BB Tamil 8 Day 16: முத்துவோட லவ் ஸ்டோரி; என்னை அக்கான்னு கூப்பிடறாங்க - தர்ஷாவின் சிணுங்கல்

இன்றைய எபிசோடு சற்றாவது சுவாரசியமாக அமைந்ததற்கு காரணம், ‘ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்’. 

ஆண்கள் போட்ட டீலை, ‘குத்தினா கத்துவேன், கத்தினா குத்துவேன்’ என்கிற மாதிரி ராஜதந்திரத்துடன் கையாண்டு பெண்கள் அணி டபாய்த்துக் கொண்டிருக்கிறது. ‘கடலைக் காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள.. காத்துல எழுதணும், பொம்பளைங்க சொன்ன சொல்ல..’ என்கிற பாடலை ஆண்கள் அணி புலம்பிக் கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 16


இன்றைக்கு வேக்அப் பாடல் கிடையாது. ‘ஆண்கள் பாட, பெண்கள் ஆட வேண்டும்’ என்கிற மக்களின் கருத்துக் கணிப்பை பின்பற்றுமாறு முன்தினமே பிக் பாஸ் சொல்லி விட்டார். எனவே பாடலுக்குப் பதிலாக ‘கோழி’ சத்தும் அலாரம் சத்தம் கேட்டது. (பாக்யராஜ் படத்தில் மாடு கத்துவது மாதிரி, அந்தக் கோழி விநோதமாகக் கத்தியது ஏன் என்று தெரியவில்லை!). ‘கொடுத்த வாக்கை மீறிட்டாங்க’ என்பது போன்ற வரிகளையெல்லாம் இட்டு  பாடலை அசத்தலாக எழுதியிருந்தது, ஆண்கள் அணி. ஆடுவதற்குப் பதிலாக பெண்கள் அணி உடம்பை அசைத்தது. 

சாச்சனாவிற்கு திடீரென வயிற்று வலி. ‘கன்ஃபெஷன் ரூமிற்கு வாங்க’ என்று பிக் பாஸ் அழைக்க, அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார் அருண். கூடவே தர்ஷிகாவும். அருண் கான்ஷியஸாக எல்லை தாண்டாமல், தர்ஷிகாவிடம் பொறுப்பை தந்து விலகியிருக்கலாம். பாவம், சின்னப் பெண்ணுக்கு உடம்பு சரியில்லையே’ என்கிற பதட்டத்தில் அவரே கன்ஃபெஷன் ரூம் வரைக்கும் சாச்சனாவை அழைத்துச் சென்றிருக்கிறார். 

பிக்பாஸ் வீடு

அவ்வளவுதான்! ஆண்கள் போட்டிருந்த டீலை எப்படியெல்லாம் ரத்து செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த பெண்கள் அணிக்கு கிடைத்தது ஒரு சான்ஸ். மாணவர்கள் பள்ளிக்கு மட்டம் போடுவதற்காக சொல்லும் போலியான காரணங்களைப் போல இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள். ‘அருண் அனுமதி பெறாமல் எல்லை தாண்டி கன்ஃபெஷன் ரூமிற்கு சென்று விட்டார். எனவே ஒப்பந்தம் ரத்தாகிறது’ என்று சொல்லி விடலாமா என்று கூடி கலந்தாலோசித்தார்கள். 

பெண்கள் அணி சொன்ன அபத்தமான காரணம்


இதுவொரு அபத்தமான மூவ். மனிதாபிமான அடிப்படையில் அருண் செய்த விஷயத்தை இவர்கள் கையில் எடுப்பது முறையானதல்ல. மேலும் கன்ஃபெஷன் ரூம் வாசலில் அருண் அனுமதி கேட்க, தர்ஷிகாவும் அதற்கு தலையாட்டியருக்கிறார் போலிருக்கிறது. ஆக.. இத்தனை மொக்கையான காரணத்தை ஒரு விஷயமாக பெண்கள் அணி கையில் எடுப்பது பலவீனமான ஆட்டம். 

