Thangalaan: நாகர்கள், புத்தர் சிலை குறியீடுகள் - அம்பேத்கர் எழுத்தைத் திரையில் காட்டிய பா.இரஞ்சித்!

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'தங்கலான்' திரைப்படம் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களிலிருந்து விலகி ஒரு புதுவித உணர்வைத் தமிழ் ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது. அது தமிழில் ஒரு முழுநீள மாய யதார்த்தவாத திரைப்படம் என்கிற அனுபவம். பல உலகக் கலைஞர்கள் யதார்த்தத்தில் தங்கள் வாழ்வில் நடக்கும் பிரச்னைகளை, அரசியல் கருத்துகளை மற்றொரு மாய உலகத்தை ஏற்படுத்தி அதன் வழியே கதை சொல்லியிருக்கிறார்கள். அப்படியான ஒரு கலைவடிவத்தை இரஞ்சித் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார், அதற்காக அவர் கையிலெடுத்த தத்துவம் என்ன... சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

இது விமர்சனம் அல்ல ஒரு ரசனை பார்வை. ஆகையால் படத்தில் வரும் ஒரு சில முக்கிய காட்சிகள் குறித்துப் பேசும் அவசியம் இருக்கிறது. எனவே இதற்கு மேல் படத்தினை பார்த்தவர்கள் மட்டும் தொடரவும்… Spoilers Ahead!
பா.இரஞ்சித் , தமிழ்ப்பிரபா, விக்ரம்

தங்கலான் - வரலாறு, புனைவு, மாய யதார்த்தம் எனப் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட இந்தத் திரைப்படத்தில், மாய யதார்த்தம் என்கிற திரைமொழி நம் முன்னோர்களின் வேர்களைத் தேடச் சொல்லியிருக்கிறது. அதுமட்டுமல்ல அம்பேத்கரின் தீர்க்கமான எழுத்துகளுக்கு அழகியலோடு சேர்த்து காட்சி வடிவம் கொடுத்திருக்கிறது.

திரைக்கதையாசிரியர்களான பா.இரஞ்சித், தமிழ்ப்பிரபா ஆகியோர் இந்தக் கதையில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களைக் கையாண்டிருக்கிறார்கள். திரைக்கதையில் நான்-லீனியர் தன்மை இல்லாமல் அதனை வரிசையாகப் பார்த்தோமேயானால் இந்தக் கதை கடைசியில் காட்டப்படும் ஆரனுடையது. ஆரன் நாகர் இனத்தின் தலைவன். “பற்றுகளே துன்பத்திற்குக் காரணம்” என்று புத்தரின் வார்த்தையினை கேட்டுத் தங்கத்தினை தனது இணையர் ‘ஆரத்தி’யின் துணைகொண்டு பாதுகாத்து வருகிறார். இதனிடையே தங்கத்தைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை ஆரத்தியிடம் கொடுத்து, எதிரிகளை எதிர்கொள்ளப் போருக்குச் செல்கிறான் ஆரன்.

அங்கே தன்னுடைய தொன்மையை மறந்து வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அடிமையாகப் பாடுபட நேர்கிறது. ஆதிமுனி, காடையன், நாதமுனி என அவனுக்கு அடுத்து வரும் தலைமுறையினரும் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்படும் அவலமும் நேருகிறது. இந்த வம்சாவளியில் வந்த தங்கலானும் முன்னோர்களைப் போலவே நிகழ்காலத்தில் ஆதிக்க சக்திகளால் ஏமாற்றப்படுகிறான். அதுமட்டுமல்லாமல் தன் முன்னோர்களான நாகர்கள் காத்த தங்கத்தையே வெட்டி எடுக்க உதவவும் செல்கிறான். இப்படி வரலாற்றினை மறந்து சென்ற தங்கலானுக்கு அவனது உண்மை நிலையை நாகர் இனத்தலைவி குறிப்புகளால் உணர்த்தப் படம் நெடுக முயல்கிறார். இதுவே தங்கலான் படத்தின் கதை.

