BB Tamil 8 Day 18: `அதிகாரம் காட்டிய முத்து - அழுகையுடன் சென்ற ஆனந்தி' - பெஸ்ட், வொர்ஸ்ட் யார்?

ஹோட்டல் டாஸ்க்கில் பெண்கள் அணியை விடவும் ஆண்கள் அணி சிறப்பாகச் செய்தது. ஆண்கள் செய்த சுவாரசியத்தோடு ஒப்பிடும் போது பெண்கள் அணி சுமார்தான். ஒருவரையொருவர் பிறாண்டிக் கொள்வதில்தான் அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்களே ஒழிய, சுவாரசியம் இல்லை.

முத்துக்குமரனின் கிராஃப் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. தெளிவாகப் பேசுவது, லாஜிக்கலாக மடக்குவது, திறமையாக திட்டம் தீட்டி செயல்படுத்துவது என்பதைத்தாண்டி ‘ஹோட்டல் முதலாளியின் மகனாக’ எம்.கே என்கிற கேரக்டரில் கச்சிதமான மீட்டரைப் பின்பற்றி அசத்தினார்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 18

சவுந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா ஆகியோர் பேசும் போது நமக்கு ஒரே குரலாக ஒலிக்கிறது. நகைச்சுவை நடிகர் சந்தானம் பாணியில் சொன்னால் ‘சரியாக டியூன் செய்யாத ரேடியோ’ போல. ஒலிப்பது யாரின் குரல் என்று கண்டுபிடிப்பதில் குழப்பம் நேர்கிறது.

‘தொடர்ந்து ‘பாடி ஷேமிங்’ செய்து கொண்டிருந்த விஷயம் ஒரு கட்டத்தில் தனக்கு வலிக்க ஆரம்பித்து விட்டது’ என்பதை சவுந்தர்யாவிடம் ஜாக்குலின் சொல்லிக் கொண்டிருக்க `நான் fun-க்காகத்தான் செய்தேன்’ என்று சாதித்தார் சவுந்தர்யா. ஆனால் அது பொய் என்பதாகத்தான் தெரிகிறது. சவுந்தர்யாவின் குத்தல்களில் உண்மையான பழிவாங்கும் போக்கு இருந்ததை உணர முடிகிறது.

BB Tamil 8 Day 18

பெண்கள் அணியில் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை தீவிரமடைந்திருக்கிறது. மூன்றே வெங்காயத்தை வைத்து மூன்று நாட்கள் சமாளிக்க வேண்டும். உருளைக்கிழங்கின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதால் சுனிதா டென்ஷன் ஆகி விட்டார். ‘யாரு ஆலு பரோட்டா ஆர்டர் தந்தது?’ என்று வீடு முழுவதும் சுற்றிச் சுற்றி கேட்டுக்கொண்டிருந்தார். அவர் எத்தனை முறை ‘ஆலு பரோட்டா’ என்கிற வார்த்தையைச் சொன்னார் என்று ஒரு போட்டியே வைக்கலாம். அப்படியொரு அனத்தல்.

பிக் பாஸிடம் பாராட்டு பெற்ற முத்துக்குமரன்

‘எல்லோரும் லிவ்விங் ஏரியாவுக்கு வாங்க’ என்று அழைத்த பிக் பாஸ், ‘விஷால் எங்க காணோம்?” என்று அவருடைய புதிய லுக் குறித்து நக்கலடித்தார். ‘இதுவும் நல்லாத்தான் இருக்கு’ என்பது அவருடைய பாராட்டு. வாடிக்கையாளர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து ஹோட்டல் பணியாளர்கள் பேசலாம்.

