இப்போதைக்கு பெண்கள் அணியின் பக்கம் காற்று நன்றாக வீசுகிறது. தர்ஷிகா இரண்டாவது முறையாக கேப்டன் ஆகி விட்டார். ஆண்கள் அணியில் இரண்டு பேர் குறைந்து எண்ணிக்கையில் சுருங்கி விட்டார்கள். எனவே, ‘ஆண்கள் யாரையும் குறிப்பிட்ட வாரத்தில் நாமினேட் செய்யக்கூடாது’ என்று ஆரம்பத்தில் போட்ட டீலை இப்போது ஆண்கள் கேட்க “ரூல்ஸ் புக்ல இல்லாத விஷயத்தைப் பத்தியெல்லாம் கேட்காதீங்க” என்று பிக் பாஸ் எளிதாகக் கை கழுவி விட்டார். ‘
ஒத்துமையா இருக்காங்க’ என்று ஆரம்பத்தில் பாராட்டப்பட்ட ஆண்கள் அணி இப்போது பரிதாபமான நிலையில் இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 15
“இப்பத்தானே ஆண்கள் அணில விரிசல் ஆரம்பிச்சிருக்கு. அர்னவ் மேல ஒட்டுமொத்தமா புகார் சொன்னாங்க. இனிமே பூகம்பமே வெடிக்கும். பார்த்துட்டே இருங்க” என்று பெண்கள் அணியிடம் குஷியாக சொல்லிக் கொண்டிருந்தார் ஜாக்குலின். ‘இந்த வாரத்திற்கு யாரை swap செய்யலாம்?’ என்று ஆண்கள் அணி விவாதித்துக் கொண்டிருந்தது. சத்யாவை அனுப்பலாம் என்று முதலில் முடிவு செய்திருந்தார்கள் போல. ஆனால் ‘அவர் டாஸ்க் செய்ய உபயோகப்படுவார்’ என்று கருதி ஜெஃப்ரியை அனுப்பலாம் என்று வழக்கம் போல் சண்டை சச்சரவில்லாமல் எளிதாக முடிவு செய்து விட்டார்கள்.
‘மஸ்காரா போட்டு மயக்கறியே’ என்கிற பாடலுடன் நாள் 15 விடிந்தது. “தெரியாத்தனமா பாயசத்தை எடுத்து சாப்பிட்டுட்டேன். அதுக்காக எனக்கு பாய்சனே வெச்சிடுவாங்க போல’ என்று தர்ஷாவிடம் அனத்திக் கொண்டிருந்தார் சவுந்தர்யா. அந்தப் பக்கம் இதே விஷயத்தை இன்னமும் புகாராக நீட்டி முழக்கி சொல்லிக் கொண்டிருந்தார் சுனிதா. சவுந்தர்யா எடுத்து சாப்பிட்டது ஆண்கள் அணியின் பங்கு. அவர்களே எதுவும் கேட்காமல் இருக்கும் போது சுனிதா மட்டும் ஏன் இப்படிப் பொங்குகிறார்? சவுந்தர்யாவின் மீது சுனிதாவிற்கு அப்படியென்ன எரிச்சல்?!
‘யாரை ஆண்கள் அணிக்கு அனுப்பலாம்?’ என்கிற விவாதம் பெண்கள் அணியில் ஆரம்பித்த போது ‘சவுந்தர்யாவை நிச்சயம் அனுப்பக்கூடாது. அவ அங்க இன்னமும் சொகுசா இருப்பா’ என்று பொருமித் தள்ளினார் சுனிதா. ‘நான்லாம் போனா என்னை வெச்சு செஞ்சிடுவாங்க’ என்று பயத்துடன் சிரித்தார் ஜாக்குலின்.
தர்ஷிகா - இரண்டாவது முறையாக கேப்டன்
இந்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் ஆரம்பித்தது. கடந்த வாரத்தில் இதற்காக தேர்வான ரஞ்சித்தும் தர்ஷிகாவும் போட்டி போடுவார்கள். கண்ணாமூச்சி போன்ற ஆட்டம். கண்களைக் கட்டிக் கொண்டு எதிரணியைச் சேர்ந்தவர்களை மென்மையான பேட்டினால் அடிக்க வேண்டும். யார் மீது பேட் படுகிறதோ அவர்கள் அவுட்.