சுருக்கமாகச் சொன்னால், "தன்னை உணராதவர்கள் மண்ணாய் போவர், அவனைத் தலைவனாய் ஏற்றவர்களும் வீணாய்ப் போவர்" என்ற வசனமே படத்தின் கதை.
Thangalaan

5-ம் நூற்றாண்டில் காட்டில் தங்கத்தைக் காக்க விட்டுச்செல்லப்பட்ட ஆரத்தி, எப்படி தங்கலானிடம் பேச முடியும்? அதற்கு பா.இரஞ்சித் கையில் எடுத்த யுக்திதான் மாய யதார்த்தம். உலகக் கலைஞர்கள் கேப்ரியால் கார்சியஸ் மார்க்கஸ், காஃப்கா, டாலி போன்றவர்கள் மாய எதார்த்த படைப்புகளுக்குள் நம் அக, புறப் பிரச்னைகள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். மார்க்கஸ் கொலம்பியாவின் அரசியலை மெக்காண்டா என்கிற ஒரு தீவை உருவாக்கிப் பேசியிருப்பார். காஃப்கா ஒரு மனிதனைத் திடீரென பூச்சியாக மாற்றி இந்த உலகத்தில் பாசம் என்பது என்ன என்கிற கருத்தை நகையாடியிருப்பார். இங்கே ஆரத்தி என்கிற நாகர் இனத்தலைவியின் பிம்பத்தின் மூலம் "பிராமணியத்துக்கும் பௌத்தத்துக்கும் இடையிலான போர்தான் இந்திய வரலாறு" என்ற அம்பேத்கரின் சிந்தனையைக் குறியீடாக வெளிப்படுத்துகிறார் பா.இரஞ்சித்.

படம் நெடுகிலும் சிலையாகப் புத்தரின் இருப்பு இருக்கிறது. ஒரே ஒரு காட்சியில் மட்டும் பின்புறத்தில் புத்தர் பேசுவதாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. இதைச் சற்றே உற்றுநோக்கினால் ‘இந்தியாவில் பண்பாட்டுப் புரட்சியும் எதிர் புரட்சியும்’ என்கிற புத்தகத்திலுள்ள அம்பேத்கரின் அபுனைவு எழுத்துக்குக் காட்சி வடிவம் கொடுத்த உணர்வைத் தருகிறது. ஏனெனில் பூர்வ குடிகளாகக் காட்டப்படும் ஆரனும் ஆரத்தியும் நாகர் இனத்தைச் சேர்ந்தவர்கள். 15 அக்டோபர் 1956-ம் ஆண்டு பாபாசாகேப் அம்பேத்கர் 5 லட்சம் மக்களோடு புத்த மதத்தைத் தழுவும் நிகழ்வு நாக்பூரில் நடைபெற்றது.

பண்பாட்டுப் புரட்சியாகப் பார்க்கப்பட்ட அந்த நிகழ்வில் பேசிய அம்பேத்கர், “இந்த இடத்தைத் தேர்வு செய்ததற்கு ஆர்.எஸ்.எஸ் மக்கள் அதிகமாக இருப்பதுதான் காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் நினைத்த காரணமே வேறு. பௌத்த வரலாற்றை ஆராய்ந்தால் இந்தியாவில் பௌத்தத்தைப் பரப்பியவர்கள் நாகர் இனத்தவர்கள் என்பது தெரிய வரும். நாகர் இன மக்கள் ஆரியர்களின் கடுமையான எதிரிகள்.

Thangalaan | தங்கலான்

ஆரியர்களுக்கும் ஆரியர் அல்லாதவர்களுக்கும் இடையே பல கடுமையான போர்கள் நடந்தன. ஆரியர்கள் நாகர்களை எரித்ததற்குப் பல சான்றுகள் புராணங்களில் கிடைக்கின்றன. அதில் அகஸ்திய முனிவரால் ஒரே ஒரு நாகர் மட்டுமே காப்பாற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நாம் அனைவரும் அவருடைய வழித்தோன்றல்கள். இப்படி அடக்குமுறையைப் பொறுத்துக் கொண்ட நாகர் மக்களுக்கு அவர்களை உயர்த்துவதற்கு ஒரு பெரிய மனிதர் தேவைப்பட்டார், அப்போது அந்த மக்கள் கண்டடைந்தவரே கௌதம புத்தர். நாகர்கள் புத்த பெருமானின் போதனைகளை இந்தியா முழுவதும் பரப்பினர். அப்படிப்பட்ட நாகர்கள்தான் நாம். நாகர் மக்களின் முக்கிய வாழ்விடம் நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கிறது. எனவே இந்த நகரத்தைத் தேர்வு செய்தேன்” என்றார்.

