Vettaiyan: "ஹீரோ என்றால் சரியாகத்தான் செய்வார் என்ற பிம்பம் உடைந்தது" - பிரின்ஸ் கஜேந்திரபாபு

"நீட் அட்டூழியத்திற்கு எதிராக ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் தெருவில் இறங்கி போராடாமல் இருந்திருக்கலாம். வீதியில் இறங்கிப் போராடிய திரை நட்சத்திரம் ரோகிணி வேட்டையன் மூலம் அவர்களுடன் இணைந்து நீட்-க்கு எதிராக ஒரு யுத்தத்தையே நிகழ்த்தி உள்ளனர்" என்று நெகிழ்ந்துள்ளார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பிரின்ஸ் கஜேந்திர பாபு

அனைவருக்கும் சமமான தரமான கல்வி கிடைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி விவாதித்து வரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வேட்டையன் படம் பார்த்து, அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "பிரபலங்கள் நடிக்கும் திரைப்படத்தை ரசனையே இல்லாத நான் பார்த்து என்ன பயன் என்று படம் பார்ப்பதைத் தவிர்ப்பவன். நீங்கள் 'வேட்டையன்' படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் ஆய்வு மாணவரும், திரை‌ப்பட இயக்குநராவதற்குப் பெருங்கனவோடு இயங்கி வரும் வரதராஜன்.

படத்தைப் பார்த்த பின்னர்தான், 'வேட்டையன்' படத்தைப் பார்க்காமலிருந்திருந்தால் பெரும் பாடத்தைப் படிக்க வாய்ப்பில்லாமலேயே போய் இருக்கும் என்று உணர்ந்தேன்.

பொதுவாக 'சூப்பர் ஸ்டார்' படம் என்றால் அதற்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு. 'நட்சத்திர நடிகர்' என்ற பிம்பம் உடைந்துவிடக் கூடாது என்ற வகையில் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பு ஆகியவை அமைத்துக் கொள்வது இயல்பு. அதிலும், இரண்டு பெரும் 'நட்சத்திர நடிகர்கள்' இயல்பான குணச்சித்திர நடிகர்களாக நடித்துள்ளது அவர்களின் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது.

வேட்டையன்

படத்தின் தொடக்கக் காட்சிகளிலும், சில சண்டைக் காட்சிகளிலும், இசையமைப்பாளர் அனிருத் அவர்களுடன் இணைந்து நடனமாடியுள்ள முதல் பாடல் காட்சிகளிலும் மட்டும்தான் சூப்பர் ஸ்டாரான ரஜினி, பெரும்பகுதி காட்சிகளில் சிறந்த தரமிக்க குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார் என்பது நடிப்பின் மீது அவர் வைத்திருக்கும் மதிப்பையும், திரைத்துறையின் வளர்ச்சியில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகிறது.

திரைத் துறையின் முன்னணி நட்சத்திரங்களிடமும், ரசிகர்களான மக்களிடமும் படத்தின் இயக்குநர் ஞானவேல் பெற்றுள்ள நம்பிக்கையும் மரியாதையுமே, இத்தகைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முன்னணி நட்சத்திரங்கள் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் என்பதை நம்மால் உணர முடிகிறது.

'சூப்பர் ஸ்டார்' படத்தித்திற்குரிய சில சினிமாத்தனமான காட்சிகள் உண்டு. குறிப்பாகச் சண்டைக் காட்சிகளில் அவை நன்றாக வெளிப்படுகிறது. படத்தில் அவை மிகக் குறைவு என்பதும், அப்படியான அம்சங்கள் இருக்க வேண்டும் என்ற சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்காக அமைக்கப்பட்டதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் அத்தகைய காட்சிகள், எதார்த்தமான கதையுடன் ஒன்றிப் போக வைத்திருப்பதுதான் இயக்குநர் ஞானவேலின் தனித்திறமை.

காவல்துறையின் கையாலாகாத, சட்ட விரோதமான, மிக மோசமான, நடவடிக்கைகளில் ஒன்றான கைதிகளைச் சுட்டுக் கொல்லும் நிகழ்வுகளுடன் கதை தொடங்கினாலும், 'ஹீரோ என்றால் சரியாகத்தான் செய்வார்' என்ற பிம்பத்தை உடைத்து, கதையின் இறுதிப் பகுதியில் "வேட்டையன்" கதாபாத்திரம் தனது தவறான அணுகுமுறையை உணர்ந்து மன்னிப்பு கேட்பது மட்டுமல்லாமல், தான் செய்துவந்த தவறை உணர்ந்து, மற்ற பயிற்சி காவல் அலுவலர்களுக்கு விளங்க வைப்பது படத்தின் மிக முக்கியமான அம்சம்.