‘ரெடி ஜூட்’ என்று சொல்வதற்குள் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ லட்டியைச் சுழற்றுவது மாதிரி ஆண்கள் அணியை விளாசி விளாசி அடித்து மின்னல் வேகத்தில் ஆட்டத்தை முடித்து விட்டார் தர்ஷிகா. ஆனால் ரஞ்சித்தோ மிகவும் சிரமப்பட்டு சிலரை மட்டுமே அவுட் செய்ய முடிந்தது. இதற்கிடையில் குட்டிச்சுவரில் வேறு முட்டிக் கொண்டார். எனவே தர்ஷிகா வெற்றி. இரண்டாவது முறையாக கேப்டன்.
‘யார் ஷாப்பிங் போகலாம்?’ என்கிற விவாதம் பெண்கள் அணியில் ஆரம்பித்தது. எந்தவொரு முடிவையும் எளிதாக எடுத்து விட்டால் என்ன கெத்து இருக்கிறது? எனவே குடுமிப்பிடிச்சண்டை மெலிதாக ஆரம்பித்தது. ‘நான் போகட்டுமா?” என்று பலவீனமான குரலில் ஆரம்பித்து சவுந்தர்யா கேட்க, அனைவருமே விதம் விதமான முறையில் அவரை நிராகரித்து கேட்டை சாத்தினார்கள். ‘ஆண்கள் அணிக்காவது போகட்டுமா?” என்று அடுத்த சாய்ஸையாவது தருவார்களா என்று நம்பிக்கையே இல்லாமல் ஆரம்பித்தார் சவுந்தர்யா. தன்னை நிரூபிக்க வேண்டும் என்கிற ஆர்வம் சவுந்தர்யாவிற்கு இருக்கிறதே ஒழிய, அதற்கேற்ற வேகம் இல்லை.
“நீ ஏற்கெனவே பாய்ஸ் டீம் மெம்பர் மாதிரி அவங்க கூடத்தானே எப்பவும் அதிகமா இருக்கே?” என்று நக்கலடித்தார் பவித்ரா. “என்னை அனுப்பினா, பெண்கள் யாரையும் நாமினேட் பண்ண மாட்டேன்” என்று பிராமிஸ் செய்து காமெடி செய்தார் சவுண்டு.
அடுத்ததாக சாச்சனாவை பெண்கள் அணி விசாரிக்க அவர் ‘நான் என்னவெல்லாம் செய்வேன்?” என்று தேர்தல் நேரத்து அரசியல்வாதி மாதிரி பாயிண்ட் பாயிண்டுகளாக அடுக்க, சாச்சனாவே ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார். வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும். ஏறத்தாழ ஒட்டுமொத்த அணியே சுவுந்தர்யாவின் மீது எரிச்சலில் இருக்கிறது. “அங்க இருக்கற ரகசியங்களையெல்லாம் உடனுக்குடன் வந்து சொல்லிடுவேன்” என்று தேர்ந்த ஸ்பை மாதிரி உற்சாகமாக இருந்தார் சாச்சனா.
எதிர் அணிக்குச் சென்ற சாச்சனாவும் ஜெஃப்ரியும்
தர்ஷாவும் தீபக்கும் அவரவர்கள் அணிக்குத் திரும்பலாம் என்று அறிவித்தார் பிக் பாஸ். ‘ஹப்பாடா.. நம்மள பிடிச்சிருந்த ஏழரை முடிஞ்சது’ என்று ஆண்கள் அணி பெருமூச்சு விட்டிருப்பார்கள். “சரி.. இந்த வாரம் யார் யாரெல்லாம் இடம் மாறப் போறீங்க?” என்று பிக் பாஸ் கேட்க சட்டென்று எழுந்து வந்த தர்ஷிகா, சாச்சனாவின் பெயரை உடனே அறிவிக்க ‘Good. That was quick’ என்று பிக் பாஸ் பாராட்டியதற்கு அகம் மகிழ்ந்து போனார் தர்ஷிகா. அது பாராட்டு மாதிரி தெரியவில்லை. ‘வழக்கமா பெண்கள் அணில சண்டையெல்லாம் போட்டு மெதுவாத்தானே சொல்வீங்க?” என்று பிக் பாஸ் ஊமைக்குத்தாக குத்தியது போல்தான் தெரிகிறது. ஆண்கள் அணி ‘ஜெஃப்ரி’ என்று ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருந்ததை அறிவித்தது.
