‘ஆள் மாறாட்டம்’ டாஸ்க், இந்த எபிசோடை மிகவும் சுவாரசியப்படுத்தியது. அதிலும் சுனிதாவாக உருமாறிய சவுந்தர்யா செய்த ஃபர்பாமன்ஸ் இருக்கிறதே…! அடடா.. ரகளை. அட்டகாசம் செய்து விட்டார். சவுந்தர்யா, ‘சவுண்டாக’ வெளிப்பட்ட தருணம் இன்று. ஜெப்ரியாக மாறிய ரஞ்சித் செய்த சம்பவங்களும் சிறப்பு. பிக் பாஸ் எதிர்பார்த்தபடியே இந்த டாஸ்க்கின் மூலம் சில புதிய புகைச்சல்கள் வெற்றிகரமாக எழுந்தன.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 23
‘டன்டணக்கா’ பாடலுடன் பொழுது விடிந்தது. முத்து வேண்டுகோள் வைத்தபடி அனைவரும் வெளியில் வந்து கார்டன் ஏரியாவில் நடனமாடினார்கள். தனியாக ஆடும் வழக்கமுள்ள சவுந்தர்யாகூட இந்த ஜோதியில் வந்து ஐக்கியமானார். ‘வீட்டுப்பணி டாஸ்க்கை’ ஆரம்பித்தார் பிக் பாஸ். இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி, வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். ஏரியா தாண்டும் ஒவ்வொரு முறையும் அனுமதி கேட்கவேண்டும். இந்த டாஸ்க்கிற்கான அறிவிப்பை சுவாரசியமாக நிகழ்த்தினார் தீபக்.
‘என்னடா... இது .. நாமும் எத்தனையோ வருஷமா ஆங்க்கரா இருக்கோம். இந்த முத்து பய வந்து பயங்கரமா ஸ்கோர் பண்றானே?” என்று தீபக்கிற்குள் உறுத்தியதோ, என்னமோ?! போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் கொக்கி குமாரு, குவார்ட்டரு கோவிந்தன் என்பது போல ரைமிங்காக அடைமொழி வைத்து அசத்தினார்.
அடைமொழி வைத்து அசத்திய ‘தீப்பொறி’ தீபக்
‘ஸ்ட்ராட்டஜி கிங்’ முத்து, ‘டாக்கிங் க்வீன் ஆனந்தி’, `இளம் தளிர்' சாச்சனா, ‘தீப்பொறி' தீபக், ‘ஜாகுவார்' ஜாக்குலின் என்று அவர் வைத்த பட்டப் பெயர்கள் நீண்டு கொண்டேபோனது. ‘பவித்ராவை விட்டுட்டீங்களே’ என்று பிக் பாஸே வந்து கேட்குமளவிற்கு சுவாரசியம். ‘பழைய சோறு' பவித்ரா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தீபக். நல்லவேளை! ‘எனக்கு?’ என்று பிக் பாஸ் கேட்டிருந்தால் ‘பிக்காலிப்பய' பிக் பாஸ் என்று சொல்லித் தொலைத்திருப்பாரோ, என்னமோ!.
என்ன போட்டி அது? ஒரு கையில் பெட்டி மாதிரியான விஷயம். இன்னொரு கையில் எதிராளியைத் தாக்குவதற்கு பலூன் உருட்டுக்கட்டை. தனது பெட்டியைப் பாதுகாத்துக் கொள்ளும் அதே வேளையில் எதிராளியின் பெட்டியை கீழே விழச் செய்ய வேண்டும் என்பதுதான் டாஸ்க். மிக ஜாலியாக நடந்து முடிந்த ஆட்டம் இது.
முதலில் ஆடிய மூன்று ஜோடிகளில் ஆண்களே தொடர்ந்து வெற்றி பெற்றார்கள். அடுத்ததாக ஆண்கள் அணியில் இருந்து சவுந்தர்யாவும், பெண்கள் அணியில் இருந்து அன்ஷிதாவும் மோதினார்கள். அதுவரை காமெடியாக சென்ற ஆட்டத்தை மாற்றி இவர்கள் சீரியசாக ஒருவரையொருவர் உக்கிரமாக மொத்திக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில் சவுந்தர்யாவின் பெட்டி கீழே விழ அன்ஷிதா வெற்றி பெற்றார். ஆனால் அவருடைய பெட்டியை நெஞ்சில் வைத்துப் பிடித்துக் கொண்டதால் ‘வெற்றியா, இல்லையா?’ என்று குழப்பம் ஏற்பட்டது. ‘நீங்களே முடிவெடுங்க.. என் கிட்ட வராதீங்க’ என்று பிக் பாஸ் அறிவிக்க ‘ரீமேட்ச்’ என்று துணிச்சலாக அறிவித்தார் நடுவர் பவித்ரா.
