BB Tamil 8 Day 30: `சண்ட செய்வோம்' சவுந்தர்யா - சத்யா மன்னிப்பு; போராட்டத்தை அறிவித்த பெண்கள் அணி

‘AVP டாஸ்க்’ தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருக்கும் சூழலில், கேப்டன் முத்துவால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. 

இது தொடர்பாக முத்து மற்றும் ஆனந்தியிடம் பிக் பாஸ் நடத்திய உரையாடலை அவசியம் அனைவரும் காண வேண்டும். என்னவொரு நக்கல்?! ‘சத்ய சோதனைன்னு கேள்விப்பட்டிருக்கேன். இது ‘சத்யா' சோதனை போல' என்று கிரேசி மோகன்தனமாக அவர்  டயலாக் அடித்ததெல்லாம் அட்டகாசம். 

தொழிலாளி VS முதலாளி உரசல் எப்போதுமே நிகழ்வதுதான். ஆனால் ஒருவன் தொழிலாளியாக இருக்கும்போது முதலாளியின் கோணத்திலும் சிந்தித்தால்தான் வருங்காலத்தில் நல்ல முதலாளியாக மாற முடியும்.  இந்த அடிப்படையில் பிக் பாஸ் எடுத்த டியூஷன் அருமையான காட்சி. 

BBTAMIL 8: DAY 30

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 30

மளிகைப் பொருட்கள் வந்தன. பெண்கள் அதிகமாக அள்ளியிருந்தார்கள். அவர்கள் உள்ளே வருவதற்கு டாஸ்க் கொடுத்தால் பிரச்னை வெடிக்கும் என்று பயந்தோ என்னமோ ‘டாஸ்க் இல்லை. 30 நிமிஷம் டைம். 2 பேர் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம்’ என்று தாராள மனதுடன் சொல்லிவிட்டார் தீபக். பெண்கள் அணி அப்போதே வாழைப்பழங்களை எடுத்து தங்களின் அறைக்குள் வைத்துக் கொண்டது. அடையாளப் போராட்டத்திற்காக காலையிலேயே தயாராகி விட்டார்கள் போல. 

‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் தேடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா’ என்கிற பாடல் போல, தனக்கு  ஊட்டி விட்ட முத்துவிடம் கேர்ல்ஸ் டீம் ரகசியங்களை கக்கிக் கொண்டிருந்தார் சாச்சனா.  அதற்கு லஞ்சமாக சாண்ட்விச் கொடுத்து விஷயங்களை வாங்கிக் கொண்டிருந்தார் முத்து. “நான் கூப்பிட்டுத்தான் பாய்ஸ் டீம் லிவ்விங் ஏரியாவிற்கு வருகிறார்கள். அதற்கெல்லாம் நீங்கள் டாஸ்க் தர முடியாது” என்று பெண்கள் அணியிடம் பிக் பாஸ் சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தை முத்துவிடம் சாச்சனா உளறிவிட்டார்.  ‘ரைட்டு. கதை அப்படிப் போகுதா?' என்று மனதில் குறித்து வைத்துக்கொண்டார் முத்து. 

‘உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியே தீர்வது’ என்கிற உறுதியில் இருக்கும் சுனிதா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரொட்டி, சீஸ் போன்றவற்றை ஏற்கெனவே எடுத்து பதுக்கி வைத்துக் கொண்டார். ஆனால் இந்தப் போராட்டத்திற்கு வர்ஷினி மட்டும் உடன்படவில்லை. ‘முட்டாள்தனமா இருக்கு’ என்பது அவரது அபிப்ராயம்.  ‘இதுக்குப் போய்லாம் யாராவது சாப்பிடாம இருப்பாங்களா?” என்று சாப்பாடு குறித்தே கவலைப்படும் அடுத்த ‘சவுந்தர்யா’வாக இருக்கிறார் வர்ஷினி.  

வீட்டுப்பணிக்கான டாஸ்க்கில் ஆண்கள் அணி எளிதாக வெற்றி பெற்றது. மூளை சம்பந்தப்பட்ட டாஸ்க் என்றால்தான் ஆண்கள் தோற்று விடுகிறார்கள். ஏதாவது கட்டையை உருட்டுவது என்றால் ஜாலியாகச் செய்து விடுகிறார்கள். 

