janhvi kapoor: `NTR ரசிகர்களால் ஜானு பாப்பா என்று அழைக்கப்படுவது...' - தேவரா குறித்து ஜான்வி கபூர்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல்வேறு மொழி படங்களில் நடித்து 80-ஸ், 90-ஸ் களில் உச்சத்தில் இருந்தவர், நடிகை ஶ்ரீ தேவி. இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகள் தான் ஜான்வி கபூர். தடாக் என்ற படத்தில் நடித்து ஹீரோயினாக ஹிந்தியில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு கோஸ்ட் ஸ்டோரிஸ், கஞ்சன் சக்சேனா கார்கில் கேர்ள் உள்ளிட்ட படங்களில் நடித்து தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

ஜான்வி கபூர்

இந்த நிலையில்தான், கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தேவரா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் 27-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் முதல் படம் என்பதால், இந்தப் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

தேவரா பட புரோமோஷனுக்காக தமிழ்நாடு வந்திருந்த ஜான்வி கபூர் ``எல்லோருக்கும் வணக்கம்" எனக் கொஞ்சும் தமிழில் பேசத் தொடங்கி, ``நீங்கள் எனது அம்மா மீது காட்டிய அன்புதான் நானும், எனது குடும்பமும் இந்த நிலைமையில் இருப்பதற்கான காரணம். நான் எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்." எனப் பேசி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இந்த நிலையில்தான், ஜான்வி கபூர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``அந்தரிகி நமஸ்காரம்" எனத் தெலுங்கில் பேசத் தொடங்கியிருக்கிறார். அதில், ``என்.டி.ஆர் சார் ரசிகர்களால் ஜானு பாப்பா என்று அழைக்கப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் என் அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை நான் அறிவேன். எனக்கு என் அம்மாவுக்கு சமமானவர்கள் நீங்கள். உங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைப்பேன்.

நீங்கள் காட்டும் ஆதரவுக்காகவும், பாராட்டுக்காகவும் அனைவரையும் பெருமைப்படச் செய்வேன். தேவரா என் முதல் படி, என்.டி.ஆர் சார், கொரட்டாலா சிவா சார் என்னை நடிகையாக தேர்வு செய்தது என் அதிர்ஷ்டம். எங்களின் கூட்டு முயற்சி உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். எனக்கு உதவிய மொத்த யூனிட்டுக்கும் நன்றி" எனப் பேசியிருக்கிறார். அவரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



from விகடன்

Comments