சூர்யா நடிப்பில் நவம்பர் மாதம் வெளியாக இருக்கும் 'கங்குவா' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் சூர்யா, சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகரும், சூர்யாவின் அப்பாவுமான சிவகுமார், "பயங்கர மழை பெய்துகொண்டு இருந்தப்போது, நடு ராத்திரியை தாண்டி பிறந்த குட்டி பையன் சூர்யா. லயோலா காலேஜில் பி.காமிற்கு சூர்யா விண்ணப்பித்தப்போது, முதலில் 'இடம் இல்லை' என்று கூறிவிட்டார்கள். பிறகு, நான் போய் கேட்டப்போது, "சிவாஜி கணேசன் பையன் பி.காம் முடிக்கல... பாலாஜி பையன் பி.காம் முடிக்கல..உங்கள் பையனும் முடிக்கமாட்டார்" என்று கல்லூரியின் முதல்வர் கூறினார். ஆனால், நானோ என் பையன் படித்து முடிப்பான் என்று கூறி சீட்டு வாங்கி வந்தேன்.
அதே மாதிரி, பி.காம் கடைசி ஆண்டில் சூர்யாவிற்கு நான்கு அரியர் . 'கையெடுத்து கும்பிடுகிறேன். என் மானத்தை காப்பாற்று' என்று அவரிடம் சொன்னேன். அவர் அந்த நான்கு அரியரை கிளியர் செய்து பி.காம் பட்டம் பெற்றார். அதை நான் ஃபிரேம் போட்டு வைத்திருக்கிறேன்.
அதன்பிறகு, பிழைப்பிற்காக ஒரு ஏற்றுமதி கம்பெனியில் இரண்டு வருடம் வேலை பார்த்தார். கம்பெனியை கூட்டி, பெருக்கி குப்பையை கொண்டுபோய் வெளியே கொட்டுவார். வேலைக்கு சேர்ந்த ஆறு மாதத்திற்கு பிறகு, சூர்யா 'சிவகுமாரின் பையன்' என்று முதலாளிக்கு தெரிய வந்துள்ளது. இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே என்று முதலாளி கேட்டதற்கு, 'வேலைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நான் தொழில் கற்றுகொள்ள வந்திருக்கேன்" என்ற சூர்யாவின் பதிலை கேட்ட முதலாளி மிரண்டு போய்விட்டார்.
காலையில் இருந்து சாய்ந்திரம் வரை நான்கு வார்த்தை பேசாத பையன் இன்று கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். சூர்யா வாழ்க்கையில கங்குவாதான் டாப்" என்று பேசினார்.
from விகடன்
Comments