வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்
அன்பும், ஆனந்தியும் ஆத்மார்த்த நட்பின் அடையாளங்கள்!வெள்ளித் திரை வெட்டு, குத்திலும், டமால், டுமீலிலுமே பயணித்து வரும் இந்தக் காலக் கட்டத்தில், ’சிங்கப் பெண்ணே!’ நட்பையும், காதலையும் தூக்கிப் பிடிப்பதும், தோழியின் நல்ல பெயரைக் காப்பாற்ற நாயகி பல சோதனைகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வதும் பாராட்டுக்குரியவை!
இரவு உணவை முடித்து விட்டு ஹாயாக அமர்ந்து பார்க்கும் நேரத்தில், சின்னத்திரையை நிறைக்கும் சிங்கப் பெண் ஆனந்தி அநீதியை எதிர்த்துப் போராடுவதும், குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களும் வரவேற்கத்தக்கது!
சாப்பிடும் போதும்,சாப்பிட்ட பிறகும் அமைதியான சூழலில் மனம் லயித்தால்தான் உணவின் சத்து முழுவதுமாக உடலுக்குக் கிடைக்கும் என்பார்கள் மனவியலாளர்கள்!
அந்த விதத்தில் மனதுக்கு இதமளிக்கும் சிங்கப் பெண்ணே தொடருக்கும், சன் டிவி க்கும் ரசிகர்கள் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளார்கள்!
கிராமத்திலிருந்து நகரில் பணியாற்ற, முதன் முறையாக வரும் ஆனந்தியைப் பேருந்து நிலையத்திலிருந்து ‘பிக் அப்’ செய்து கொள்வதில் ஆரம்பித்து, அவளின் ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்க அவளுக்குத் தெரிந்து சிலவற்றையும்,தெரியாமல் பலவற்றையும் செய்து அவளின் மனதில் இடம் பிடிக்கிறான் அன்பு!
ஆனந்தியின் ஊருக்கு ரகசியமாகச் சென்று, அவளின் ‘அழகி’யை, சைக்கிளைத் தாங்க…திருட்டுத்தனமாக எடுத்து வந்து அவளிடம் சேர்ப்பதும், தொலைந்து போன சம்பளக் கவரைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்து அவளிடம் சேர்ப்பதும், இவற்றையெல்லாம் செய்வது அழகன் என்ற கற்பனைக் கதாபாத்திரம் என்று ஆரம்பித்து, அவன் தான்தான் என்று அன்பு சொல்ல எத்தணிக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து விடுவதும், எதார்த்த நிகழ்வுகள்!
திருவிழாவுக்கு ஆனந்தியின் கிராமத்திற்குச் சென்றபோது, ஆனந்தி உயிருடன் புதைக்கப்பட, அன்பும், மகேஷும் சிரமப்பட்டு எங்கேயெல்லாம் அலைந்து திரிந்து, இறுதியில் அன்பால் அவள் கண்டு பிடிக்கப்பட, அவளைத் தூக்கும் அன்புவிடம் ஆனந்திதான் தன் காதலி என்கிறான் மகேஷ்! தன் மீது அளவிட முடியாத நம்பிக்கை கொண்ட சின்ன முதலாளி மகேஷ், ஆனந்தி மீது காதல் கொண்டதை அறிந்ததும் அன்பு தூண்டிற் புழுவாகிப் போகிறான்! அழகன் யாரென்று தனக்குத் தெரியுமென்று அதுவரை கூறி வந்த அன்பு, மெல்ல ஆனந்தியிடமிருந்து விலக ஆரம்பிக்கிறான்!
மகேஷ் மீது ஒரு கண்ணை வைத்திருக்கும் மித்ரா, தன் காதலை வெற்றி பெற வைப்பதற்காக,ஆனந்தி மீது வெறுப்பை உழிழ்கிறாள்!
அன்பு கம்பனியின் அத்தனை பெண்களிடமும் பாசத்துடன் நடந்து கொள்வதால் எல்லோராலும் விரும்பப் படுவதால், மித்ரா மற்றும் மானேஜரின் வெறுப்புக்கு ஆளாகிறான்!
