைத் தொடர நேர்ந்தது குறித்து, முடிவெடுத்த நபர்களில் ஒருவரான மஞ்சரியிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் விஷால். “நேத்திக்கு ஸ்டாப் பலகையைக் காட்டினீங்கள்ல.. இன்னிக்கு காட்டணும்னு தோணலையா?” என்று அவர் கேட்க “ஒருத்தர் தன் கதையை முழுசா சொல்ல விடலாம். அடுத்த ப்ளோவிற்கு நகரும் போது கட் பண்ணக்கூடாது” என்று சிவக்குமாரும் இதை நேற்றே ஆட்சேபித்திருந்தார்.
கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தாலும் தீபக்கிடம் சீற்றல் வெளிப்பட்டது. ‘நாளைக்கும் கொடுத்தாங்கன்னா கண்டிப்பா செய்ய மாட்டேன்” என்று அவர் பொருமிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவு தாண்டியும் கார்டன் ஏரியாவில் பேசிக் கொண்டிருந்த பெண்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள். பிறகு கோட்டை தாண்டிச் சென்று ‘இப்ப என்ன செய்வீங்க?” என்கிற மாதிரி ஜாலியாக நடனம் ஆடிய நபர்கள் சுனிதா, சாச்சனா மற்றும் ஆனந்தி. நல்லவேளையாக, அந்தச் சமயத்திலும் விழித்துக் கொண்டிருந்த அருண் இதைப் பார்க்கவில்லை. “மத்தவங்களைக் கூட சமாளிச்சிடலாம். அருண் டேன்சரஸ் ஃபெல்லோ” என்றார் சுனிதா.
‘எவரும் கண்காணிக்காத சமயத்திலும் பின்பற்றுவதற்குப் பெயர்தான் நேர்மை’ என்றொரு வாசகத்தை எங்கோவொரு அரசு அலுவலகத்தின் போர்டில் பார்த்தேன். என்னை நீண்ட நாட்கள் அலைக்கழித்த வாசகம் அது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
from விகடன்
Comments