சவுந்தர்யா - சத்யா - பரஸ்பர மன்னிப்பு 


“வெளியே போறதுக்கு 15 செகண்ட்ஸ் தாராளம். அதுக்குக்கூட  பாய்ஸ் ஒத்துக்க மாட்றாங்கன்னா.. அதுக்குக் காரணம் அவங்க ஈகோதான்’ என்று பெண்கள் அணி பேசிக்கொண்டிருந்தது.  ஒவ்வொன்றிற்கும் தங்களை டாஸ்க் செய்யச் சொல்லி இம்சிக்கும் ஆண்கள் அணி, ஒரேயொரு டாஸ்க்கைக்கூட செய்யாமல் போங்காட்டம் ஆடுவது குறித்து பெண்கள் அணி எதிர்ப்புணர்ச்சி கொள்வது நியாயமான விஷயம்தான். 

BBTAMIL 8: DAY 30

கிச்சன் ஏரியாவில் படுத்து போராட்டம் செய்து கேப்டனின் பேச்சைக் கேட்காமல் போனதற்காக சத்யாவைத் தனியாகச் சந்தித்து மன்னிப்பு கேட்டார் சவுந்தர்யா. “உங்க கிட்ட மட்டும்தான் ஸாரி கேட்பேன். உங்க டீம் கிட்ட எல்லாம் கேக்க முடியாது” என்கிற நிபந்தனை வேறு. “அப்ப.. நானும் ஸாரி.. கோவத்துல உங்களைப் பத்தி சில விஷயங்கள் பின்னாடி சொல்லிட்டேன்” என்று சத்யாவும் ஜாக்கிரதையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ‘என்னடா.. இந்தப் பொண்ணு ரவுடி மாதிரி பண்ணுது..  எப்படி உக்காந்திருக்கு பாரேன்.. Disgusting..” என்றெல்லாம் முந்தைய நாளில் வார்த்தைகளை விட்டு விட்டார் சத்யா. எப்படியும் இது காமிராவில் பதிவாகியிருக்கும், வார இறுதியில் பஞ்சாயத்து வரலாம் என்கிற அச்சம்தான் காரணம். 

“ஒரு கேப்டனா நீ மன்னிப்பு கேட்டது சரியில்ல..” என்று ஜெப்ரியும் முத்துவும் சத்யாவிடம் தங்களின் ஆட்சேபத்தை தெரிவித்தார்கள். ஆனால் சத்யாவிற்குத்தானே அதன் முழு காரணமும் தெரியும்?!  குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

போராட்டத்தை அறிவித்த பெண்கள் அணி

‘30 செகண்ட்ஸ்’ விவாதம் மீண்டும் சூடுபிடித்தது. இந்தச் சமயத்தில் முத்து வாயை விட்டு விட்டார். “இந்த விஷயத்துல பிக் பாஸ் சொல்லிட்டாராமே.. டாஸ்க் எதுவும் தரக்கூடாதுன்னு.. சாச்சனாவை கூப்பிட்டு விசாரிங்க” என்று முத்து போட்டுக் கொடுத்தது ஒரு சறுக்கல்.  சாச்சனாவின் பெயரைக் குறிப்பிடாமல் ‘எங்களுக்கு எப்படியோ தெரிஞ்சது’ என்று பெண்கள் அணியைக் குழப்பி விட்டிருக்கலாம்.  “இந்த டாஸ்க் பத்தி ரூல் புக்ல இருக்கா?” என்று ஆண்கள் அணி கேட்டது ஒரு நல்ல வாதம். ஏனெனில் வீட்டிற்குள் வரும் போது செய்த ஒப்பந்தம் ‘ரூல் புக்கில் இருக்கா?” என்றுதான் பெண்கள் அணி கேட்டு வாதிட்டார்கள். எனவே இப்போது அதையே ஆண்கள் அணி கேட்பது சரியான லாஜிக்.

BBTAMIL 8: DAY 30

“நான் என் முடிவை நேத்தே சொல்லிட்டேன். 30 செகண்ட்ல வருவாங்க. அம்புட்டுதேன்’ என்று அவருக்கே நம்பிக்கையில்லாத குரலில் இறுதித் தீர்ப்பாக சொன்னார் சத்யா. ஆனால் அதை யாருமே மதிப்பதாகத் தெரியவில்லை.  “இது ரூல் புக்ல இருக்கா.. போய் பிக் பாஸ் கிட்ட கேட்டு மாத்திட்டு வரச் சொல்லுங்க. ஃபாலோ பண்றோம்” என்று ஆண்கள் அணி சார்பில் முத்து மாதிரியே பேசி அசத்தினார் அருண். 

