தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'லப்பர் பந்து' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் விஜயகாந்த்தின் தீவிர ரசிகராக வரும் கெத்து தினேஷ், அவரது என்ட்ரிக்கு ஒலிக்கும் விஜயகாந்தின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' பாடல் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்து முணுமுணுக்க வைத்திருக்கிறது. இதையடுத்து சமூகவலைதளமெங்கும் இப்பாடலும், இப்படம் தொடர்பான காணொலிகளும் வைராலாகி ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 27) 'லப்பர் பந்து படத்தைப் பார்த்த பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் ஆகியோர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, படத்தில் விஜயகாந்த் பற்றியிருக்கும் காட்சிகள், பாடல்கள் குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பேசியிருக்கின்றனர். மேலும், விஜய்யின் 'G.O.A.T' படம் விஜயகாந்த்தின் 'ராஜதுரை' படத்தின் கதை என்றும் விஜயகாந்தின் வாழ்கை வரலாறு எடுப்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் பிரேமலதா விஜயகாந்த், " 'லப்பர் பந்து' படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் வந்து கேப்டனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, எங்களைப் பார்த்துப் பேசினர். அப்போது ‘லப்பர் பந்து’ படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இது கேப்டனுக்காக நாங்கள் அர்பணித்திருக்கும் படம் என்றனர்.
இன்றைக்குத்தான் குடும்பத்துடன் ‘லப்பர் பந்து’ படத்தைப் பார்த்தோம். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், பாடல்களிலும் கேப்டனின் தாக்கம் இருந்தது. கேப்டனின் ரசிகர்கள், 'தேமுதிக' தொண்டர்கள் அனைவரும் இப்படத்தைக் கொண்டாடிப் பார்ப்பார்கள். இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள். கிரிக்கெட் இளைஞர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால் இப்படம் இன்னும் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெறும். கேப்டனின் 'நீ பொட்டு வச்ச தங்கக் குடம்' பாடல் இப்போது எங்கும் வைரலாகி வருகிறது. இனி வரப்போகிற ஐபிஎல் தொடரிலும்கூட தோனிக்கும் கேப்டன் விஜயகாந்தின் பாடலைத்தான் போட்டு வரவேற்பார்கள்.
‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் எங்கள் கட்சிக் கூட்டம், பிரசாரங்கள் என எங்கும் ஒலித்தப் பாடலாகும். கேப்டன் எங்கு சென்றாலும் இந்தப் பாட்டுத்தான் ஒலிக்கும். பட்டி தொட்டியெல்லாம் மக்கள் கொண்டாடியப் பாடல். அந்தப் பாடலை இயக்குநர் இப்படத்தில் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். அப்பாடல் இப்படத்தின் மூலம் இன்னும் கொண்டாடப்பட்டிருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
கேப்டன் மகனான சண்முகப்பாண்டியன் நடிக்கும் திரைப்படங்களிலும் கேப்டன் பாடல், போஸ்டர்கள் எல்லாம் இடம்பெறும். மூன்று படங்களில் நடித்து வருகிறார் அவர். அந்தப் படங்களில் எல்லாம் கேப்டன் எங்கும் இருப்பார். சண்முகப் பாண்டியனுக்கும் கேப்டன் பாடல் ஒலிக்கும். திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமையெல்லாம் யாரிடமும் கேட்க மாட்டோம். கேப்டன் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து” என்றார்.
மேலும் விஜய்யின் 'G.O.A.T' திரைப்படம் குறித்துப் பேசியவர், "விஜய்யின் ‘G.O.A.T’ படத்தில் கேப்டனை இந்த அளவிற்குக் காண்பிக்கவில்லை என்றாலும், படத்தின் முதல் காட்சியே கேப்டனை வைத்துத்தான் ஆரம்பிக்கிறது. கேப்டனை முதல்முறையாக AI தொழில்நுட்பம் மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் ‘G.O.A.T’ கதையே கேப்டனின் ‘ராஜதுரை’ படத்தின் கதையை வைத்துத்தான் எடுக்கப்பட்டது என்று பலர் என்னிடம் கூறினார்கள். ‘G.O.A.T’ படமும் நல்ல படம்தான், ‘லப்பர் பந்து’ படமும் நல்ல படம்தான்" என்று பேசியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
from விகடன்
Comments