ஒருவன் இன்னொருவனைப் போட்டு அடித்துக் கொண்டிருக்க, ‘ஏண்டா அடிக்கற?” என்று மூன்றாவமன் வந்து விசாரித்திருக்கிறான். “இவன் என்னை போன மாசம் தேவாங்குன்னு திட்டிட்டான்” என்று அடித்தவன் புகார் சொல்ல “ஏண்டா டேய்..  போன மாசம் திட்டியதற்கு இப்ப வந்து ஏன் அடிக்கற?” என்று இவன் ஆச்சரியமாக கேட்க, அவன் அமைதியாகச் சொன்னான். “நான் நேத்துதான் தேவாங்கை நேரில் பார்த்தேன்”.

ஜாக்குலின்

ஜாக்குலின் மன்னிப்பு கேட்ட கதையும் இப்படித்தான் இருந்தது. ரஞ்சித்திடம் ஜாக்குலின் அவமரியாதையாக நடந்து கொண்டதை விஜய்சேதுபதி சொல்லிச் சென்றவுடன் கேட்டிருக்கலாம். ஆனால் ஜாக்குலினுக்கு இப்போதுதான் திடீர் ஞானோதயம் வந்தது போல. ‘மன்னிச்சிடுங்க’ என்று அவர் ரஞ்சித்திடம் கேட்க “நான் ஏதாவது சொன்னேனா தங்கம் . ஹர்ட் ஆகியிருந்தா நானே கேட்டிருப்பேன்’ என்று போலியான சம்பிரதாயமாகச் சொன்னார் ரஞ்சித். இதன் மூலம், இந்தப் பிரச்சினையை வலுவாக எழுப்பிய முத்து, அதை வழிமொழிந்த விஜய்சேதுபதி ஆகிய இருவரையுமே ரஞசித் மொக்கையாக்கியிருக்கிறார். “ஆமாம்மா.. நீங்க பண்ணது சரியல்லைதான். இட்ஸ் ஓகே. இனியாவது அப்படிப் பண்ணாதீங்க” என்று எதிராளியின் தவறை அவர் சுட்டிக் காட்டியிருக்கலாம். ரஞ்சித் அநியாயத்திற்கு நல்லவராக இருக்கிறார். அல்லது அப்படியாக பாவனை செய்கிறார்.

‘என்னை அக்கான்னு கூப்பிடறாங்க’ - தர்ஷாவின் சிணுங்கல்

‘முத்துவோட லவ் ஸ்டோரி லீக் ஆயிடுச்சு.. இந்த வீட்டுக்குள்ளே அவனுக்கு ஆள் இருக்காங்களாம்’ என்று ஜாலியாக ஒரு ரொமான்ஸ் வதந்தியை கொளுத்தினார் விஷால். மற்றவர்களும் இந்தக் கிண்டலில் இணைந்து கொள்ள “யப்பா டேய்.. என்னை நாமினேஷன் கூட பண்ணிக்கோங்க.. பேட் வேர்ட்ஸ் பேசக் கூடாதுன்னு பார்க்கறேன்” என்று இந்தக் கிண்டலை ஆட்சேபித்தார் முத்து. (தெளிவான தமிழில், நிறுத்தி நிதானமாக முத்து கெட்ட வார்த்தைகள் பேசினால் எப்படியிருக்கும்?!) 

ஆண்கள் அணி இப்படி காலேஜ் எபெக்டில் சிரிப்பும் கும்மாளமுமாக இருப்பது தர்ஷாவின் கண்ணை உறுத்தியது போல. “நான் இல்லாம ஹாப்பியா இருக்கீங்க போல” என்று நேர்மையாக கேட்ட அந்த மனதிற்குப் பெயர்தான் கடவுள். முத்துவையும் தர்ஷாவையும் இணைத்து மக்கள் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். “எனக்கு ஆள் இல்ல. ஃபாலோயர்ஸ் எல்லோருமே அக்கா. .. .அக்கான்னுதான் என்னைக் கூப்பிடறாங்க” என்று சிணுங்கினார் தர்ஷா. (2.6 மில்லியன் ஃபாலோயர்ஸூமா அக்கான்னு கூப்பிடறாங்க?!. தமிழ்நாட்டுல அத்தனை நல்லவங்களா இருக்காங்க? கமெண்ட் செக்ஷனை போய்ப் பார்த்தா தெரியும்!). 

