விருதுகள் ஒரு திரைப்படத்துக்கோ அல்லது திரைக் கலைஞர்களுக்கோ உட்சபட்ச அங்கீகாரம் இல்லையென்றாலும், நல்ல படைப்புகளை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான ஒரு கருவியாக வேலை செய்கிறது. அந்த வகையில், திரைத்துறையில் உலக அளவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ஆஸ்கர் விருதுகள் பார்க்கப்படுகின்றன. சர்வதேச அளவில் திரைக் கலைஞர்கள் மற்றும் படைப்புகளைக் கவுரவிக்கும் இந்த ஆஸ்கர் விருதுகள் 1929 முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, 2024-ம் ஆண்டுக்கான `ஆஸ்கர் விருதுகள்' விழா அடுத்தாண்டு மார்ச்சில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவுக்கு இந்தியா சார்பில், கிரண் ராவ் இயக்கத்தில், அமீர் கான் தயாரிப்பில் இந்தாண்டு வெளியாகி அனைத்து வகையிலும் பெரும் பாராட்டுகளைக் குவித்த `லாபத்தா லேடீஸ் (Laapataa Ladies)' திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் அதன் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு லாபத்தா லேடீஸ் திரைப்படம் அங்கு திரையிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கோர்ட் (Court) - ஆஸ்கர் 2015
அறிமுக இயக்குநர் சைதன்யா தம்ஹானேவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான மராத்தி திரைப்படம் `கோர்ட்'. இப்படத்தின் கதைக் களத்தைப் பொறுத்தவரை, சமூக ஆர்வலர், ஆசிரியர், கவிஞர் எனப் பன்முகம் கொண்ட கிராமப்புற கலைஞர் நாராயணன் காம்ளே.
அவர் மேடையில் பாடிய பாடலால், துப்புரவு தொழிலாளி தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக அவர் கைது செய்யப்பட்டு மும்பை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறார். இதில் தவறு எங்கே நடந்திருக்கிறது, அவர் வழக்கிலிருந்து விடுதலையாகிறாரா இல்லையா என்பதே மிச்ச கதை. படத்தில் வழக்கின் விசாரணை மூலம் இந்தியச் சட்டத்துறையில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறது இந்த படம்.
விசாரணை (Visaranai) - ஆஸ்கர் 2016
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனின் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை மையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் `விசாரணை'. ஆந்திராவில் வேலை செய்யும் அப்பாவி தமிழக இளைஞர்களை, திருட்டு வழக்கு ஒன்றில் சிக்க வைக்கும் காவல்துறை அதிகாரிகள், அவர்கள் செய்யாதக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க முயல்கின்றனர்.
இறுதியில் அவர்கள் அதிலிருந்து மீண்டார்களா இல்லையா, அவர்கள் என்ன ஆனார்கள் என்பதைக் காட்சிப்படுத்துகிறது மீதி கதை. இதில், அதிகாரமற்ற எளியவர்களிடம் காவல்துறையினர் எந்த எல்லை வரை அத்துமீறுகின்றனர், அவர்களில் ஓரிரு நல்ல அதிகாரிகள் இருந்தாலும் அதிகாரத்தால் எப்படி அவர்களின் கைகள் காட்டப்படுகின்றன என்ற கோர முகத்தை எந்தவொரு முலாம் பூசாமல் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியதற்ககாகவே ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது இந்த விசாரணை.
நியூட்டன் (Newton) - ஆஸ்கர் 2017
அமித் மசார்காரின் கதை மற்றும் இயக்கத்தில் வெளியான இந்தி மொழித் திரைப்படம் `நியூட்டன்'. சத்தீஸ்கரில் தேர்தல் பணிக்காக நேர்மையான அதிகாரியாகச் செல்கிறார் படத்தின் நாயகன். ஆனால், அங்கு வறுமை, கல்வி, மருத்துவம், சாலை ஆகிய அடிப்படைத் தேவைகளைக் கூட நிவர்த்தி செய்யாத மத்திய, மாநில அரசுகள் மீதான அதிருப்தியாலும், அங்கிருக்கும் சுரங்க நிறுவனங்களின் சுரண்டல், மாவோயிஸ்ட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் அல்லல்படுத்தல் ஆகியவற்றாலும் தேர்தல் மீது பழங்குடி மக்கள் நம்பிக்கையற்று இருக்கின்றனர்.