ஏதோ கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வது போல, வீட்டின் எல்லைக்கோடு அருகே சாச்சனாவும் ஜெஃப்ரியும் பெட்டியோடு நின்றார்கள். ‘எங்க கண்ணையே உங்க கிட்ட ஒப்படைக்கிறோம். அதுல ஆனந்தக் கண்ணீரை மட்டும்தான் பார்க்கணும்’ என்கிற சென்டிமென்ட் வசனத்தோடு அவரவர் அணியின் ஆட்களை வழியனுப்பினார்கள். “நல்லா சோறு போடுவோம். தலை சீவி விடுவோம். டிரஸ் அயர்ன் பண்ணி தருவோம்” என்று ஜெஃப்ரியை புது மாப்பிள்ளை போல செல்லம் கொஞ்சியது பெண்கள் அணி. ‘உனக்காக டபுள் பெட்டையே ஒதுக்கி வெச்சிருக்கோம்’ என்று சாச்சனாவிற்கு ஆண்கள் அணி ஐஸ் வைத்தது.
நாமினேஷன் நேரம் நெருங்கப் போவதை அறிந்த ஆண்கள் அணி தங்களுக்குள் கலந்து பேசி ஒரு முடிவை எடுத்தது. ‘ஆண்கள் யாரையும் குறிப்பிட்ட வாரத்தில் நாமினேட் செய்யக்கூடாது’ என்று ஆரம்பத்தில் போட்ட ஒப்பந்தத்தை இப்போது பயன்படுத்த முடிவு செய்தார்கள். இதனால் பெண்கள் அணி ஜெர்க் ஆனாலும், செய்து தந்த ஒப்பந்தத்தை காப்பாற்ற வேண்டுமே என்கிற தர்மசங்கடத்தையும் அடைந்தார்கள்.
ஆண்கள் போட்ட டீலை, டீலில் விட்ட பிக் பாஸ்
‘பிக் பாஸ் இதைச் செய்யலாமா?” என்று தர்ஷிகா அனுமதி கேட்க “ரூல் புக்ல இல்லாத விஷயத்தையெல்லாம் என் கிட்ட கேட்காதீங்க” என்று கறாராக சொல்லி இந்த மேட்டரை எளிதாக கை கழுவி விட்டார் பிக் பாஸ். எனில் போட்டியாளர்கள்தான் சுயமாக ஹாண்டில் செய்ய வேண்டும்.
அது மட்டுமில்லாமல் இன்னொரு செக் பாயிண்டையும் வைத்தார் பிக் பாஸ். இந்த வாரம் Mixed Nomination. எதிர் அணி ஆட்களைத்தான் நாமினேட் செய்ய வேண்டும் என்றிருந்த விதி மாற்றப்பட்டு யார் யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்யலாம் என்கிற புதிய விதி அமுலுக்கு வந்தது. அணி மாறிச் சென்ற தர்ஷாவிற்கும் தீபக்கிற்கும் ஒருவரை நேரடியாக நாமினேட் செய்யும் பவர் இருந்தது. தீபக் தர்ஷாவையும், தர்ஷா அருணையும் நேரடியாக நாமினேட் செய்தார்கள்.
என்னதான் அணி மாறி நாமினேட் செய்யலாம் என்று விதி மாற்றப்பட்டாலும் மக்கள் ‘அணி ஒற்றுமை’ என்கிற விஷயத்தை விசுவாசமாக கடைப்பிடித்தனர். அதாவது ஆண்கள் அணி பெண்கள் மீதுதான் அதிகமான வாக்குகளை குத்தியது. சத்யா மட்டும் ‘அருண்’ பெயரை தவறாகச் சொல்லி ‘அவர்தான் நேரடியாக நாமினேட் ஆகிட்டாரே’ என்று பிக் பாஸ் திருத்தியவுடன், ‘பவித்ரா’ பெயரைச் சொன்னார்.