“நாங்க எவ்வளவு இறங்கி வந்தாலும் நீங்க ஒத்துக்கறதா தெரியல.  ஸோ.. பெண்கள் அணியில் பெரும்பான்மையானவங்க கிச்சன் அடுப்பு பக்கமே வர மாட்டோம்” என்று தீர்மானமாக அறிவித்தார் சுனிதா. அவர் பெரும்பான்மை என்று சொன்னது வர்ஷினியை மனதில் வைத்துக் கொண்டுதான். (அப்ப.. பசிக்கும்ல’ என்கிற மோடில் வர்ஷினி அடம்பிடிக்கிறார்). 

தொடரும் முத்துக்குமரனின் சறுக்கல்கள்


“பிக் பாஸ் நம்ம கிட்ட சொன்ன விஷயம் பாய்ஸ் டீம் கிட்ட எப்படிப் போச்சு?” என்று சாச்சனாவிடம் கிடுக்குப்பிடி போட்டார் ரியா. எதிலாவது மாட்டிக் கொண்டால் கீச்கீச்சென்று கத்துவது சாச்சனாவின் வழக்கம். இந்த முறையும் அதே போல் “இந்த விஷயம் எல்லோருக்கும்தான் தெரியும். மூடி மறைக்க அவசியமில்லை” என்று சாச்சனா கத்தியது அபத்தம்.  ‘இரண்டு அணியிலும் இருக்கிறார்’ என்கிற பொதுவான குற்றச்சாட்டு சாச்சனா மீது நிரந்தரமாக இருக்கிற போது முத்துவிடம் அவர் வாயை விட்டது தவறு. யாராவது குற்றம் சாட்டினால் அழுது ஊரைக் கூட்டுவதும் தவறு. ‘சின்னப் பெண்ணை அழ வைத்தால் மக்கள் நம்மை தவறாக நினைப்பார்கள்’ என்பதால் பெண்களும் தங்களின் கண்டிப்பை மென்மையாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

பெண்கள் அணியால் சாச்சனா விசாரிக்கப்படுவதையும், பதிலுக்கு சாச்சனா கதறுவதையும் கேட்டு முத்துவிற்கு பதட்டம் ஏற்பட்டு விட்டது. “சாச்சனா.. இந்தப் பக்கம் வாம்மா” என்று தெய்வத் திருமகள் விக்ரம் மாதிரி பாசத்தில் கதற ஆரம்பித்து விட்டார். புத்திசாலி ஆட்டக்காரரான முத்துக்குமரன் சறுக்கி விழும் இடம் இது. “சாச்சனாவை அவங்க டார்கெட் பண்றாங்க மச்சான்..” என்று முத்து கதற “அதை அவ பார்த்துப்பா” என்று ரயான் சமாதானப்படுத்தியது சரியான விஷயம். 

சவுந்தர்யாதான் பொதுவாக மற்றவர்களிடம் ஒரண்டை இழுத்து இம்சை தருவார். ஆனால் அவருக்கே இம்சை தந்த சாச்சனாவை பாராட்ட வேண்டும். ‘அது எப்படி என்னை தப்பா சொல்லலாம்?” என்று விடாமல் மல்லுக்கட்டிய சாச்சனாவிடம், ஒரு கட்டத்தில் ‘யப்பா சாமி. ஆள விடு’ என்று சவுந்தர்யா கையெடுத்துக்  குமபிட வேண்டியதாயிற்று. (வல்லவனுக்கு வல்லவன்!)

பிக் பாஸ் எடுத்த அட்டகாசமான  ராஜதந்திர பாடம் 


AVP டாஸ்க் விவகாரம் முடிவிற்கு வராமல் இழுத்துக் கொண்டே போவதால் “பிக் பாஸ். என்னை கன்ஃபெஷன் ரூமிற்கு கூப்பிடுங்க” என்று பரிதாபமாக கோரிக்கை வைத்தார் சத்யா. இது அவரது செயலின்மையைக் காட்டுகிறது. இந்த விஷயத்தை பிக் பாஸ் எப்படி ஹாண்டில் செய்தார் என்பதை ஒரு பாடமாகக்கூட நாம் கற்றுக் கொள்ளலாம். தவறில்லை. அப்படியொரு ராஜதந்திரம். 

கோரிக்கை வைத்த சத்யாவை அழைக்காமல், முத்து மற்றும் ஆனந்தியை உள்ளே அழைத்தார் பிக் பாஸ். அவர் அழைத்தது டாஸ்க் லெட்டர் குறித்து என்றாலும் கூட இந்த விஷயத்தை அவர்கள் கிளப்புவார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அது தவிர சத்யாவும் ‘டேய் முத்து.. இதையும் கொஞ்சம் கேளேன்” என்று முன்பே கெஞ்சியிருந்தார்.

