Hema Committee: "எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் பதில் சொல்லித்தான் ஆகணும்" - வெற்றிமாறன்

'The Hollywood Reporter' என்கிற அமெரிக்கப் பத்திரிகை இந்தியாவில் தங்களின் பதிப்பைத் தொடங்கியிருக்கிறது. இதற்காக வெற்றிமாறன், ரஞ்சித், மகேஷ் நாராயண், கரண் ஜோஹர் ஆகிய திரைப்பட இயக்குநர்களை வைத்து ஒரு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது. அதில் வெற்றிமாறன் பேசிய விஷயங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
வெற்றிமாறன்

ஹேமா கமிட்டியின் அறிக்கை பற்றி அவர் பேசியதாவது, "திரைத்துறையின் ஒரு அங்கமாக நாம் இதைப் பற்றி பேசியேதான் ஆக வேண்டும். தான் பாதிக்கப்பட்டதாக ஒரு பெண் முன் வந்து பேசினால் முதலில் அந்தப் பெண்ணிடம்தான் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்கிறார்கள்.

நீங்கள் ஏன் அப்போதே சொல்லவில்லை? நீங்கள் இடம் கொடுக்காமல் இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்றெல்லாம் கேட்கிறார்கள். இது ரொம்ப ரொம்ப மோசமான விஷயம்.
வெற்றிமாறன்

குற்றம்சாட்டப்படும் நபர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நாம் பாதிக்கப்பட்டவரின் பக்கம்தான் நிற்க வேண்டும். இதுவரை அந்த நபர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, அதனால் அவர் நல்லவராகத்தான் இருப்பார் போன்ற நிலைப்பாட்டையெல்லாம் எடுக்கக்கூடாது. தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவருக்குத்தான் இருக்க வேண்டும்." என்றார்.

சினிமாவின் தற்போதைய சூழலைப் பற்றிப் பேசுகையில், "தியேட்டர் மூலம் கிடைக்கும் வசூல் குறைந்துவிட்டதாக நினைக்கவில்லை. ஓடிடி நிறுவனங்கள் இங்கே ஒரு பண வீக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். ஒரு கட்டத்தில் ரஜினி, விஜய் படங்களுக்கு 100-120 கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருந்தனர். இதனால் நடிகர்களின் சம்பளம் அதிகரித்தது. படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. காலப்போக்கில் இவ்வளவு செலவழிப்பது நமக்கு லாபத்தைத் தராது எனும் நிலையை ஓடிடி நிறுவனங்கள் எட்டிவிட்டன. இதனால் அவர்கள் படங்கள் வாங்குவது குறைகிறது. ஆனால், நடிகர்கள் பெரிய சம்பளம் வாங்கி பழகிவிட்டார்கள். பெரிய படங்களாக எடுக்கும் வழக்கம் ஒட்டிக்கொண்டுவிட்டது. இதுதான் பிரச்சனை.

வெற்றிமாறன்

சமீபத்தில் வாழை என்கிற படம் வெளியானது. மாரி செல்வராஜ் என்கிற பெயர் மட்டும்தான் அதில் வியாபார பொருள். மற்றபடி படத்தில் யாரையும் தெரியாது. ஆனால், அந்த படம் அதன் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக தியேட்டர்களில் வசூல் செய்திருக்கிறது. அதனால் தியேட்டர் வசூல் பொய்த்துப் போகவில்லை. நாம்தான் நம்மை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். ஜனநாயகமாக நாம் சொல்ல நினைக்கும் கதைகளை தியேட்டர் ரசிகர்களுக்குத்தான் சுதந்திரமாகச் சொல்ல முடியும். ஓடிடிக்களில் நிறையக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பீப் சாப்பிடுவது போல ஒரு காட்சியை வைக்க அனுமதிக்க மாட்டார்கள். இதனால் அந்த அமைப்பின் மனம் புண்படும், இந்த அமைப்பின் மனம் புண்படும் என்பார்கள். நிறையப் பணம் கொடுப்பதால் அவர்கள் நிறையக் கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறார்கள்." என்றார்.

விடுதலை படம் குறித்துப் பேசியவர், "விடுதலை திரைப்படத்தை முதலில் 40 நாட்களில் சின்ன பட்ஜெட்டில் எடுப்பதற்குத்தான் திட்டமிட்டேன். ஆனால், படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றவுடன் அங்கிருக்கும் சூழல் என்னை மீண்டும் நிறைய விஷயங்களை மாற்றிக் கொள்ள வைத்தது. இதனால் 200 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. 8 நாட்கள் கால்ஷீட் என உள்ளே வந்த விஜய் சேதுபதி 120 நாட்கள் நடித்துவிட்டார்.

வெற்றிமாறன், விஜய்சேதுபதி

விருது விழாக்களில் திரையிடுவதற்காக இரண்டு பாகங்களையும் இணைத்து நான்கரை மணி நேரத்துக்கு ஒரு வெர்ஷனை உருவாக்கினேன். ஆனால், இன்னமும் 20 நாட்கள் படப்பிடிப்பு மிச்சமிருக்கிறது. டிசம்பர் 20 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்." என்றார்.

ஹேமா கமிட்டி மற்றும் ஓடிடிக்கள் பற்றிய இயக்குநர் வெற்றிமாறனின் கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



from விகடன்

Comments