வேட்டையன் - பிரின்ஸ் கஜேந்திரபாபு

தவறை உணராமல் எப்படித் திருந்த முடியும்? தவறை உணர்ந்தவர்தான் மீண்டும் அத்தகைய தவறைச் செய்யக் கூடாது என்ற உறுதியை மேற்கொள்வார். அதைத்தான் திருந்துவது என்று கூறுகிறோம். திருந்தியவரை எதற்குத் தண்டிக்க வேண்டும்? அதனால்தான் விவிலியத்தில் தவறை உணர்ந்த மாத்திரத்தில் ஒருவர் மன்னிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருக்கும். இது ஒரு உளவியல் சார்ந்த அறிவியல் அணுகுமுறை.

மிகவும் அழுத்தமான கதையாடலில் நகைச்சுவை இணைப்பது மிகவும் கடினமானது. அவ்வாறு செய்யும் போது, அத்தகைய நகைச்சுவை கதையோடு ஒட்டாமல் போவதும் உண்டு. இறுக்கமான காட்சிகளில் நகைச்சுவை உணர்வுடன் தனது இயல்பான நடிப்பின் மூலம் சூழலின் இறுக்கத்தை உடைக்கும் பகத் பாசில் கதாபாத்திரம் மிகவும் அற்புதம்.

எதை எதை எந்தெந்த அளவில் தர வேண்டுமோ, அதை அதை அந்தந்தளவில் தந்துள்ளார் இயக்குநர் ஞானவேல். நான்கு முக்கிய பெண் கதாபாத்திரங்கள் படத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ளது. கதையோடு ஒன்றிப்போய் நால்வரும் மிகவும் இயல்பான நடித்துள்ளனர்.

எல்லோரும் தன்னை திருடனாகப் பார்த்த போது இருவர் மட்டுமே தன்னை மனிதனாகப் பார்த்தார்கள் என்று கூறிய 'பாட்டரி‌' இறந்த பின்னர், அவரின் கல்லறையில் தனியாக நின்று அஞ்சலி செலுத்தும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் எதை வெளிப்படுத்துகிறது? அவர்களுக்குள் மலர்ந்த மென்மையான காதலையா? தோழமையையா? சகோதர பாசத்தையா? பார்ப்பவர் கற்பனைக்கு விட்டுவிடுகிறார் இயக்குநர்.

இடைவெளிக்குப் பின்புதான் கதைக் களமே என்பதுதான் "வேட்டையன்" திரைப்படத்தின் தனித் தன்மை. "நீட்" நடைமுறை சந்தையின் சூழ்ச்சி, வணிகத்தின் சூதாட்டம் என்று பல எடுத்துக் காட்டுடன் விளக்கிப் பேசினாலும் யாருக்கும் அது புரியவில்லை. ஒரு தேர்வைப் போய் சூதாட்டம் என்று சொல்கிறார்களே என்று பலர் கவலைப்பட்டனர்.

"நீட்" ஒரு தேர்வே அல்ல என்பதை ஒவ்வொரு ஆண்டும் "நீட்" நடைமுறை வெளிப்படுத்தி வந்தது. "ஜெஇஇ" (JEE), "நீட்" ( NEET) ஆகியவற்றைத் தொடர்ந்து எந்தப் பட்டப் படிப்பிற்கும் "கியூட்" (CUET) கட்டாயமாக இருக்கும் சூழலில், "நீட்" போன்ற உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு‌ப் பின்னால் ஒளிந்திருக்கும் சந்தையின் இலாப வெறியை மிகவும் துல்லியமாக "வேட்டையன்" வெளிப்படுத்தி உள்ளது.

வேட்டையன்

தனது சமூகப் பொறுப்பை "வேட்டையன்" மூலம் வெளிப்படுத்தி உள்ளார் ரஜினிகாந்த். பல்வேறு விமர்சனங்களைத் தாங்கி நிற்கும் ரஜினி என்ற ஆளுமை 'என்றும் மக்களுக்காக நிற்பேன்' என்பதை வெளிப்படுத்தவே இந்த கதைக்களத்தில் நடித்துள்ளார் என்று தோன்றும் அளவிற்குப் படத்தில் நுழைவுத் தேர்வு என்ற பெயரில் நடக்கும் வன்முறையைக் காட்சிப்படுத்தி உள்ளனர்.

