Parithabangal: ``சிலர் மனம் புண்பட்டிருந்தால்" திருப்பதி லட்டு வீடியோவை டெலிட் செய்த கோபி & சுதாகர்!

ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேசியளவில் பெரும் விவாதமானது. அதைத் தொடர்ந்து திருப்பதி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து பரிகாரம் தேடப்பட்டது. மேலும், இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரபல யூடியூபர்கள் கோபி - சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், ``லட்டு பரிதாபங்கள்" என்ற தலைப்பில் நேற்று ஒரு வீடியோ வெளியானது. வீடியோ வெளியான சில மணி நேரத்தில் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தது.

கோபி - சுதாகர்

ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மனம் புண்படுவதாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், பரிதாபங்கள் குழு லட்டு பரிதாபங்கள் வீடியோவை யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கியிருக்கின்றனர். இது தொடர்பாக கோபி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட வீடியோவை நீக்கியிருக்கிறோம். இதுபோல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from விகடன்

Comments