BBTAMIL 8: DAY 30

சத்யாவை பிக் பாஸ் அழைக்காததற்கு காரணம் “இந்த விஷயத்தைக் கையாள உங்களுக்குத் திறமையில்லை” என்பதை மறைமுகமாக உணர்த்துவதே. நிர்வாகப் பணிக்காக, முதலாளி சம்பளம் கொடுத்து ஒரு தொழிலாளியை நியமிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.  ஆனால் அந்த தொழிலாளியோ, ஒவ்வொரு விஷயத்திற்கும் “முதலாளி.. இங்க ஒரு பிரச்சனை.. எப்படி சரி செய்யறது?” என்று கேட்டுக் கொண்டேயிருந்தால் எப்படியிருக்கும்? “அதைச் செய்யறதுக்குதானே உன்னை நியமிச்சிருக்கேன்” என்று முதலாளி எரிச்சலாவாரா, மாட்டாரா? பிக் பாஸ் இதைக் கையாள்வதும் அப்படித்தான். 

பிக் பாஸே தலையிட வேண்டிய விஷயம் என்றால் அவர் நிச்சயம் உள்ளே வந்து விடுவார். மற்றபடி இந்த ஆட்டத்தை போட்டியாளர்கள்தான் சுவாரசியமாகவும் சுயமாகவும் நடத்திச் செல்ல வேண்டும். “பிக் பாஸ் கிட்ட இதைக் கேட்டுக்கலாம்” என்று போட்டியாளர்களின் வாயில் இருந்து வார்த்தைகள் வரவே கூடாது. அவர்களாகவே தீர்மானம் செய்துதான் ஆட்டத்தை நகர்த்த வேண்டும். அதில் ஏதாவது என்றால் பிக் பாஸ் தன்னாலேயே உள்ளே வருவார்.  திறமையான போட்டியாளர் என்றால் பிக் பாஸிற்கே ஆட்டம் காட்டலாம். 

‘இது சத்திய சோதனை இல்ல. சத்யா சோதனை’ - நக்கலடித்த பிக் பாஸ்


முத்துவும் ஆனந்தியும் கன்பெஷன் அறைக்குச் சென்ற போது பிக் பாஸ் நடத்திய உரையாடல் இருக்கிறதே? அட்டகாசம். “அய்யா.. ஒரு பிரச்சினை போயிட்டிருக்குய்யா”.. இது முத்து. “அப்படியா. என்ன பிரச்சினை?” - இது பிக் பாஸ். என்னவொரு நக்கல் பார்த்தீர்களா? “சத்யாவிற்கு ஒரு கேள்வி இருக்குங்கய்யா..” - இது முத்து. “அப்ப அவர்தானே பதில் தேடணும்?” - இது பிக் பாஸ். 

“இங்க. பாருங்க. நீங்க ஸ்கூல் ஸ்டூடண்ட் இல்ல. ஒரு பிரச்சினைன்னா நீங்களாத்தான் பேசி தீர்வு கண்டுபிடிக்கணும் . ஆட்டத்தை சுவாரசியமா எப்படி முன்னேற்றிக் கொண்டு செல்றதுன்னு யோசிக்கணும். விதிமுறைக்கு உட்பட்டு செய்யுங்க. செஞ்சு பார்த்தாதானே தெரியும்?” என்றெல்லாம் பாடம் எடுத்த பிக் பாஸ் “சத்திய சோதனை கேள்விப்பட்டிருக்கேன். இது சத்யா சோதனை. அவரு புலம்பினதுன்னு எனக்கும் கேட்டுச்சு. விசாரிச்சேன்னு சொல்லுங்க” என்று செய்த நக்கல் எல்லாம் ‘வேற லெவல்’ ரகம். இது போன்ற சமயங்களில் பிக் பாஸின் ஆளுமையை வியக்கவும் ரசிக்கவும் முடிகிறது. 

BBTAMIL 8: DAY 30

அப்பா தலையைக் கண்டதும், சண்டையை நிறுத்திக் கொள்ளும் பிள்ளைகளைப் போல, பிக் பாஸின் தலையீட்டிற்குப் பிறகுதான் இரண்டு அணிகளும் இறங்கி வந்தார்கள். இதன் பிறகு ஒரு டெய்லி டாஸ்க் நடந்தது. இதில் ஆண்கள் அணி வெற்றி பெற்றது. (இந்த முறையாவது நாமினேஷன் பாஸை ஆண்கள் வெல்வார்களா?)