இத்தகைய சூழலில் விதிமுறைகளின்படி தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என்று தீவிராக இருக்கும் நாயகன் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறான், இறுதியில் தேர்தல் நடந்ததா என்பதே கதை. இதில், பதட்டம் நிறைந்த மாநிலத்தில் அரசுகளின் வேலைகளைச் சட்டத்தின்படி சரியாகச் செய்கிறதா என்கிற பலத்த கேள்வியை முன்வைக்கிறது இந்த நியூட்டன்.
வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (Village Rockstars) - ஆஸ்கர் 2018
இயக்குநர் ரிமா தாஸின் எழுத்து மற்றும் இயக்கத்தில் செதுக்கப்பட்ட அஸ்ஸாமிய மொழி திரைப்படம் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ். ஒரு குக்கிராமத்தில் கைம்பெண் தாய் மற்றும் சகோரனுடன் வளர்கிறான் 10 வயது சிறுவன்.
அச்சிறுவன், உண்மையான கிட்டாரை வாங்கி வாசித்து ஒரு நிஜ மியூசிக்கல் பேண்ட்டை உருவாக்கினாரா, கனவு நிறைவேறியதா, அந்தக் கிராமம் எப்படியான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறது என்பதே கதை. சினிமா இலக்கணங்களை உடைத்து சர்வதேச அளவில் பாராட்டுகளைக் குவித்தது இந்தப் படம்.
கல்லி பாய் (Gully Boy) - ஆஸ்கர் 2019
ஜோயா அக்தர் இயக்கத்தில், ரன்வீர் சிங்கின் நடிப்பில் வெளியான இந்தித் திரைப்படம் கல்லி பாய். உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலிருந்து, ஹிப்ஹாப்பில் வேர்விட்டு வளர துடிக்கும் ஒரு தெருப் பாடகரின் கதைதான் இந்த கல்லி பாய்.
ஜல்லிக்கட்டு (Jallikattu) - ஆஸ்கர் 2020
மலையாளத்தில் 'ஈ மா யூ', 'அங்கமாளி டைரிஸ்' உள்ளிட்ட மிக முக்கியமானப் படங்களின் இயக்குநரான லிஜோ ஜோஸின் இயக்கத்தில் உருவான மற்றுமொரு முக்கியத் திரைப்படம் ஜல்லிக்கட்டு. `பூமலை என்ற மலைப்பிரதேச கிராமத்தில் வர்கீ என்பவரின் பீஃப் இறைச்சி பெரும் பிரபலமாகிறது. நாவிற்கு விருந்தாய் வர்கீ வெட்டும் மாட்டிறைச்சிக்கு எக்கச்சக்க டிமாண்ட். அலையெனத் திரண்டு அதை வாங்கிச்சென்று உண்கின்றனர் மக்கள்.
மாட்டின் மூக்கனாங்கயிறு, மனிதனின் கையில் இருக்கும் வரைதான் அவன் அதனின் ராஜா. அந்த மூக்கனாங்கயிறு அறுபட்டு, மாடு ஆர்ப்பரித்து ஓடினால் என்னவாகும்? `சாதாரண எருமைதானே... ஊர் மக்கள் ஒன்றுதிரண்டால் பிடித்துவிடலாம்தானே' என்று படத்தின் ஆரம்பத்தில் நினைத்தவர்களுக்கு அதற்கான விடையை நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்லும் படமே, ஜல்லிக்கட்டு'.
கூழாங்கல் (Pebbles) - ஆஸ்கர் 2021
கடந்த மாதம் தமிழில் வெளியான கொட்டுக்காளி என்ற திரைப்படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் முதல் திரைப்படம்தான் கூழாங்கல். இந்தக் கூழாங்கல் சர்வதேச அங்கீகாரங்களைக் குவித்த பிறகே தமிழில் வெளியானது. ஆணாதிக்கம், குடும்ப வன்முறை, மது அடிமைத்தனம் ஆகியவற்றை சமரசமின்றி மண்வாசனையிலிருந்து விலகாமல் அப்படியே திரையில் காண்பித்து இந்த சமூகத்தின்மீது கூழாங்கல்-ஐ எறிந்திருக்கிறார் வினோத்ராஜ்.