BB Tamil 8 Day 18

“கஷ்டமர்ஸ் அவங்களுக்குள்ள நடந்த சண்டையைக் கூட எங்க மேல புகாரா எழுதி வைச்சாங்க” என்றார் சாச்சனா. ‘உலகளாவிய மாடலான கரொலினோ காரவன் அளவிற்கான வசதியை எதிர்பார்த்தது சிறப்பு. ‘க்யூட்’ ஹாசினியோட ‘ஹா..ஹா’ சிரிப்பிற்கு நாங்க அடிமை. நாள் முழுக்க பார்த்துட்டே இருக்கலாம் போல. தமிழக மாடலான லிசாவிற்கு போகும் போது தலை இருக்குமான்னு டவுட்டே வந்துடுச்சு. அந்த அளவிற்கு ஸ்டைலா தலையை உதறிட்டே இருந்தாங்க. வெரி க்யூட்’ என்பது போல ஒவ்வொருவர் செய்த அலப்பறையையும் சர்காஸ்டிக் தொனியில் நக்கலடித்தார் முத்துக்குமரன். ‘குட். வஞ்சப்புகழ்ச்சி அணில கலக்கிட்டீங்க’ என்று பிக் பாஸ் பாராட்டினார்.

ஹோட்டல் டாஸ்க்கில் யார் பெஸ்ட், யார் வொர்ஸ்ட்?

ஹோட்டல் டாஸ்க்கில் யார் பெஸ்ட், யார் வொர்ஸ்ட் என்பதை ரகசிய ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்ய வேண்டும். அனைத்துப் பிரிவுகளிலும் ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் குறிப்பிட வேண்டும். பெஸ்ட் என்கிற கேட்டகிரியில் முத்து, ரஞ்சித், சுனிதா, அருண், தர்ஷா, ஜெஃப்ரி மற்றும் தர்ஷிகா ஆகியோர் வந்தார்கள். ‘என்னது நானா?’ என்று அதிர்ச்சியடைந்தவர்கள் ரஞ்சித், தர்ஷா மற்றும் அருண். பவித்ரா பார்டரில் பாஸ் ஆகி தப்பித்தார். மற்ற அனைவரும் வொர்ஸ்ட் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை.

பெஸ்ட் கேட்டகிரியில் அதிக வாக்குகளைப் பெற்று டாப் 3-ல் வந்தவர்கள் முத்து, ரஞ்சித் மற்றும் சுனிதா. அதைப் போலவே ‘வொர்ஸ்ட்’ கேட்டகிரியில் டாப் 3: சவுந்தர்யா, தீபக் மற்றும் சத்யா. சிறப்பான பங்களிப்பைத் தந்தவர்கள் வாடிக்கையாளர்களாக மாற, சுமாரான பங்களிப்பைத் தந்தவர்கள் ஹோட்டல் பணியாளர்களாக மாற, மீண்டும் இந்த டாஸ்க்கை ஆரம்பிக்க வேண்டும் என்றார் பிக் பாஸ். அதாவது முதன்முறையாக ஒவ்வொரு அணியிலும் ஆண், பெண் கலந்து இருப்பார்கள்.

BB Tamil 8 Day 18

வாடிக்கையாளர்களாக இருப்பவர்கள், அவரவர்களுக்கான கேரக்டர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். ‘கஜினி’ காரெக்டரை பவித்ரா தேர்வு செய்து கொண்டது நல்ல பொருத்தம். ஏனெனில் எதையோ மறந்து விட்டவர் மாதிரியே எப்போதும் விழித்துக் கொண்டிருப்பார். தலைமுடியை விநோதமாக அலங்கரித்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தார் ரஞ்சித். ‘ரோபோ’ காரெக்டரா என்று பார்த்தால் இல்லை. ‘டான்ஸ் மாஸ்டராம்’. அவருடைய உதவியாளர் ஜெஃப்ரி. ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவரின் மகன் எம்.கே. என்கிற முத்து. வாடிக்கையாளர் சேவை எப்படியிருக்கிறது என்பதை ரகசியமாக கண்காணிக்க வந்திருக்கிறாராம்.

‘ட்வீட்டி’ என்கிற பெயரில் சுட்டிக் குழந்தையாக மாறினார் தர்ஷிகா. ‘லவ்’ என்கிற பெயரைச் சூட்டிக் கொண்ட தர்ஷா, அம்பி -ரெமோ - அந்நியன் என்று மூன்று பாத்திரங்களில் அவ்வப்போது உருமாறுவாராம். ஹோட்டல் பணியாளர்களில், மேனேஜர் பதவியை ஏற்ற சவுந்தர்யா சக பணியாளர்களின் பொறுப்புகளை அறிவித்தார்.