AVP டாஸ்க் விவகாரத்தில் இரண்டு அணிகளைச் சேர்ந்த எல்லோருமே வளவளவென்று பேசுவதால் பிரச்சினை தீரவே தீராது. ஒவ்வொரு அணியிலும் பிரதிநிதிகள் மட்டும் பேசியிருக்க வேண்டும். இப்போது அப்படித்தான் நிகழ்ந்தது. முத்து, சத்யா, ஆனந்தி ஆகிய மூவர் மட்டும் பேசினார்கள்.  “எங்களுக்கும் நிகழ்ச்சியை சுவாரசியமாக்கறதுதான் நோக்கம். டாஸ்க் செய்ய பின்வாங்கலை. ஆனா கட்டாயப்படுத்தினாதான் மண்டைக்குள்ள நண்டு பிராண்டுது. பல கட்ட பேச்சு வார்த்தைகள் மூலமாக இதை விரிவாக்கிக் கொண்டே செல்லலாம்” என்று முத்து சொல்ல “எப்படியோ. பிரச்சினை முடிவுக்கு வந்தா சரி” என்று ஆனந்தியும் சத்யாவும் நிம்மதியடைந்தார்கள். 

தற்காலிக முடிவிற்கு வந்த போராட்டம் - பெண்களுக்கு வெற்றியா, தோல்வியா?


“முப்பது செகண்டுக்குள்ள அவங்க போயிடுவாங்க. அதுக்குள்ள என்ன சுவாரசியமா பண்ண முடியுமோ.. பண்ணுவாங்க.. இது தற்காலிகம்தான். போகப் போக டெலவப் பண்ணிக்கலாம்” என்று பெண்களிடம் ஆனந்தி சொன்னதை அவர்களும் ஒருவழியாக ஏற்றுக் கொண்டார்கள். “இது டாஸ்க் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. நமக்கும் உரிமை இருக்குன்றதை அவங்களுக்கு நிரூபிச்சிருக்கோம். அதுதான் முக்கியம்” என்று மஞ்சரி சொன்னது சரியான பாயிண்ட். “ஓகே.. வாங்க.. போய் சமைச்சு சாப்பிடலாம்” என்று சுனிதா சொன்னதும் யார் மகிழ்ச்சியடைந்திருப்பார்களோ, இல்லையோ, நிச்சயம் வர்ஷினி சந்தோஷம் அடைந்திருப்பார். 

‘கடந்த வந்த பாதை’ என்கிற வீக்லி டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். புதிய என்ட்ரிகள்தான் இதன் நீதிபதிகளாக இருப்பார்கள்.   மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் ‘STOP’ என்கிற பலகையைக் காட்டினால் கதை சொல்பவர் நிறுத்தி விட வேண்டும். இந்த டாஸ்க்கில் தோற்றவருக்கு ஒரு வெடிகுண்டு தரப்படும். அடுத்த பலியாடு வரும் வரை அந்த வெடிகுண்டை அவர் கீழே வைக்காமல் சுமக்க வேண்டும். கடைசியாக பாம் வைத்திருப்பவர் நேரடியாக நாமினேட் ஆவார். 

BBTAMIL 8: DAY 30

வட்டிக்கடை சேட்டு மாதிரி மாதிரி கார்டன் ஏரியாவில் திண்டு, திவான்கள் எல்லாம் போடப்பட்டிருந்தன. ஜெப்ரி, சாச்சனா, விஷால், முத்து ஆகியோர் சொன்ன கதைகள் உருக்கமாக இருந்தன. அடிமட்டத்திலிருந்து முட்டி மோதி முன்னுக்கு வருபவர்களின் கதை எல்லோருக்குமே பிடிக்கும். தீபக்கின் கதை சற்று சொகுசாக இருந்ததால் புதிய என்ட்ரிகளில் மூன்று பெண்களும் ‘ஸ்டாப்’ அட்டையைக் காட்டினார்கள். எனவே தீபக்கிற்கு வெடிகுண்டு வழங்கப்பட்டது.  தூங்கும் நேரம், சுச்சா போகும் தவிர மற்ற நேரத்தில் அவர் இதை சுமந்திருக்க வேண்டும். 

புதிய என்ட்ரிகளில் மஞ்சரி, ரியா, ரயான் ஆகியோர் மட்டும்தான் வாயைத் திறந்திருக்கிறார்கள். மற்றவர்கள் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரியே உலவுகிறார்கள். AVP டாஸ்க் அமுலுக்கு வரும் போது ஆண்கள் அணி எப்படி சுவாரசியப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 


பெண்கள் அணி செய்த கலகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்சில் வந்து சொல்லுங்கள். 



from விகடன்

Comments