மேல்நிலைப் பள்ளிக் கல்வி மதிப்பெண் பட்டப் படிப்பு சேர்க்கைக்கு உதவாது. "நீட்" போன்ற நடைமுறை மூலம்தான் உயர்கல்விக்குப் போக முடியும் என்பது ஒரு சர்வதேச நிதி மூலதனத்தின் ( Profit hunger Global Financial Capital) இலாப வெறிக்காக உருவாக்கப்பட்ட நடைமுறை என்பதை இரண்டு பெரும் நட்சத்திரங்கள் மூலம் உலகிற்கு இயக்குநர் விளக்கியுள்ளார்.

அமிதாப்பச்சன் "நீட்" நடைமுறையின் சித்திரவதைக்கு உள்ளான குழந்தையை அரவணைத்துக் காக்கும் காட்சிகள் எதார்த்தமான வாழ்வியல் போராட்டத்தைத் திரையில் பார்க்கும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது. "கோச்சிங் சென்டர் பிரஷர் தாங்க முடியல டீச்சர்" என்ற குழந்தையின் அழுகுரல் நெஞ்சைப் பதற வைக்கிறது.

படத்தில் குழந்தை கதாபாத்திரம் வகுப்பறையிலும், கோச்சிங் கிளாசிலும் படும் துயரத்தைத் தாயாலும், சுற்றியுள்ள யாராலும் உணர முடியாத சூழலில், அந்த குழந்தையின் வலியைப் படத்தின் காட்சி உணர்த்தும் போது கண்களில் நீர் பெருக்கெடுப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

குழந்தைகளுக்குத் தேவைப்படும் ஆதரவு சூழல் குறித்து இந்தியாவில் யாருக்கும் சரியான புரிதல் இல்லை. குழந்தையின் சிக்கலை உணர்ந்து, அதைக் குழந்தையின் தாயிடம் கூறுவதால் அவர்களுக்கு விளங்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர், சிக்கலைத் தீர்க்க அவரே முயற்சிகள் மேற்கொள்ளும் ஆசிரியைக் கதாபாத்திரம் படத்தின் ஜீவனாக அமைந்துள்ளது‌. சரண்யா டீச்சர் கதாபாத்திரம் நம் மனதைவிட்டு நீங்கவே முடியாது‌.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சமூகப் பொறுப்புடன் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை சரண்யா டீச்சர் கதாபாத்திரம் ஆணித்தரமாகச் சொல்கிறது‌‌. படத்தின் கதாநாயகி, இறுதிக் காட்சியில் குழந்தையை மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் அரசுப் பள்ளியில் கொண்டுபோய் இறக்கிவிடும் காட்சி படத்தின் சிறப்பு அம்சம்.

ஆயிரம் குறைகள் சொன்னாலும் கண்ணியமிக்க குழந்தைப் பருவத்தை அரசுப் பள்ளியால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னின் கூற்றை "வேட்டையன்" மூலம் இயக்குநர் ஞானவேல் உணர்த்துகிறார்.

வேட்டையன் படத்தில்...

சாதி என்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் படத்தைப் பார்த்த பிறகு இயல்பான மனிதர்களாக மாற வாய்ப்புள்ளது. நசீமாவும், பாட்ரிக்கும் இல்லாமல் இந்தியா இல்லை. இந்தியச் சமூகத்தின் பன்முகத்தன்மையை உணர்த்திடத் தேவையான கதாபாத்திரங்களை அமைத்துள்ள இயக்குநரின் அரசியல் முதிர்ச்சியை யாராலும் பாராட்டாமல் இருக்க இயலாது.

"நீட் " அட்டூழியத்திற்கு எதிராக ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் தெருவில் இறங்கி போராடாமல் இருந்திருக்கலாம். வீதியில் இறங்கிப் போராடிய திரை நட்சத்திரம் ரோகிணி வேட்டையன் மூலம் அவர்களுடன் இணைந்து "நீட்" க்கு எதிராக ஒரு யுத்தத்தையே நிகழ்த்தி உள்ளனர்.

"வேட்டையன்" படம் மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பட்டும்.

"நீட்" போன்ற வணிக நலன் சார்ந்த நடைமுறைகள் ஒழிக்கப்பட்டு, வயதிற்கு ஏற்ப பாடத்திட்டம், சமமான கற்றல் வாய்ப்பு, பள்ளிப் படிப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை, அரசின் பொறுப்பிலும் செலவிலும் கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைத்திட இந்தியா முழுக்க எழுச்சிமிக்க குரல் எழும்ப, பல்வேறு மாநிலங்களின் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பல மொழி திரை நட்சத்திரங்கள் (Pan India Film) நடித்து வெளிவந்துள்ள "வேட்டையன்" திரைப்படத்தை மக்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



from விகடன்

Comments