படத்தில் நாகர்கள் தமிழ் பேசுகிறார்களே என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். அதற்குப் பதில் சொல்வது போல “தீண்டப்படாதவர் யார்” என்கிற நூலில் பூர்வ பௌத்தர்களின் வரலாற்றினை எழுதும் அம்பேத்கர், நாகர்களும், திராவிடர்களும் ஒரே மக்களே என்கிறார். நாகர்கள் பேசிய மொழி தமிழ் என்பவர் இந்தியா முழுவதும் தமிழ் மொழியே பேச்சுமொழியாக இருந்தது. ஆனால் அதில் சமஸ்கிருத கலப்பு ஏற்பட ‘டமிட்டா’ என்று மருவி பின்னர் ‘டமில்லா’ என்று உருமாறி இறுதியில் ‘திராவிடம்’ ஆனது என்கிறார்.
ஆரத்தி - மாளவிகா மோகனன்

அம்பேத்கர், “திராவிடம் என்பது மக்களுடைய மொழியின் பெயரே... அது மக்களின் இனத்தைக் குறிக்காது. தமிழ் அல்லது திராவிடம் என்பது வெறும் தென்னிந்தியாவின் மொழியாக இல்லாமல், ஆரியர்கள் வருவதற்கு முன்பு, அது காஷ்மீர் முதல் குமரி முனை வரை பேசப்பட்டது. வட இந்தியாவில் உள்ள நாகர்கள் தங்கள் தாய் மொழியாக இருந்த தமிழைக் கைவிட்டு, அதன் இடத்தில் சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டனர். திராவிடம் என்ற பெயர் தென்னிந்திய மக்களுக்கு மட்டும் ஏன் வந்தது என்பதை விளக்க இது உதவும். வட இந்தியாவின் நாகர்கள் திராவிட மொழியைப் பேசுவதை நிறுத்தியதால் திராவிடம் என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் நிறுத்தப்பட்டது. ஆனால் தென்னிந்தியாவின் நாகர்களைப் பொறுத்தவரையில் திராவிட மொழியின் மீதுள்ள பற்றின் காரணமாக அவர்களைத் திராவிடர் என்று அழைப்பது வழக்கமானது” என்கிறார்.

இதற்காக உதாரணங்களை அடுக்கும்போது தென்னிந்தியாவில் மலபார் பகுதியிலிருக்கும் நாகமலை, தமிழகத்திலிருக்கும் நாகர்கோவில், நாகப்பட்டினம் போன்ற பெயர்களையும் சான்றாகக் கூறலாம்.

தங்கலானில் எப்போதெல்லாம் கதாபாத்திரங்கள் தங்கத்தை நெருங்குகிறார்களோ அப்போதெல்லாம் அதைத் தடுக்க பாம்பின் தாக்குதல் ஏற்படும் காட்சிகளைக் காணலாம். இது புத்தர் தவமிருந்தபோது வந்த மழையிலிருந்து காத்த ஐந்து தலை நாக கதையின் குறியீட்டோடு இணைகிறது. இப்போதும் உலகெங்கும் இருக்கிற புத்தர் சிலைகளில் ஐந்து தலை நாகத்தினைப் பார்க்கலாம். மேலும் தங்கலான் முனி, நாத முனி, காடையன் முனி என்பதுகூட புத்தரின் மற்றொரு பெயராக அம்பேத்கர் குறிப்பிடும் சாக்கிய முனியோடு தொடர்பிலிருக்கிறது.

