SPB: `காதலிக்கத் துடிக்கும் இளைஞனுக்காக வழக்காடிய குரல்' - 60's ரசிகையின் பகிர்வு | My Vikatan

``வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல.” - ஆசிரியர்

எஸ்பிபி ...இளவயது குரலில்(70 ஸ்) பாடிய பாடல்களைக் கேட்பததென்பது ஒரு வரப் பிரசாதம். மனம் பின்னோக்கி இளமைக்காலத்திற்குச் சென்று மீண்டு வர மனமில்லாமல் அங்கேயே நின்றுவிடும்.   

அவரின் குரலில் உள்ள குதூகலம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். ஏற்ற இறக்கத்துடன் மயக்கும்  குரலுடன் எஸ்பிபியைத் தவிற யாரால் பாட முடியும்?! '
அவர் பாடிய பாடல்கள் நம் எண்ணங்களைத் தூண்டி நம்மை எண்ணங்கள் அற்ற நிலைக்கு கொண்டுச் செல்லக்கூடியவை.  ஹம்மிங்... நம் இதயத்தை வருடி எங்கோ கொண்டுச் செல்லும்.  

எஸ்பிபி யின் இள வயதுக் குரலை காதலிக்கும் பல பேர்களில் நானும் ஒருத்தி. பாலு சாரின்  ஹம்மிங் நம்மை கட்டி இழுத்து  போவது போல் இருக்கும்.

எஸ். பி. பாலசுப்பிரமணியம்

"உன்னை தொடுவது இனியது
நான் சொல்லித் தருவது புதியது
இதில் மின்னல் போல் ஒரு துடிப்பு
இது முன்பின் இல்லாத நினைப்பு"

``உத்தரவின்றி உள்ளே வா" (1971) படப்பாடல். வெகு நேர்த்தியாக, உற்சாகமாக துடிப்பாக பாடி இருப்பார் எஸ்பிபி. இதில் எஸ்பியின் லா லா ல லலாலா லாலா... ஹம்மிங் நம்மை கட்டி இழுத்துப் போவது போல்  இருக்கும். ஹம்மிங் பாடல் வரிசையில் இந்தப் பாடலுக்கு என்றுமே தனி இடம்.

"ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போல ..ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே"...

1977 ஆம் ஆண்டு வெளிவந்த `என்ன தவம் செய்தேன்’ தமிழ்த் திரைப்படத்தின் பாடல் இது.

மெல்லிசை மன்னரின் இசையில் பி.சுசீலா அவர்கள் பாட... பாடும் நிலா பாலு  லலலலல்லஆஆஆஆ என ஹம்மிங் பாட, பாடல் கருப்பு வெள்ளை காட்சிகளாக இருந்தாலும் வண்ணமயமான ராகமாக மனதை மிருதுவாக்கும்.


"ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே..." பாலு சார்... உச்சரித்த விதம்...வேற லெவல் .. உண்மையில் இந்தப் பாடலைக் கேட்கும் போது நதியில் இறங்கும் உணர்வு தான் நமக்கும் வரும்.

எஸ்.பி.பி.

"தொடுவதென்ன தென்றலோ... மலர்களோ...
 பனியில் வந்த துளிகளோ கனிகளோ  உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவாதென்ன."

1971 இல் வெளிவந்த `சபதம்' படத்தில் இடம்பெற்ற பாடல்.  நளினம் கொஞ்சம் நந்தவனக் குரலில் தென்றலாக மலராக தொடுகின்ற பாடல் .   பாடலில் எஸ்பிபி கொஞ்சுவார் குழைவார். ஆஹா ஹாஹா..அற்புதம். காதலிக்கத் துடிக்கும் இளைஞனுக்கு வழக்காடுகிற குரலாக ஒலிக்கும் பாடல்.  குறிப்பாக 'ம்ம்ம்..' என்ற''ஹம்மிங்'அவரைத் தவிர வேறு யாராலும் செய்திருக்கவே முடியாது.. ஜில்லென்ற தண்ணீரில் நீராடுவதை போன்ற உணர்வை தரும். ஜி.கே. வெங்கடேஷ் அற்புதமாக இசை அமைத்திருப்பார்.