மீண்டும் அந்த ஆக்ரோஷமான போட்டி துவங்கியது. இந்த முறை சவுந்தர்யா வெற்றி பெற்று ‘ஹே.. ஹே.. யார் கிட்ட?’ என்கிற மாதிரி கெத்தாக செல்ல, அன்ஷிதாவிற்கு பயங்கர கடுப்பு. பிறகு வந்த ரஞ்சித், வழக்கமான பாணியில் டான்ஸ் ஸ்டெப் எல்லாம் வைத்து சிலம்பப் போட்டிக்கு செல்வது போல் மண்ணை தொட்டுக் கும்பிட்டு ஓவர் சீன் போட்டார். இத்தனை பில்டப் தந்தும் சுனிதாவிடம் தோற்று விட சூழல் கலகலப்பாக மாறியது. ஆக.. ஆண்கள் அணி இந்த டாஸ்க்கில் வெற்றி. பெண்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்தாக வேண்டும். அதற்கான அணிகள் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
சுவாரசியத்தை ஏற்படுத்திய ‘ஆள் மாறாட்ட’ டாஸ்க்
‘கஷ்டமான டாஸ்க் கொடுத்து லேடீஸ் அணியை கதற வைங்க’ என்று முந்தைய எபிசோடில் அருணை சவுந்தர்யா ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார், அல்லவா? ‘சரி. நாளைக்கு வெச்சு செஞ்சுடலாம்’ என்கிற மாதிரி அருணும் உற்சாகமாக வாக்கு தந்தார், இல்லையா?... ஆனால் சவுந்தர்யா பாய்ஸ் டீமை பெண்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பது அருணுக்கு உறைத்திருக்கிறது போல. “எங்களைச் சொல்லாத.. நீ முதல்ல பண்ணுன்னு அவ கிட்ட சொல்லிடப் போறேன். நீ நினைக்கற அளவுக்கு நாங்க முட்டாள் கிடையாது. நீயும் அவ்ளோ புத்திசாலி கிடையாது. பாய்ஸ் டீம் கிட்ட விளையாடத’” - இப்படியெல்லாம் சவுந்தர்யாவிடம் அருண் சொல்லி விடப் போகிறாராம். இதை சத்யாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அருணும் சரியாக யோசிக்கத் தெரிந்தவர் என்பது வெளியான தருணம் இது.
‘வீக்லி டாஸ்க்’. ஒருவர் இன்னொரு போட்டியாளராக மாறி அவருடைய நடை, உடை, பாவனையை செய்து அந்தக் கேரக்டராகவே வாழ வேண்டும். பிக் பாஸ் வீட்டில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வை நாடகமாக நடத்த வேண்டும். அதுவரை சவசவவென்று சென்று கொண்டிருந்த எபிசோடை இந்த டாஸ்க்தான் சுவாரசியமாக மாற்றியது.
யார் யார் எந்த கேரக்டராக மாற வேண்டும் என்பதை பிக் பாஸே தீர்மானித்து ஆட்களை சரியாகக் கோத்து விட்டார்.
அந்தப் பட்டியலைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். ஜாக்குலின் (அன்ஷிதா), சவுந்தர்யா (சுனிதா), சுனிதா (சாச்சனா), சாச்சனா (ஆனந்தி), அன்ஷிதா (ஜாக்குலின்), ஆனந்தி (சவுந்தர்யா), பவித்ரா (தர்ஷிகா), தர்ஷிகா (பவித்ரா). இது பெண்கள் அணியின் வரிசை.
ஆண்கள் அணியைப் பார்க்கலாமா?
அருண் (சத்யா), சத்யா (அருண்), ஜெப்ரி (தீபக்), விஷால் (முத்து), தீபக் (விஷால்), ரஞ்சித் (ஜெப்ரி), முத்து (ரஞ்சித்).
சுனிதாவாக மாறி அட்டகாசம் செய்த சவுந்தர்யா
இதில் சவுந்தர்யா, ஜாக்குலின், ரஞ்சித் ஆகிய மூவரும் கேரக்டராக மாறி தங்களின் ஃபர்பாமன்ஸில் பிரித்து மேய்ந்து விட்டார்கள். இதன் டாப் லிஸ்டில் சவுந்தர்யாவைத்தான் சொல்ல வேண்டும். மற்ற ஏதாவது ஒரு கேரக்டரைக் கொடுத்திருந்தால் கூட வழக்கம் போல் அவர் சொதப்பியிருக்கலாம். ஆனால் பரம விரோதியான சுனிதாவின் கேரக்டர் கிடைத்ததும், மனதில் உள்ளதையெல்லாம் உருத்திரட்டி, சுனிதாவாக மாறி சுனிதாவின் அலப்பறைகளைக் கச்சிதமான உடல்மொழியில் வெளிப்படுத்தினார்.