முத்து, தர்ஷா

ஆண்கள் போட்ட ஒப்பந்தக் கோரிக்கை தொடர்பாக இரு அணியும் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்தார்கள். அருண் கன்ஃபெஷன் ரூமிற்குச் சென்றதை ஒரு காரணமாக வைத்து இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பெண்கள் அணி ஜல்லியடித்தது. ஆண்கள் அணியில் முத்து மட்டுமே இதை தெளிவான லாஜிக்குடன் மறுத்தார். “தன்னோட தேவைக்கு ஒருத்தர் போனாதான் நீங்க சொல்ற ரூல் வரும். அவர் மத்தவங்களுக்கு உதவி செய்யத்தான் போனார். அதுக்குப் பதில் சொல்லுங்க” என்று அவர் கட் அண்ட் ரைட்டாக கேட்க, அதற்கு ஆனந்தி சொன்ன பதில் பயங்கரமான காமெடியாக இருந்தது. ‘அருண் ‘தன்னோட’ மனிதாபிமானத்திற்காகத்தானே போனார்?” என்று அவர் கேட்டது அபத்தம். 

‘வயிற்று வலி’ சாச்சனாவும் பெண்கள் அணிக்கு ஆதரவாக வந்து நின்று “நீங்க போட்ட டீலை ரூல் புக்ல எழுதல. அதனால செல்லுபடியாகாது” என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல “உனக்காக பரிதாபப்பட்டு வந்ததுக்கு நல்லா பண்றம்மா’ என்பது அருணின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கலாம். இப்படியாக பெண்கள் அணி விதம் விதமான காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க “அப்படின்னா. நீங்க தந்த வாக்கைக் காப்பாத்த முடியாதுன்னு சொல்றீங்க.. அதானே?” என்று அவர்களின் ஈகோவை சரியாகத் தொட்டார் முத்து. அப்போதும் கூட “சரி… அப்படியே வெச்சுக்கங்க. அப்படி நாங்க செஞ்சா.. நீங்க என்ன பண்ணுவீங்க?” என்பது போல் பெண்கள் அணி பலவீனமாக வாக்குவாதம் செய்தது. 

“பிக் பாஸ் இதை ஒத்துக்கலை. சரி. கேட்டுட்டுச் சொல்றோம்” என்று மீண்டும் பேச்சு வார்த்தையை ஒத்தி வைத்தார் தர்ஷிகா. பெண்கள் அணிக்கு முத்து மட்டுமே திறமையாகப் பேசி  அதிக குடைச்சலைத் தருகிறார். 

‘ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்’ - ஆம்லேட் அலப்பறைகள்

‘ஸ்டார் ஹோட்டல்’ என்கிற வீக்லி டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இது குறித்த அறிவிப்பை ஆனந்தி வாசிக்க, காது கேளாதோருக்கான செய்தியறிக்கை போல முத்து சைகையால் அந்த விஷயங்களைச் செய்து காட்டியது சுவாரசியம். ‘ஹோட்டல் பணியாளர்களுக்கு டிப்ஸ் தருவதற்காக பிக் பாஸ்  கரன்ஸி தரப்படும்’ என்று அறிவிப்பில் இருந்தது. ‘அதை பதுக்கி வைத்துக் கொண்டு அடுத்த வாரத்திற்கு முட்டை வாங்கலாம்’ என்று கனவு காணாதீர்கள்’ என்கிற வரியையும் தன்னுடைய பிட்டாக முத்து இணைத்தது சுவாரசியமான காமெடி. 

ஹோட்டல் நிர்வாகத்தை முதலில் பெண்கள் அணி கையில் எடுத்தது. பவித்ரா மேனேஜர், ஜாக்குலின் ரிசப்னிஸ்ட், ரூம் சர்வீஸ் தர்ஷா, தர்ஷிகா, சீனியர் ஷெஃப் அன்ஷிதா (சம்மந்தியால் கிடைத்தது போல!) அவருடைய உதவியாளர்கள் ஆனந்தி மற்றும் சுனிதா. ஹவுஸ் கீப்பிங் ஜெஃப்ரி மற்றும் பாவப்பட்ட சவுந்தர்யா. 