அதிகாரம் காட்டிய முத்து - அழுகையுடன் சென்ற ஆனந்தி

ரிசப்ஷனில் தீபக் நிற்க, வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக அவரவர்களின் கேரக்டரில் வந்தார்கள். ரஞ்சித் வழக்கம் போல் ரிவர்ஸில் நடந்து வந்தார். என்றைக்கு குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளப் போகிறாரோ?! ‘நான் எங்க இருக்கேன்.. பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் மறந்துடுவேன்’ என்று கஜினி பாத்திரத்தில் ஓவர்ஆக்ட் செய்து இம்சையைக் கூட்டினார் பவித்ரா. ‘என்னடி.. இந்த லவ்வு.. வந்ததுல இருந்து தின்னுக்கிட்டே இருக்கு?’ என்று கிச்சன் டீமில் ஜாக்குலின் கிண்டலடித்தார்.

‘மேனேஜர் வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்’ என்பது உள்ளிட்ட புகார்களை பலகையில் எழுதினார் முத்து. தர்ஷாவிற்கு தலை மசாஜ் செய்து கொண்டிருந்த சத்யாவைப் பார்த்து ஷாக் ஆகி நின்றார் ரஞ்சித். ‘என்னா மேன். ஸ்பா ஓப்பன் ஆயிடுச்சான்னு நான் கேட்டப்ப இல்லைன்னு சொன்னே.. இப்ப என்னடான்னா அந்தப் பொண்ணு தலையைத் தடவிட்டு இருக்கே?” என்று ரஞ்சித் கேட்க எதையோ சொல்லி சமாளித்தார் சத்யா.

BB Tamil 8 Day 18

சப்-டைட்டிலுடன் ஒரு சம்பவம் நடந்தது. வேகமாக வந்த ஆனந்தி கண்ணாடிக் கதவில் முட்டிக் கொள்ள “என்ன அங்க சத்தம்.. பார்த்து கவனமா வர மாட்டீங்களா?” என்று முதலாளித்துவக் குரலில் முத்து கேட்டு விட “கண்ணாடில இடிச்சிக்கிட்டேன். பணியாளர்களின் பாதுகாப்பு உங்களுக்கு முக்கியமில்லையா?” என்று அவரிடம் கேட்டு விட்டு கிச்சன் ஏரியாவில் சென்று கண்கலங்கினார் ஆனந்தி. ஜாக்குலின் அவரைச் சமாதானப்படுத்தினார். திடீரென்று ஆவேசம் வந்தவரைப் போல தர்ஷா அந்நியன் மோடிற்கு மாறி ஓவர்ஆக்ட் செய்தார்.

ரெவ்யூ டைம். ‘மானேஜராக இருக்கும் சவுந்தர்யா, எனக்கு மசாஜ் செய்தது காரெக்டர் மீறல்’ என்று சுனிதா சுட்டிக் காட்டியது சரியான பாயிண்ட். அந்தக் காட்சியைப் பார்க்கும் போதே தோன்றியது. ‘புருஷன் பொண்டாட்டி நடுவுல கோள் மூட்டி பிரிக்கற வேலையைப் பாாக்கறாங்க’ என்பதும் சவுந்தர்யா மீது சுனிதா சொன்ன இன்னொரு புகார். ‘கிரியேட்டிவிட்டியே இல்ல. மேனேஜர் பொறுப்பாவே வேலை செய்யலை’ என்றார் முத்து. ‘நான் சாப்பிடறதை கிச்சன் டீம்ல கிண்டல் பண்ணாங்க’ என்றார் தர்ஷா.

வாய்ப்பைப் பயன்படுத்தாமல் சொதப்பிய சவுந்தர்யா

“ஓகே.. இந்தப் புகார்களுக்கு நிர்வாகத்தின் பதில் என்ன?” என்று விசாரித்தார் பிக் பாஸ். ‘எனக்கு எந்த வாய்ப்புமே கொடுக்க மாட்றாங்க.. ஒதுக்கறாங்க’ என்றெல்லாம் அனத்திக் கொண்டிருந்த சவுந்தர்யா, ‘மேனேஜர்’ என்கிற முக்கியத்துவம் வாய்ந்த பதவி தரப்பட்ட போது அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்க வேண்டுமா, இல்லையா? ஆனால் அதை அவர் சரியாகவே செய்யவில்லை. சரி, போகட்டும். தன் மீது சொல்லப்பட்ட புகார்களுக்காவது சரியான முறையில் பதிலளித்தாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஒவ்வொரு புகாரையும் ‘பர்சனல் அட்டாக்’ மோடில் எரிச்சலுடன் பதிலளித்தார்.