தலையை நிமிர்த்தி டாக் டாக் என்று நடப்பது, சின்ன விஷயத்திற்குக் கூட கோபப்பட்டு ஹைடெஸிபல் ஆங்கிலத்தில் கத்துவது, அன்ஷிதாவுடன் ஈஷிக் கொண்டே இருப்பது, அவருடைய தோளில் சாய்ந்து அழுவது என்று இன்றைய நாள் சவுந்தர்யாவின் ராஜாங்கமாக அமைந்தது. ‘இத்தனை நாள் அமைதியாக இருந்த பெண்ணா இது?! என்று ஆச்சரியப்பட வைத்து விட்டார். குழந்தை மாதிரி கீழே விழுந்து உருண்டு பிரண்டு சுனிதா மாதிரியே நடித்த காட்சியில் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அடுத்ததாக ரஞ்சித். பிக் பாஸ் போட்டியாளர் என்கிற நிலையில் இருந்து சற்று விலக்கி வைத்து விட்டு அவருடைய வெளியுலக ஸ்டேட்டஸை வைத்துப் பார்ப்போம். பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர். சீனியர் ஆக்டர். அவர் நினைத்திருந்தால் ஜெப்ரி போல நடிப்பதை சாதாரணமாக செய்து விட்டுப் போயிருக்கலாம். ஆனால் மீசையை எடுத்து விட்டு டவுசர் அணிந்து கொண்டு ஒரு விடலை இளைஞன் மாதிரியே வீடெங்கும் உற்சாகமாக ஓடியாடிக் கொண்டிருந்த அந்த அர்ப்பணிப்பை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
மூன்றாவதாக ஜாக்குலினை சொல்ல வேண்டும். அன்ஷிதாவின் ரோலை எடுத்துக் கொண்டு சிறப்பாகச் செய்துவிட்டார். எப்போதும் சுனிதாவுடன் இருப்பது, தோளில் சாய்ந்து கொள்வது, கோபம் வந்தால் மலையாள வாசனையுடன் கூடிய `தமிளில்' ‘இல்லா.. இல்லா.. ‘என்று ஹிஸ்டீரிக்கலாக கத்துவது என்று அந்த உடல்மொழியைச் சரியாகச் செய்துகாட்டினார். சவுந்தர்யாவின் பாத்திரத்தில் நடித்த ஆனந்தி, அந்த ‘கரகர’வென்கிற வாய்ஸை மிமிக்ரி செய்த விதமும் நன்று. “மச்சான்.. சாவடிக்கறாங்க.. மச்சான்.. சான்ஸே தரமாட்றாங்க” என்று ஜெப்ரி பாத்திரத்தில் நடித்த ரஞ்சித்திடம் புலம்பிக் கொண்டே இருந்த காட்சிகள் சுவாரசியமானவை.
முத்து மாதிரி நடித்த விஷாலின் பங்களிப்பும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. முழுக்கை சட்டையை ஏற்றி விட்டுக் கொண்டு மற்றவர்களுக்கு யோசனை சொல்வது, கூட்டத்தைக் கூட்டுவது என்று அந்த உடல்மொழியைச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.
‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது?” - சுனிதா, அன்ஷிதா மைண்ட் வாய்ஸ்
பிக் பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளைப் பிறகு நாடகமாகவும் நடித்துக் காட்டினார்கள். சுனிதா மாதிரியே ரோபோட்டிக் அசைவுகளில் சவுந்தர்யா ஆடிக் காட்டிய விதம் சிரிப்பை வரவழைத்தது. ‘நானும் ஹீரோதான்’ என்று அருணின் டயலாக்கை சத்யா நடித்துக் காட்டிய காட்சியும் நன்று. கேப்டன் ஆவதற்கு முன், கேப்டன் ஆனதற்குப் பின் என்று சத்யாவின் உடல்மொழியின் மாற்றங்களை அருண் நடித்துக் காட்டியது சிறப்பானதாக இருந்தது.