தீபக்

முதல் வாடிக்கையாளராக வந்த தீபக், ‘வெல்.. அதாவது ஐ வாண்ட் டூ’ என்று கமல் மாதிரி ஸ்டைலாக ஆங்கிலத்தில் பேச முயன்றார். ‘எனக்கு ஆம்லேட் வேணும்’ என்பதை வடிவேலு ஊத்தப்பம் ஆர்டர் செய்த கதையாக “கடைசில… பெப்பரை மழைச்சாரல் மாதிரி தூவி விடுங்க” என்று அவர் விரிவாகச் சொல்ல, ‘ஓகே சார்’ என்று அதை பணிவாகவும் கவனமாகவும் கேட்டுக் கொண்ட சமையல் அணி, கடைசியில் ‘மாஸ்டர் ஊத்தப்பம்’ என்றபடி கத்திக் கொண்டே சென்றது. 

அடுத்ததாக ஒரு குடும்பம் வந்தது. கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குடும்பத் தலைவர். அவரது மனைவி முத்தழகு. லேடி கெட்டப்பில் முத்துதான் முத்தழகாக மாறியிருந்தார். ஒரு திரைப்படத்தில் பெண் வேடமிட்டு வரும் வடிவேலு, கரகரவென்ற குரலில் ‘எடுபட்ட பயலே’ என்கிற மாடுலேஷனில் பேசுவார். அதே டோனை பிடித்த முத்து செய்த காமெடி ஓகே. கூட இருந்த ரஞ்சித்தும் அவ்வப்போது காமெடி மத்தாப்புகளை சைலன்ட்டாகக் கொளுத்தினார். 

குங்குமப்பூ அருணா?’ - கலாய்த்த ஜாக்குலின்


அடுத்ததாக விஷாலும் அருணும் கஸ்டமர்களாக வந்தார்கள். வயிற்றுவலிக்காரன் மாதிரி முகத்தை வைத்திருந்தார் அருண். கேட்டால் பிரேக்-அப் துயரத்தில் இருக்கிறாராம். ‘சார். உங்க பேரை ‘குங்குமப்பூ அருண்’ன்னு எழுதிக்கவா? என்று டைமிங்கில் கலாய்த்தார் ரிசப்னிஸ்ட் ஜாக்குலின். ‘எங்களை வெல்கம் பண்ண மாலைலாம் போட மாட்டீங்களா?” என்று விஷால் கேட்க “போகும் போது மாலை போடுவோம்’ என்று காமெடி செய்தார் ஜாக்.  ‘சூடா ஐஸ் வாட்டர் வேணும்’ என்று ரூம் சர்வீஸிடம் கேட்டு  அதை விடவும் பெரிய காமெடியைச் செய்தார் அருண். 

எந்த ஸ்டார் ஹோட்டலில், ஹவுஸ் கீப்பிங் செய்கிறவர் ஃபுட் ஆர்டர் எடுக்கிறார் என்று தெரியவில்லை. ‘என்ன சாப்பிடறீங்க?” என்று வந்து நின்ற  சவுந்தர்யாவிடம் ‘bullseye omelette’ கேட்டு அலப்பறை செய்தார் அருண். பாவம் சவுந்தர்யாவிற்கு அது தெரியவில்லை. சாப்பாடு விஷயம் பற்றி அவருக்குத் தெரியாதது ஆச்சரியம்தான். ‘என்னது. புல்சேவா..?” என்று அவர் வெள்ளந்தியாக கேட்க “என்னாங்க நீங்க.. போய் ஷெஃப்ஐ வரச் சொல்லுங்க” என்று கோபப்பட்டார் விஷால். ‘ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல எதுவா இருந்தாலும் டைம் ஆகும். உங்க புல்சே கிடைக்கறதுக்கு அரை மணி நேரம் ஆகும்” என்று சவுந்தர்யா சொல்ல, பின்னால் வந்த தர்ஷிகா ‘ஒரு மணி நேரம் ஆகும்’ என்று மாற்றிச் சொல்லி சொதப்பினார். 