‘கிரியேட்டிவிட்டி இல்லை’ என்கிற முத்துவின் புகாருக்கு ‘உங்க டாடி கட்டின ஹோட்டல்தானே.. நாங்க என்ன செய்ய முடியும்.. இருக்கறதுதான் வரும்” என்று எரிச்சலான டோனில் பதில் சொன்னார் சவுந்தர்யா. இதைப் போலவே சுனிதாவின் புகார்களுக்கும் “மசாஜ் செய்யச் சொல்லி நீங்கதானே கேட்டீங்க.. உங்க குடும்பத்தை நான் பிரிக்கறனா.. அது ஏற்கெனவே பிஞ்சு போய்தான் இருக்கு. உங்க புருஷன், உங்களுக்குத் தெரியாம வேற பேர்லதான் ரூம் போட வந்தாரு… அது முதல்ல உங்களுக்குத் தெரியுமா.. என்ன குடும்பமோ.. “ என்றெல்லாம் எரிச்சலில் இறங்கி அடித்தார் சவுந்தர்யா. ஒரு பொறுப்புள்ள மேனேஜர் இப்படியா பேசுவார்?!

BB Tamil 8 Day 18

‘தீனிப்பண்டாரம்ன்னு கிண்டல் பண்ணாங்க’ என்பது போல் தர்ஷா சொன்ன புகாருக்கு விளக்கம் அளித்தார் ஜாக்குலின். “தர்ஷா கேரக்டர்ல இருந்து வெளியே வந்து எங்க கிட்ட விளையாடினா. அதனாலதான் நாங்களும் ‘இங்க கன்டென்ட் பண்ண வந்திருக்கே. சாப்பிட வரலைன்னு விளையாட்டுக்கு சொன்னோம்’ என்று ஜாக் சொன்ன விளக்கத்தை தர்ஷா ஏற்கவில்லை. ஒருவேளை தர்ஷா காரெக்டரில் இருந்து வெளியே வந்திருந்தாலும் ஹோட்டல் பணியாளர் என்கிற காரெக்டரில் இருந்து ஜாக்குலின் வெளியே வந்திருக்கக்கூடாது. எந்தவொரு ஹோட்டலிலும் வாடிக்கையாளரை நேரடியாக கிண்டல் செய்ய மாட்டார்கள். பணியாளர்கள் தங்களுக்குள் கிண்டடிலத்துப் பேசிக் கொள்வதிலாவது ஒரு லாஜிக் இருக்கிறது.

அலட்டிக் கொள்ளாமல் பதில் சொன்ன முத்துக்குமரன்

கண்ணாடிக் கதவில் தான் இடித்துக் கொண்டதைப் பற்றி கவலையே படாமல், அதிகாரமான தொனியில் விசாரித்த ‘முதலாளியின் மகன்’ எம்.கேவை காட்டமாக விமர்சித்தார் ஆனந்தி. “நீங்க இந்த இடத்தை வாங்கியிருக்கலாம். ஆனால் உழைப்பாளர்களை வாங்கலை. உங்களுக்குன்னு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கேட்டீங்க. இங்க எல்லோரும் சமம்தான்” என்றெல்லாம் எம்.ஜி.ஆர் படத்தின் வசனங்களைப் பேசி கைத்தட்டல் வாங்கினார் ஆனந்தி. ஒரு வணிக நிறுவனத்தில் அனைத்து வாடிக்கையாளர்களும் சமம் என்பதே ஒரு கேலிக்கூத்து. எனில் ‘ப்ரீமியம், டீலக்ஸ், லக்ஸரி சூட்’ என்கிற பிரிவுகள் ஏன் இருக்கின்றன?!