லாஸ்ட் ஃபிலிம் ஷோ (Last Film Show) - ஆஸ்கர் 2022
பான் நளின் இயக்கத்தில் ஒரு சிறுவனின் கனவைக் கருவாக வைத்து உருவான குஜராத்தி திரைப்படம்தான் லாஸ்ட் ஃபிலிம் ஷோ. சௌராஷ்டிராவில் சிறிய கிராமத்தில் டீக்கடை வைத்திருப்பவரின் ஒன்பது வயது மகன்தான் கதையின் நாயகன்.
ஒருமுறை தன்னுடைய தந்தையுடன் தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்ற சிறுவனை சினிமா ஆட்கொள்கிறது. சிறுவனின் கனவாக மாறுகிறது சினிமா. அதன்பின்னர் சினிமா எடுக்கும் முயற்சியில் சிறுவன் என்னென்ன செய்கிறான், எந்த மாதிரியான சூழலை எதிர்கொள்கிறான் என்பதை லாஸ்ட் ஃபிலிம் ஷோ என்ற சினிமா மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பான் நளின்.
2018 (Everyone is a Hero) - ஆஸ்கர் 2023
ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கம் மற்றும் டோவினோ தாமஸ் உட்பட ஒரு நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவான மலையாளத் திரைப்படம் 2018 (Everyone is a Hero). 2018-ல் கேரளாவில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தை மையமாக எடுக்கப்பட்ட இப்படத்தில், எந்தவொரு கனெக்ஷனும் இல்லாமல் பல்வேறு பின்புலங்களுடன், கனவுகளுடன் வரும் கதாபாத்திரங்கள் வெள்ளத்தின்போது எப்படி ஒன்றிணைந்து எப்படி நாயகர்கள் ஆனார்கள் என்பதே கதை.
லாபத்தா லேடீஸ் (Laapataa Ladies) - ஆஸ்கர் 2024
கிரண் ராவின் இயக்கம் மற்றும் அமீர் கானின் தயாரிப்புக் கூட்டணியில் 2011-ல் வெளியாகி சர்வதேச கவனத்தைப் பெற்ற திரைப்படம் தோபிகாட். அதைத்தொடர்ந்து, சரியாக 12 வருடங்களுக்குப் பிறகு இதே கூட்டணியில் இந்தாண்டு வெளியாகியிருக்கும் லாபத்தா லேடீஸ் என்ற திரைப்படம், மீண்டும் ஒருமுறை சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டு வெவ்வேறு திருமண ஜோடிகள் ஒரே ரயிலில் பயணிக்கின்றனர். இரண்டு வெவ்வேறு மனைவிகளும் ஒரே வண்ண உடையில் இருக்க, ஒரு கணவன் தெரியாமல் தன்னுடைய மனைவிக்குப் பதில் வேறொரு மனைவியை அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வந்துவிடுகிறான்.
அந்தப் பெண்ணுக்கும் அங்கு வந்த பிறகுதான் உண்மை தெரிகிறது. ஆனால், அவர் தன் அடையாளத்தை மறைத்து அந்த வீட்டிலேயே தங்கிவிடுகிறார். உண்மை தெரிந்த பிறகும் அவர் ஏன் அங்கேயே இருக்கிறார், அவருக்குள் இருக்கும் ரகசியம் என்ன, இரண்டு மனைவிகளும் தங்களின் கணவர்களைச் சேர்ந்தார்களா என்பதே மீதி கதை. எளிமையான அதேசமயம் கூர்மையான வசனங்களால் ஆணாதிக்க கொடுமை, பெண்களின் உளவியல் எனப் பலவற்றை சமூக அரசியலாகப் பேசுகிறது இந்த லாபத்தா லேடீஸ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
from விகடன்
Comments