‘இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. நாளை வேக்அப் பாடலில் இருந்தே இது துவங்கி விடும். நல்லாப் பண்ணீங்க. ஆனா உங்களால இன்னமும் சிறப்பா பண்ண முடியும்” என்கிற அறிவிப்பை வெளியிட்டு ‘ஐ வான்ட் மோர் எமோஷன்’ என்கிற நோக்கத்தை வெளிப்படுத்தினார் பிக் பாஸ்.
ஆள் மாறாட்ட டாஸ்க், பிக் பாஸ் எதிர்பார்த்த சலனங்களை வீட்டிற்குள் ஏற்படுத்தியது. பெண்கள் கமிட்டி மூன்றாகப் பிரிந்திருக்கிறது. சுனிதா, அன்ஷிதா, ஆனந்தி ஆகிய மூவரும் கூடிப் கூடிப் பேசுகிறார்கள். தர்ஷிகாவும் பவித்ராவும் தனியாவார்த்தனம் செய்கிறார்கள். ஒதுக்கப்படுபவர்களின் பிரதிநிதியாக சாச்சனாவும் சவுந்தர்யாவும் இருக்கிறார்கள். ஜாக்குலின் ஆட்டம் தனியாக போய்க் கொண்டிருக்கிறது.
தன்னை இமிடேட் செய்த சவுந்தர்யாவின் ஃபர்பாமன்ஸைப் பார்த்து அப்போதைக்கு சிரித்து வைத்தாலும் சுனிதா மற்றும் அன்ஷிதாவிடம் உள்ளுக்குள் எரிச்சலும் புகையும் அதிகமாகிக் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. ‘என்னை ரொம்ப இரிடேட் பண்றாடா.. என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குது’ என்று பொரும ஆரம்பித்திருக்கிறார் சுனிதா. இதன் விளைவுகள் அடுத்த நாளில் தெரியும். ‘
`சூழலுக்கு ஏற்ப ஆட்களிடம் ஒட்டிக் கொள்கிறார்’என்று ஜாக்குலினைப் பற்றி இந்தக் கூட்டணி புறணி பேசிக் கொண்டிருந்தது. ‘யாரும் யாரும் பிரெண்ட்ஸூ?’ என்கிற கணக்கை இன்னொரு பக்கம் சவுந்தர்யாவிடம் சாச்சனா சொல்லிக் கொண்டிருந்தார். இப்படியாக மூலைக்கு மூலை வம்புகளும் புறணிகளும் ஆறாகப் பெருகிக் காெண்டிருந்தன. ஜாக்குலின் பிளானைப் பற்றி தர்ஷிகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜெப்ரி.
ஆண்கள் அணி மீண்டும் முரட்டுத்தனத்தைக் காட்டியதா?
அடுத்ததாக ஒரு டாஸ்க். இது உடல் வலுவைக் கோரும் போட்டி. ஒவ்வொரு அணியிலும் மூன்று நபர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நிறங்களில் பந்துகள் தரப்படும். ஒரு வளையத்திற்குள் இரு அணிகளைச் சேர்ந்த ஆறு நபர்களும் நிற்க வேண்டும். தங்களின் நிறம் இருக்கும் பந்துகளை நோக்கி வளையத்தை இழுத்துச் சென்று அனைத்துப் பந்துகளையும் பெட்டியில் போட வேண்டும். ஆண்கள் அணியில் சத்யா, முத்து, ஜெப்ரி. பெண்கள் அணியில் சுனிதா, சாச்சனா, மற்றும் விஷால். வளையத்தை தன்னுடைய திசையில் இழுப்பதற்கு வலுவான நபர் தேவை என்பதால் பெண்கள் அணி விஷாலை அனுப்பி வைத்தது நல்ல மூவ். ஆனால் ‘இந்த டாஸ்க்கிற்கு நானும் போவேன்’ என்று சாச்சனா அடம் பிடித்ததும், வேறு வழியின்றி பெண்கள் அணி அதற்கு ஒப்புக் கொண்டதும் தவறான மூவ்.
அனைவரையும் விட சத்யா வலுவானவர் என்பதால் ஆட்டத்தில் அவருடைய ஆக்ரமிப்பு அதிகமாக இருந்தது. எல்லோரையும் எளிதாக இழுத்துச் சென்று தன்னுடைய பந்துகளை நோக்கி நகர்ந்து பெரும்பாலானவற்றை போட்டு விட்டார். அதே போல் ஜெப்ரியின் பக்கமும் இழுத்துச் செல்ல உதவி செய்து அதையும் முடித்து விட்டார்கள். முத்துவின் பக்கம் இருக்கும் பந்துகளை போடுவதற்குத்தான் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால் கழுத்து, தலை, உடம்பு, கிட்னி, ஹார்ட் என்று அனைத்தையும் பயன்படுத்தி வளையத்தை இழுத்துச் சென்று வேலையை முடித்தார் முத்து. பெண்கள் அணியில் இருந்த விஷால், ஆண்களின் ஆக்ரமிப்பை முறியடிக்க போராடினாலும் அவரால் இயலவில்லை.
