Thangalaan: 'பன் பரோட்டா, ஆம்பூர் மட்டன், இளநீர் பாயசம்' - தங்கலான் வெற்றிக்கு விக்ரம் தந்த விருந்து
நடிகர் விக்ரமை வைத்து பா.இரஞ்சித் இயக்கிய 'தங்கலான்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதி இத்திரைப்படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் கிடைத்த வெற்றியைக் கொண்டாட விக்ரம் ஒரு சக்சஸ் பார்ட்டியை படக்குழுவுக்கு வைத்திருக்கிறார். விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உட்படப் படக்குழுவினர் பலரும் இந்த வெற்றி விழாவில் பங்கேற்றனர். இந்த வெற்றி விழாவுக்குத் தயார் செய்யப்பட்ட உணவு மெனுதான் தற்போதைய இணையதள வைரல்! மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் குழுதான் இந்த பார்ட்டிக்கு உணவு தயார் செய்திருக்கிறார்கள்.
வெற்றியைக் கொண்டாட விக்ரம் கொடுக்கும் பார்ட்டி என்பதால் உணவில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்களாம். குறிப்பாக, சிறுவாணி தண்ணீரில்தான் குழம்புகளைத் தயார் செய்ய வேண்டும் என்று விக்ரம் கேட்டுக் கொண்டாராம். விக்ரமின் மனைவியான சைலஜாவும் உணவு மெனுக்கான சில இன்புட்ஸ் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள்.
உணவு மெனு என்னவென்றால்... குளிர்பானங்களாகத் தர்பூசணி இஞ்சி ஜூஸ், அன்னாசிப் பழத்துடன் மாம்பழம், புதினா கலந்த ஜுஸ் என இரண்டும் கொடுத்திருக்கிறார்கள். ஸ்வீட் வகைகளாகப் பூசணிக்காய் அல்வா மற்றும் இளநீர் பாயசம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மேலும், அசைவ சைட் டிஸ்களாக மட்டன் சாப்ஸ், கறிவேப்பிலை வஞ்சரம் மீன் வறுவல், இறால் நெய் வறுவல், ஈரோடு ஸ்பெஷல் பிச்சுப் போட்ட மிளகு கோழி வறுவல், சிக்கன் குழம்பு கலக்கி செய்திருக்கிறார்கள். சைவ சைட் டிஸ்களாக வெஜ் மட்டன் சாப்ஸ், வெஜ் மீன் வறுவல், ஜாலபீனோ சீஸ் சமோசாவும் தயார் செய்திருக்கிறார்கள்.
மெயின் உணவுகளுக்கு விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் மற்றும் காலான் பள்ளிப்பாளையம் கிரேவி, ஆம்பூர் ஸ்பெஷல் மட்டன் மற்றும் வெஜ் தம் பிரியாணி, மினி பன் தோசை, ஆந்திரா மீன் குழம்பு, வெஜ் மீன் குழம்பு, மிளகு பூண்டு ரசம் என இத்தனை வகையான உணவுகளால் படக்குழுவுக்கு ராஜ விருந்து வைத்திருக்கிறார் விக்ரம்.
மொத்தம் 600 நபர்களுக்கு உணவு செய்திருக்கிறார்களாம். 500 நபர்களுக்கு அசைவ உணவு, 100 நபர்களுக்குச் சைவ உணவு என பார்ட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது.
from விகடன்
Comments