"அவளே என் காதலி
கொடி நீருக்குள்ளே மலர் மேலே
பெண் குளிப்பது தாமரை போலே
நான் நீராய் பிறந்திருந்தாலும்
இந்நேரம் என்னென்னவோ.."

கனவுகளை வரவழைத்த(வரவழைக்கும்) பாடல். 1974 ஆம் ஆண்டு வெளியான `பேரும் புகழும்’ என்ற திரைப்படத்தின் பாடல் இது. இலங்கை வானொலியில்  அடிக்கடி கேட்டு ரசித்தது. பழைய நினைவுகளை கிளறி சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்லக்கூடியது. மனம் லயித்து அனுபவித்து பாடி இருப்பார் எஸ்பிபி.

எஸ்.பி.பி

"பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ..

பெண்ணைப் பார்த்தால் சொல்லத் தோன்றும் இன்னும் நூறாயிரம்

இன்னும் நூறாயிரம்"

1970இல் வெளியான `நிலவே நீ சாட்சி’ படப்பாடல். சிங்கிள் ஷாட்டில் எடுத்த பாடல். பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் வேற லெவல்.

"மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து

மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து..

பூவை வந்தாள் பெண்ணாகப் பிறந்து.."

எஸ்பிபி யின் குரலில் மூன்று கனிச்சாற்றையும் ஒன்றாக பருகியது போல் இனிக்கும் .

"நந்தா நீ என் நிலா நிலா

நாயகன் மடியில் காண்பது சுகமே

நாணம் ஏனோ வா ஹாஹாஹா.."

1977 இல் வெளியான `நந்தா நீ என் நிலா’ படப்பாடல். சிதார் இசைப் பின்னணியில் ஒலிக்கத் தொடங்கும் பாடலின் வரிகள் கவிதை நயமிக்கவை .

" விழி -மீண்டும் விழி மொழி தேனாடும் மொழிக் குழல் பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில்.."

வரிகளுக்கிடையே இடைவெளி இல்லாத தொடர்ந்து பாடுவது போன்ற பிரமையை தந்த மெட்டு இசை தட்சிணாமூர்த்தி சுவாமிகளுடையது. உணர்வுகள் ததும்ப பாடி இருப்பார் எஸ்பிபி. செவி வழி பாய்ந்த தேவாமிர்தம் .

எஸ்.பி.பாலசுப்ரமணியம்

"என் காதல் கண்மணி

ஏதேதோ நினைத்தாலோ

சொல்ல நாணம்வந்ததோ ஓஓஓ

சொல்லாமல் மறைத்தாலோ..

ராதா ராதா ராதாஆஆஆஆஆ"

கெஞ்சல் கொஞ்சல், சிணுங்கல், சிரிப்பு என வித விதமான பாவனைகளோடு இந்தப் பாடலை அனுபவித்து அழகான உச்சரிப்புடன் உணர்வு பூர்வமாய் , தனக்கே உரிய கணீர் குரலுடன் பாடி இருப்பார் எஸ்பிபி. 1973 ஆம் ஆண்டு வெளிவந்த `மஞ்சள் குங்குமம்’ திரைப்படத்தில் வெளிவந்த பாடல்.

சங்கர் கணேஷின் அழகான மெலடி. எத்தனை முறைக் கேட்டாலும் மறுமுறை கேட்க வைக்கும் எஸ்பிபியின் பாஸந்தி குரல் நம் தொண்டைக்குள் வழுக்கிச் செல்லும். சோர்ந்து இருக்கும் மனதை வருடும் அருமையான மாயக் குரல். மிஸ் யூ ஸார்.

"ஓ மைனா ஓ மைனா...
இது உன் கண்ணா
பொன்மீனா ஓடும் புள்ளி மானா
பூவில் சிந்தும் தேனா...

1971இல் வெளியான `நான்கு சுவர்கள்’ படப்பாடல்.