தன்னைப் பற்றிய புகார்களுக்கு முத்துக்குமரன் அலட்டிக் கொள்ளவேயில்லை. அனைத்தையும் புன்னகையுடன் நிதானமாக கேட்டு விட்டு பிறகு தெளிவான குரலில் நிறுத்தி நிதானமாக பதில் அளித்தார். இந்த டெக்னிக் எந்தவொரு கூட்டத்திலும் செல்லுபடியாகும். எல்லோரும் கத்தும் போது தானும் சேர்ந்து கத்தினால் அது எடுபடாது. மாறாக நிதானத்துடன் காத்திருந்து பிறகு தெளிவாகப் பேசும் போது சூழல் அமைதியடைந்து எல்லோரும் கவனிக்கத் தொடங்குவார்கள்.

சவுந்தர்யா

“நான் ஹோட்டல் ஓனரோட பையன் காரெக்டரைத்தான் செய்தேன். அந்த மீட்டருக்குள்ளதான் பேச முடியும். ‘கவனமா வரக்கூடாதான்னு’ என்னுடைய பாணியில்தான் அக்கறை காட்டினேன். ஆனந்தி சொன்னதைப் போல யாரும் உழைப்பாளிகளை விலைக்கு வாங்க முடியாது. அதில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால் மோசமான முதலாளிகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைத்தான் காரெக்டராக நடித்துக் காண்பித்தேன். இதனால் சமூகத்தில் மாற்றம் வரலாம்” என்றெல்லாம் முத்துக்குமரன் விளக்கம் தந்தார். ஆனால் இதற்கு ஓவர் ரியாக்ட் செய்த ஆனந்தி “உங்க கூடல்லாம் பேச முடியாது” என்று கோபத்துடன் எழுந்து சென்று விட்டார்.

“என்னோட கேரக்டரைத்தான் ஃபாலோ பண்ணேன்?’ என்று முத்துக்குமரன் விளக்கியதை சுனிதா உள்ளிட்டவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். தன்னுடைய காரெக்டர் டிசைனை பொதுவில் விளக்கியது முதல் விசாரணை வரை ஒரே மாதிரியான பாடி லேங்வேஜில் முத்து அசத்தினார் என்பதை சொல்லியாக வேண்டும். சைலண்ட்டாக இருந்து கொண்டு ஃபர்பாமன்ஸ் செய்து சவாலான விஷயம்.

பறிபோன மேனேஜரின் வேலை

கிச்சன் டீம் தன்னைப் பற்றி கிண்டலடித்தை தர்ஷா மீண்டும் சொல்லி “நான் போனாலே அவங்க முகத்தை ஒரு மாதிரி வெச்சிப்பாங்க” என்று புகார் சொல்ல “பொய் சொல்லாத. அப்படியெல்லாம் இல்லை” என்று ஜாக்குலினும் அன்ஷிதாவும் மறுத்தார்கள். அன்ஷிதா உணர்ச்சிவசப்பட்டு விட்டால் ஒரே வார்த்தைகளை ரிப்பீட்டாக கத்துவது வழக்கம். எனவே இந்த முறையும் ‘அது இல்லா.. அது இல்லா.’ என்று மந்திர உச்சாடனம் போல முழங்கிக் கொண்டிருந்தார்.

ஹோட்டல் நிர்வாகம் பயங்கரமாக சொதப்பியிருப்பதால் மேனேஜரான சவுந்தர்யா பணி நீக்கம் செய்யப்படுகிறார் என்று பிக் பாஸ் அறிவித்ததுடன் இந்த ஹோட்டல் டாஸ்க் முடிவிற்கு வந்தது. ‘எனக்குத் தெரியுண்டா.. அங்க சுத்தி.. இங்க சுத்தி.. என் தலைலதான் எல்லா கேஸையும் கடைசில எழுதுவீங்க’ என்கிற மாதிரியே விரக்தி எக்ஸ்பிரஷன் தந்தார் சவுந்தர்யா.

இந்த ஹோட்டல் டாஸ்க்கில் யார் பெஸ்ட், யார் வொர்ஸ்ட் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்டில் வந்து கருத்து சொல்லுங்க மக்களே!



from விகடன்

Comments