ஆனந்தியின் குடும்பப் பரம்பரை நிலம் அநியாயமாக ஊர்த்தலைவரால் அபகரிப்புக்கு ஆளாக,அதனை மீட்க வேண்டுமானால் இரண்டொரு நாட்களில் ரூ.10 லட்சம் தயார் செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில், தன் வீட்டுப் பத்திரத்தையே தன் தாய்க்குத் தெரியாமல் எடுத்து வந்தாலும், அன்பால் அந்தத் தொகையை ஏற்பாடு செய்ய முடியவில்லை.
ஆனந்திக்கு ரூ.10 லட்சம் தேவையென்பதையறிந்த மகேஷ், சில நிமிடங்களில் அதனை ஏற்பாடு செய்து கொடுத்து ஆனந்தியையும் அன்பையும் ஊருக்கு அனுப்புகிறான்! வழியில் சிரமங்களைச் சந்தித்தாலும் உரிய நேரத்திற்கு ஊர் சென்று பணத்தைக் கொடுத்து நிலத்தை மீட்க உதவி, ஆனந்தி மனத்திலும்,அவள் குடும்பத்தார் நினைவிலும் மேலும் உயர்கிறான் அன்பு!
ஆனாலும் அன்பு மனத்தில்,ஆனந்திக்குத் தன்னை விட மகிழ்வான வாழ்வை மகேஷால் அளிக்கமுடியுமென்ற எண்ணம், அந்த 10 லட்சத்தால் தோன்ற ஆரம்பித்து விடுகிறது!
எனவே ஆனந்தியிடமிருந்து அன்பு விலகிச் செல்ல முடிவெடுத்து, கம்பனியிலிருந்து நின்று விடுகிறான்! ஆனாலும் விதி அவர்களைச் சேர விடாமலும், அதே சமயம் பிரிய விடாமலும் விளையாடுகிறது!
தன் தோழி காயத்ரியை, ஒரு சட்டத்திற்குப் புறம்பான வேலை செய்யும் கும்பலிடமிருந்து காப்பாற்றப்போன ஆனந்தி, அங்கு அவளுடன் சேர்த்துப் பல பெண்களையும் காப்பாற்றுகிறாள்!ஆனால் தாமதமாக விடுதிக்கு வந்ததோடல்லாமல் சுவர் ஏறிக் குதித்ததற்காகவும்,விடுதியிலிருந்து விரட்டப்படுகிறாள்!
மீண்டும் அன்புடன் அவன் வீட்டிலேயே தங்க வேண்டிய கட்டாயம்! இப்படிச் செல்கிறது கதை!
ஆனந்தி - அன்பு நட்பு, காதலாக அன்பு மனதில் உருவெடுப்பதும், அதனைச் சொல்ல அவன் படும் கஷ்டங்களும், இடையில் மகேஷ் குறுக்கிடலுமென்று இதுவரை கதை நன்றாகவே நகர்ந்து வருகிறது!
தன் காதலி ஆனந்தி சந்தோஷமாக வாழ வேண்டுமென்று நினைக்கும் அன்பு கதாபாத்திரம் இக்கால இளைஞர்களுக்கு நல் பாடமாக அமைந்துள்ளது!
தான் விரும்பும் ஆனந்தியைத்தான் அன்பு ஆழமாக நேசிக்கிறான் என்பதை அறியாத மகேஷ், காதலின் புனிதம் குறித்து அவனுக்கு அட்வைஸ் செய்வது அருமை! ஆழம் நிறைந்த வசனங்கள் நம் அடிமனம் வரை செல்கின்றன!
ஆனந்தியின் கரம் பிடிக்கப்போவது அன்பா? மகேஷா?சின்னத்திரையில் காண்போமா?-எகிறுகிறது எதிர்பார்ப்பு காதலிக்கிறது தப்பில்லை! ஆனா அதைக் காதலிக்கிட்ட காலந் தாழ்த்தாம சொல்லிடறதுதான் நல்லது என்று அன்புக்கு அட்வைஸ் செய்யத் தோன்றுகிறது!
-ரெ.ஆத்மநாதன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
from விகடன்
Comments