முன்னுரையை நான் எழுத முடிவுரையை நீ எழுத ..
நம் உறவை ஊரறிய நான் தரவா நீ தரவா"

இடையிடையே குழலிசை.. இளமை + இனிமை துள்ள உற்சாகம் கரை புரண்டு ஓடி உணர்வில் கலக்கும் இப்பாடலுக்கு முடிவுரையே கிடையாது.


பாடலின் ஆரம்பத்திலும் இறுதியிலும் எஸ்பிபி யின் ஹம்மிங் லா..லா லவ் லா. .. செம மாஸா இருக்கும்.


எம்.எஸ்.வி இசையில் எஸ்பிபி பாடிய இந்தப் பாடலைக் கேட்க மைனாவை போல் நம் மனமும் வானில் பறக்கும்.

"தென்றலுக்கு என்றும் வயது 16 அன்றோ செவ்வானத்தின் வண்ண நிலவும்
சின்னவள் தான் அன்றோ.."

(பயணம் : 1976)

பாடலின் ஒரு வரியிலேயே இத்தனை ஜாலம் காட்ட எஸ்பிபி யால் மட்டுமே முடியும்.

"பட்டுச்சேலை கட்டும் சோலை
வாடுது கண் பட்டு
பன்னீர் சொம்பு முன்னால் நின்று வா ஆஆஆஆஎன்றது"


வார்த்தைகளில் மூழ்கி அழுத்தி இழுத்து ரசித்துப் பாடும் அழகே அழகு. அன்பான நாயகன் காதல் வெளிப்படும் விதத்தில் பாடும் இந்தப் பாடலை தன் பஞ்சாமிர்த குரலால் பாடி நம்மை பரவசத்தில் ஆழ்த்தும் (திய)எஸ்பிபியின் குரலுக்கு என்றும் வயது பதினாறு தான்.

எஸ்.பி.பி

யாரும் இல்லை இங்கே இடம் இடம் இது சுகம் சுகம் தினம் தரும் தரும்..
ஆசை நெஞ்சம் எங்கே வரும் வரும் அது வரும் வரை கொஞ்சம் பொறும் பொறும்..

(பணத்துக்காக : 1974 இல் வெள்வந்த படம்)"

எம்.எஸ்.வி இசையில் எஸ்பிபி பாடிய இந்தப் பாடலில் தான் எவ்வளவு வேகம். எஸ்பிபி யின் உற்சாகமான குரலில் இந்தப் பாடலைக் கேட்க  மகிழ்வான உணர்வு + சுறுசுறுப்பு இப்படி எல்லாம் வரும் . அதிலும் குறிப்பாக அவர் ' ஐ லவ் யூ 'ன்னு ஹை பிட்ச் ல பாடுறப்ப .. நான் எதுவும் சொல்லலப்பா ..நீங்களே பாடலைக்கேட்டுப் பாருங்க!

எஸ்பிபி சார்.. உங்களை போல் "யாரும் இல்லை" இங்கே..!

"உன்னை தொட்ட காற்று வந்து

என்னைத் தொட்டது

அதுவே போதும் போதும்

என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டது...."

(படம் : நவக்கிரகம்)

பாடலின் ஆரம்ப ஹம்மிங்கை பாலு சார் தொடர, அற்புதமான இசையோடு இணையும் சுசீலா அம்மாவின் குரல் அழகு. எப்போது கேட்டாலும் புத்தம் புதியது போல் இருப்பதுதான் இந்த பாடலின் வெற்றிக்கு காரணம்.

வி.குமாரின் இசையில் வீணையின் நாதம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். ( எஸ்பிபி யின் ஆரம்ப ஹம்மிங்... கொள்ளை அழகு)

எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நீங்கள் அதே அழகு' பாடும் நிலா பாலு'வாகவே எங்கள் நெஞ்சில் இருப்பீர்கள்.

உங்களின் பிரிய இனிய ரசிகை

ஆதிரை வேணுகோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



from விகடன்

Comments