தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல் பாடி தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உயிரிழந்தார். அவரின் புகழை போற்றும் வகையில் அவர் கடைசி மூச்சு வரை வாழ்ந்த காம்தார் நகர் வீதிக்கு அவரின் பெயரைச் சூட்டிட முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார் எஸ்.பி.பி-யின் மகன் சரண். இந்த கோரிக்கையை ஏற்று நுங்கம்பாக்கம் காம்தார் வீதிக்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயர் சூட்டியிருக்கிறது தமிழக அரசு.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ``பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும் திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவருமான திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு நம்மை விட்டுப் பிரிந்தார்.
காலம் அவரைப் பிரித்தாலும் நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும் அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவிற்கு, `எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயரிடப்படும்.” எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பாடகர் S.P.பாலசுப்ரமணியம் மகன் S.P.B சரண் வெளியிட்டிருக்கும் வீடியோவில்,``நேற்று அப்பாவின் நினைவு நாள். அதனால், அப்பா வசித்த வீடு இருக்கும் தெருவுக்கு, அப்பாவின் பெயரை வைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க முயன்றேன். ஆனால் அவரின் வேலைபழுவால் அவரை சந்திக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து மனு அளித்தேன்.
மனு அளித்து 36 மணி நேரத்தில் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அற்புத தருணத்தில், தகவல் துறை அமைச்சர் சாமிநாதன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட இந்த அரசுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக மிக்க மிக்க நன்றி." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from விகடன்
Comments