சுனிதாவும் சாச்சனாவும் ஆண்களின் வலுவிற்கு எதிராகப் போட்டி போட முடியாமல் சோர்ந்து விழுந்தார்கள். அதிலும் விடாமல் போராடிய சாச்சனாவின் காலில் வலி ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக அருண் தூக்கிச் சென்றார். வாக்குமூல அறையைத் தாண்ட வேண்டிய சூழல். இந்த முறை உஷாராக அனுமதியைக் கேட்டு வாங்கிக் கொண்டது அருணின் புத்திசாலித்தனம்.
கயிற்றின் பகுதியை மாற்றிப் பிடித்தது குறித்து ஜெப்ரிக்கும் ஜாக்குலினுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதைப் போலவே கயிற்றை கையினால் பிடிக்காமல் கழுத்தைப் பயன்படுத்திய முத்துவின் செய்கையை கரிசனத்தோடு ஆட்சேபித்தார் தர்ஷிகா. ‘அதெல்லாம் ஒண்ணும் ஆகல. விதியை மீறல’ என்று வாதிட்டார் முத்து. “ஆட்டத்துல எல்லாம் சகஜம்” என்று ஸ்போர்டிவ்வாக பேசினார் அன்ஷிதா. “டாஸ்க்ல ஆடி டயர்ட் ஆனதால சுனிதா செய்ய வேண்டிய வேலையை நான் இப்ப செய்யறேன். என் வேலையை நாளைக்கு அவ செய்வா. புரிஞ்சதா.. புறணி பேசாதீங்க” என்று பொது அறிவிப்பு செய்தார் அன்ஷிதா.
அடம் பிடித்து அடி வாங்கிய சாச்சனா
இந்த டாஸ்க்கிற்கு அடம் பிடித்து சென்ற சாச்சனாவைக் கண்டித்தார் தர்ஷிகா. ‘எனக்கு கோபம் வருது. எதிராளி யாருன்னு பார்த்துதான் அதுக்கேற்ப நம்ம ஆளை முடிவு செய்யணும். இப்ப கால்ல அடிபட்டு கிடக்கற… அடுத்தது உனக்கு ஏத்த டாஸ்க் வந்தா உன்னால போய் விளையாட முடியுமா? இனிமே அடம்பிடிக்காத” என்பது அவரது அட்வைஸாக இருந்தது. “என்னை சுனின்னு கூப்பிடறாங்க… ரொம்ப ப்ரவோக் பண்றாங்கடா.. நாளைக்கும் இப்படியே போச்சுன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று பொங்கிக் கொண்டிருந்தார் சுனிதா.
“கில்லர் காயின் டாஸ்க்லயே விஜய்சேதுபதி சார் சொன்னாரு.. வெற்றி முக்கியமில்ல. ஆட்டம் சுவாரசியமா இருக்கணும்ன்னு. ஆனா பாய்ஸ் டீம் வழக்கம் போல அதைப் பண்ணலை. முரட்டுத்தனத்தைத்தான் காட்டினாங்க” என்று நள்ளிரவு தாண்டியும் சக பெண்களிடம் பஞ்சாயத்து வைத்துக் கொண்டிருந்தார் ஆனந்தி. காயின் டாஸ்க்கை வேண்டுமானால் பாஸ் செய்து ஆடி சுவாரசியப்படுத்தியிருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் உடல் வலுவை வைத்து வளையத்தை இழுப்பதில் என்ன சுவாரசியம் செய்து விட முடியும்?
ஆக.. இன்றைய டாஸ்க்கின் ஹீரோ யார் என்று பார்த்தால் அது சவுந்தர்யாதான். சுனிதா மீதுள்ள அனைத்து வன்மத்தையும் சந்திரமுகியின் ஆவியாக மாறி கொட்டியது தரமான சம்பவம். இதே போல் தொடர்ந்து செயல்பட்டால் சவுந்தர்யாவின் எவிக்ஷன் ஆபத்து தப்பிக்கலாம். இந்த எபிசோடு காரணமாக சவுந்தர்யா ஆர்மி ஒரு நாள் முன்பே தீபாவளியைக் கொண்டாடியிருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.
from விகடன்
Comments