அதே போல்தான் பெண்கள் அணியும். ஆண்கள் மீதுதான் வாக்குகளை அள்ளி வீசினார்கள். சத்யாவிற்கு சரமாரியான வாக்குகள் விழுந்தன. ஆனால் ஒரேயொரு வித்தியாசம். பெண்கள் அணி தங்களில் ஒருவரைப் போட்டு நன்றாகத் தாக்கினார்கள். அது யார் என்று யூகிப்பது பெரிய விஷயமில்லை. யெஸ். சவுந்தர்யாதான் அந்தப் பலியாடு. அதிகபட்சமாக ஆறு வாக்குகளை சவுந்தர்யா பெற்றது அறிவிக்கப்பட்ட போது ‘எனக்குத்தான் ஏற்கெனவே தெரியுமே’ என்கிற மாதிரி கசப்புடன் புன்னகைத்தார்.
ஆக இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் ரஞ்சித் (5), அன்ஷிதா (5), பவித்ரா (2), சத்யா (5), முத்து (2), மற்றும் சவுந்தர்யா (6). தனக்கு குறைவான வாக்குகள் வந்திருப்பதைக் கேட்டு ஷாக் ஆனார் முத்து. இது தவிர நேரடியாக நாமினேட் ஆகியிருப்பவர்கள் தர்ஷா மற்றும் அருண். ஆண்கள் அணியிலிருந்து நான்கு நபர்கள், பெண்கள் அணியிலிருந்து நான்கு நபர்கள் என்று சரி சமமாக நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியேறப் போவது யார்? ஒருவேளை ஆணாக இருந்தால் அந்த அணியின் பாடு சிரமம்தான்.
சவுந்தர்யா ஒதுங்குகிறாரா, ஒதுக்கப்படுகிறாரா?
அதிகமான வாக்குகள் பெற்று டாப்பில் இருந்த சவுந்தர்யா மூட் அப்செட் ஆனார். தன்னிடம் பேச வந்த ஜாக்குலினிடம் முகம் கொடுத்து பேசவில்லை. ‘பெண்கள் அணில எனக்கு செட்டே ஆகலை” என்று வாய் விட்டு அழுத சவுந்தர்யாவை ‘விடு பார்த்துக்கலாம்’ என்று ஜெஃப்ரி சமாதானம் செய்தார்.
இதெல்லாம் சரி. ஆண்கள் கேட்ட டீல் விஷயம் என்னவாயிற்று? இதற்காக இரு பக்கமும் விவாதங்கள், பேச்சு வார்த்தைகள் பல கட்டங்களில் நடந்தன. “ஒப்பந்தம் போட்டது உண்மைதான். ஆனா இது ரூல்ஸ் புக்ல இல்லை. வேணுமின்னா நாங்க ரூமை மாத்திக்கறோம்” என்று தர்ஷிகா சொல்ல “அய்.. நல்ல கதையா இருக்கே.. 106 நாளைக்கும் சேர்த்துதான் ஒப்பந்தம்” என்று இதை மறுத்தார் தீபக்.
கிச்சன் ஏரியா ஆண்கள் அணியின் பக்கம் இருப்பது அவர்களுக்கு பெரிய பலம். பெண்கள் அணி சொன்ன வாதத்தை தெளிவான லாஜிக்குடன் மறுத்தார் முத்து. ‘இதோ வந்துடறேன்’ என்று சொன்ன சாச்சனா, பெண்கள் அறையில் போய் நடந்ததையெல்லாம் உற்சாகமாக விவரித்தார். அது மட்டுமல்லாமல் ‘நியாயப்படி நாம டீலை பின்பற்றணும். ஆனா இது ரூல்ஸ் புக்ல இல்லாத போது எப்படி ஃபாலோ பண்ண முடியும்’ன்னு கேட்கலாம்” என்று சாச்சனா சொன்ன யோசனையைக் கேட்டு ‘செல்லம்.. சமத்து..’ என்று பாராட்டி பெண்கள் அணி மகிழ்ந்தது.
“ஓகே.. இதை முடிவு செய்ய எங்களுக்கு இரண்டு நாள் டைம் வேணும்” என்று ராஜதந்திரத்துடன் பேச்சு வார்த்தையை நகர்த்தி வைத்தார் தர்ஷிகா. சாச்சனாவின் உளவு வேலையை தீபக் கண்டுபிடித்திருக்க வேண்டும். “நாங்க ஏதாவது ரகசியம் பேச நெனச்சா.. நீ வெளில போயிடணும்.. ஓகேவாம்மா?” என்று கேட்க ‘ஓகே டீல்” என்றார் சாச்சனா.