பிக்பாஸ் வீடு

‘நாங்க பக்கத்துல இருக்கற நல்ல ஹோட்டல்ல போய் சாப்பிட்டு வந்துடட்டுமா?” என்று விஷால் கேட்க, இவர்களின் அலப்பறை காரணமாக கடுப்பில் இருந்த மேனேஜர் பவித்ரா ‘ஓகே’ என்கிற மாதிரி தலையாட்டியது வினையாகப் போயிற்று. ‘வாடா. மச்சான் போகலாம்.. இவங்களே பக்கத்து ஹோட்டல்லதான் சாப்பிடுவாங்க போல’ என்கிற ரேஞ்சில் கோபித்துக் கொண்டு கிளம்பினார் விஷால். ‘நாய்க்கு பேரு வெச்சீங்களே.. சோறு வெச்சீங்களா?” என்கிற காமெடி போல, “முட்டை வெச்சீங்களே.. அதைச் சாப்பிட ஸ்பூன். போர்க் வெச்சீங்களா?” என்று இன்னொரு பக்கம் குதித்தார் தீபக். 

விஷால் மற்றும் அருணைச் சமாதானப்படுத்த வந்த ஜாக்குலின் ‘உங்க ரேஷன்ல முட்டையே கிடையாது’ என்று சொல்லி கேரக்டரில் இருந்து வெளியே வந்து  காண்டானார். ‘இவனுங்களே எல்லா முட்டையையும் சாப்பிட்டு காலி பண்ணிடுவானுங்க போல’ என்று கிச்சன் டீமில் பெண்கள் சலித்துக் கொண்டார்கள். 

‘கால்ல தேய்க்க வேண்டிய பிரஷ்ஷை கையில தேய்ச்சு கொல்லப் பார்க்கறாங்க” - இது ஸ்பா ஏரியாவில் இருந்த அருணின் அலறல். ‘அப்படியா?” என்று நாக்கைக் கடித்துக் கொண்டார் தர்ஷா. பக்கத்தில் இருந்த தர்ஷிகாவிற்கு சிரிப்பு தாங்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். 

வேலை பறிபோனதற்காக அழுத பவித்ரா

வாடிக்கையாளர்கள் ஒரு குறை கூட சொல்லாத அளவிற்கு சிறப்பான சேவையை அளிக்க வேண்டும் என்று பிக் பாஸ் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார். குறை ஏதேனும் இருந்தால் அதை போர்டில் எழுதலாம். விஷால், தீபக், அருண் ஆகிய மூவருமே சேவைக் குறைபாட்டைப் பற்றி புகாராக எழுதித் தள்ளினார்கள். 

இது பற்றி பிக் பாஸ் விசாரணை செய்த போது ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து திருப்திகரமான பதில் வராததால் மேனேஜர் பவித்ராவின் வேலை தூக்கப்பட்டது. அவர் என்னமோ, உண்மையிலேயே அந்த வேலை பறி போனது போல பாத்ரூம் பக்கம் சென்று மூசுமூசுவென்று அழுதார். “என்னை மாத்தணும்ன்னு வேணும்ன்ட்டே பண்ணாங்க” என்பது பவித்ராவின் கண்ணீர் புகார். 

பவித்ராவிற்குப் பதிலாக சுனிதா மேனேஜர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். வேறு சில மாற்றங்களும் நடந்தன. ரூம் சர்வீஸ் செய்ய வந்த பவித்ராவிடம் “மேடம் நல்லாயிருக்கீங்களா?” என்று கேட்டு அவரைக் காண்டாக்கினார் அருண்.

பவித்ரா

ஹோட்டலை அம்போவென்று மூடி விட்டு அடுத்த டாஸ்க்கிற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன் ஃப்ரீ பாஸிற்காக மூன்று சுற்றுகளாக இந்த டாஸ்க்  நடக்கும். முதல் ஆட்டம் ‘கில்லர் காயின்’. இதை எதிர் அணியின் உடம்பில் ஒட்ட முயற்சிக்க வேண்டும். பஸ்ஸர் அடிக்கும் போது யாரிடம் இந்தக் காயின் இருக்கிறதோ, அவர்கள் அவுட். 

“முதல் ரவுண்டுல ஜெஃப்ரியை பிடிச்சு காயினை ஒட்டி அப்படியே கீழே அமுக்கி எல்லோரும் மூடி நின்னுக்கலாம். பஸ்ஸர் அடிக்கற வரைக்கும் பிடிச்சிட்டா நாம வின் பண்ணிடலாம். இப்படியே ஒவ்வொருத்தரா காலி பண்ணுவோம்’ என்று முத்து சொன்ன ஐடியாவை ஆண்கள் அணி அப்படியே பின்பற்றியது. கோழி மீது கூடையைப் போட்டு  மூடி பிடிப்பது போல ஒவ்வொருவரையாக இப்படியே காலி செய்தார்கள். ஆண்களின் முரட்டுத்தனத்திற்கு ஈடு கொடுத்தாலும் பெண்களால் சமாளிக்க முடியவில்லை.