ஷாப்பிங் டாஸ்க்கில் சொதப்பிய சுனிதா - சவுந்தர்யாவின் அனத்தல்
ஷாப்பிங் டாஸ்க் ஆரம்பித்தது. ‘பம்பர் பொனான்ஸா’ என்கிற பெயரில் 35000 மதிப்புள்ள கரன்ஸியை அள்ளிக் கொடுக்க முடிவு செய்தார் பிக் பாஸ். ஆனால் அது எளிதில் கிடைக்காது. அதற்கொரு ஆட்டம் உண்டு. இழுத்து பிடிக்கப்பட்டிருக்கும் கயிற்றின் மூலம் பந்துகளை எறிய வேண்டும். அது எந்தப் பாயிண்டில் படுகிறதோ, அந்த மதிப்புள்ள பொருட்கள் கிடைக்கும். இரு அணிக்கும் தலா இருபது வாய்ப்புகள்.
முதலில் வந்த அருண், ஒரு பந்து மட்டுமே சரியாக அடித்து பயங்கரமாக சொதப்பினார். அருணே பரவாயில்லை. அடுத்து வந்த சுனிதா, ஒரு பாயிண்ட் கூட அடிக்காமல் மொத்தமாக சொதப்பினார். அடுத்து வந்த தீபக்கால் ஆண்கள் அணியின் மானம் போகாமல் இருந்தது. ஐந்து முறை சரியாக அடித்தார். பெண்கள் அணிக்குச் சென்றிருக்கும் ஜெஃப்ரி அடுத்ததாக வந்தார். அவர் அடிக்கவில்லையென்றால் பெண்கள் அணிக்கு சோறு கிடையாது. சுனிதாவின் சொதப்பல் அப்படி. மூன்று பந்துகளை சரியாக அடித்து பெண்களை ஆசுவாசப்படுத்தினார் ஜெஃப்ரி. இறுதியில் ஆண்கள் அணி 5500 மதிப்புள்ள பொருட்களையும் பெண்கள் அணி 2000 மதிப்புள்ள பொருட்களையும் சம்பாதித்தது.
காமிராவின் முன்பு வந்த ஜாக்குலினும் சுனிதாவும் “அய்யா.. ஏற்கெனவே உணவுப் பற்றாக்குறை. ஒல்லியா ஆயிட்டோம் (?!) பசிக்குதுய்யா.. ஏதோ கயித்தை இழுத்துப் பிடிக்கணுமாம்.. வெலாசிட்டி.. அது இதுன்னு என்னென்னமோ சொல்றாங்க. படிக்காத தற்குறிங்க.. பார்த்துப் பண்ணுங்கய்யா.. புண்ணியமா போகும்” என்று பிக் பாஸிடம் பயங்கரமாக கெஞ்சினார்கள். ‘பசில மெண்ட்டலா ஆயிட்டேன்’ என்று கூடுதல் பிட்டைப் போட்டார் ஜாக்குலின். இதே ஜாக்குலின்தான், சத்யா தன்னை ‘மெண்ட்டல்’ என்று சொன்ன போது டென்ஷன் ஆனவர். (காலம் எவ்வளவு வேகமா சுத்துது பார்த்தீங்களா?!).
சுனிதா தனக்கு செய்யும் அநீதி பற்றி ரஞ்சித்திடம் அனத்திக் கொண்டிருந்தார் சவுந்தர்யா. “எனக்கு நல்லா விளையாடணும்ன்னுதான் ஆசை. ஆனா பாயிண்ட், பாயிண்ட்டா பேச வரலை. ஒவ்வொரு விஷயத்திற்கும் அங்க கெஞ்ச வேண்டியிருக்கு. சான்ஸே தர மாட்றாங்க. பந்து எறியற டாஸ்க்ல சுனிதா ஒண்ணுமே அடிக்கலை. இதுவே நான் போயி நடந்திருந்தா சும்மா விட்டிருப்பாங்களா…?” என்றெல்லாம் அவர் அனத்தியதில் உண்மை இருந்தது. ஓவராக சவுண்டு விடுபவர்களுக்குத்தான் மதிப்பு.
from விகடன்
Comments