முரட்டுத்தனமாக ஆடிய ஆண்கள் - போராடி தோற்ற பெண்கள் 


காயினை பாஸ் செய்து ஆட்டம் காட்டியிருந்தால் இந்த டாஸ்க் சுவாரசியமாக இருந்திருக்கும். பெண்கள் அணி இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் ஆண்கள் செய்த கோழி பிடிக்கும் முரட்டுத்தனமான டெக்னிக் கடைசியில் வெற்றி பெற்றது. அடிபட்டிருந்த சுனிதாவிற்கு  ஜெஃப்ரி மருந்து தடவ முயற்சித்த போது குழந்தை மாதிரி கீழே படுத்துக் கொண்டு ‘குய்யோ முய்யோ’வென்று  அலறினார். (சுனிதா.. நீ ஒரு பூவு.. உனக்கு எப்படி வந்தது இந்த நோவு?!) 

நடந்த தள்ளுமுள்ளுவில் ரஞ்சித்தை ‘இசகுபிசகான’ இடத்தில் தர்ஷா மிதித்து விட்டார் போலிருக்கிறது. இதைப் பற்றி ஆண்கள் அணி ஆட்சேபிக்க “நான் அப்படில்லாம் செய்வேனா..?” என்று கண்ணைக் கசக்க ஆரம்பித்து விட்டார் தர்ஷா. “நான் ஒண்ணுமே சொல்லையேயம்மா” என்று சிவாஜி டோனில் வலியைப் பொறுத்துக் கொண்டு ஆறுதல் சொன்னார் ரஞ்சித்.  “டஃப் பைட் கொடுத்தாங்கப்பா.. இந்தப் பொண்ணுங்க” என்று ஜெஃப்ரியிடம் பிறகு ஆச்சரியப்பட்டார் சத்யா. 

பிக்பாஸ் வீடு

முதல் சுற்றில் ஆண்கள் அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. “எப்படியும் அடுத்த கேம்ல நாமதான் ஜெயிப்போம்’ என்கிற தெனாவெட்டில் ஆண்கள் அணி இருக்கிறது. ‘சும்மா.. சும்மா.. எதுக்கெடுத்தாலும் அழாத. ரஞ்சித் சாரே ஒண்ணும் சொல்லலைல்ல’ என்று தர்ஷாவிடம் சலித்துக் கொண்டார் ஜாக்குலின். 

ஆண்கள் அணி தங்களின் டீல் மேட்டரை லேசில் விடுவதாக இல்லை. இது பற்றிய பேச்சு வார்த்தைக்கு மீண்டும் அழைக்க ‘நைட் டைம்ல தூங்க வேணாமா.. நாளைக்குப் பேசலாம். ஆள விடுங்க” என்று ராஜதந்திரத்துடன் பேச்சுவார்த்தையை ஒத்தி வைத்தார் தர்ஷிகா. 

‘நைட் டைம்ல என்ன டிஸ்கஷன் வேண்டியிருக்கு?” என்று ஆண்கள் அணியை சமாளித்தாலும் நள்ளிரவு தாண்டியும் பெண்கள் அணி பேசிக் கொண்டிருந்தது. “இந்த ஜெஃப்ரி பய வேணுமின்ட்டே தோத்திருப்பானே?” என்கிற சந்தேகத்தை தர்ஷிகா எழுப்ப, “ச்சே.. இல்லவே இல்ல. அவன் நெஜம்மா பேராடினான். போட்டு அமுக்கிட்டாங்க.. என்ன பண்ணுவான். பாவம்” என்று இதர பெண்கள் ஜெஃப்ரிக்கு ஆதரவாக பேசினார்கள். 

ஹோட்டல் டாஸ்க்கில் ஆண்கள் நிர்வாகம் செய்ய, வாடிக்கையாளர்களாக வரவிருக்கும் பெண்கள் அணி என்னென்ன அலப்பறைகளைச் செய்யப் போகிறார்களோ? மாஸ்டர்.. ஒரு ஊத்தப்பம்… 


from விகடன்

Comments