அடுத்தாக காடையன் காலத்தில் பிராமண புரோகிதரின் தூண்டுதலின் பெயரில் தலை வெட்டப்படும் புத்தர் சிலை, மீண்டும் தங்கலான் காலத்தில் அவரது மகன் அசோகனால் கண்டெடுக்கப்பட்டு அதன் தலையும் உடலும் இணைகிற காட்சி... இது தலித் கலை வரலாற்றில் தவிர்க்கவே முடியாத ஒப்பற்ற காட்சி. ஏனெனில் "தவறாகத் தீர்வு காணப்பட்டவை ஒருபோதும் தீர்வாகாது, அது மீள் குடியேற்றப்பட வேண்டும்" என்ற அம்பேத்கரின் எழுத்துக்கு அது கலை மரியாதை செய்திருக்கிறது.

தங்கலான்

ஏனெனில் அம்பேத்கர், “இந்தியாவின் வரலாறு பிராமணியத்துக்கும், பௌத்தத்துக்கும் எதிரான போர்” என்றார். அது தொடர்பான கட்டுரை, "இந்தியாவிற்குப் படையெடுத்து வந்த ஆரியர்கள் அதை அவர்கள் தங்களின் சொந்த நாடாக மாற்றிக்கொண்டார்கள். ஆனால் அசுர பலம் கொண்ட நாகர்களின் பலத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அதனால் அவர்களோடு சமாதானம் செய்து வாழப் பழகினர். மேலும் 'மகதா' போன்ற பெரும் ராஜ்ஜியங்களை நாகர்கள் ஆண்டிருக்கிறார்கள். அதற்கும் பின்னர் பல சாம்ராஜ்யங்கள் மாறினாலும் நாகர்களிடமே ராஜ்ஜியம் இருந்திருக்கிறது. மௌரியப் பேரரசரான அசோகர் அதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி, பல மதங்கள் நாட்டிலிருந்தபோதும் பௌத்த பேரரசினை நிறுவினார். இதனால் பிராமணியம் ஓரங்கட்டப்பட்டது. சுமார் 140 ஆண்டுக்காலம் பிராமணர்கள் இரண்டாம் நிலைக்கே தள்ளப்பட்டனர். பௌத்தர்களின் உயரிய நிலைக்கு அவர்களின் புலால் உண்ணாமையே காரணம் எனத் தங்கள் கொள்கையில் அதைச் சேர்த்து பௌத்தத்தின் வீழ்ச்சிக்குக் காத்திருந்தார்கள்.

அப்போது சுங்க கோத்திரத்தைச் சேர்ந்த சாமவேதி பிராமணனானப் புஷ்ய மித்திரன், பிராமணியத்தையும், பிராமண மேலாதிக்கத்தையும் மீட்டெடுக்க வேண்டி அசோகரின் வழித்தோன்றலான பௌத்த அரசனான மௌரியப் பேரரசின் கடைசி மன்னரைக் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினான். பௌத்தத்தைப் பூண்டோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்று எண்ணிய புஷ்ய மித்திரன் ஒவ்வொரு பௌத்த பிக்குவின் தலைக்கும் நூறு பொற்காசுகள் விலையாக வைத்தான். கீதை, மனுஸ்மிருதி ஆகியவற்றைச் சட்டமாக நடைமுறைக்குக் கொண்டு வந்தான். மனுவுக்கு முன்னதான ஆரியச் சட்டம் மன்னனுக்கு எதிரான பிராமணக் கிளர்ச்சியைத் தடை செய்கிறது. ஆனால் மனுவோ அந்தக் கிளர்ச்சியை நியாயப்படுத்துவதற்காகச் சட்டத்தையே மாற்றி, பிராமணர்களுக்கு ஏகபோக உரிமைகளை வழங்கியது. வர்ணத்தில் சாதியைக் கொண்டு வந்தது. வர்ண படிநிலையை உருவாக்கியது. சூத்திரர் மற்றும் பெண்களை இழிநிலைக்குக் கொண்டு போனது. மெல்ல மெல்லப் பௌத்தத்தைப் பிராமணியம் விழுங்கியது" என்கிறது.

இதை உணர்த்தும் காட்சியாக காடையனிடம் தங்கத்தை எடுத்துச் சொல்லக் கட்டளையிடும் மன்னன், தன் படையில் இருக்கும் புரோகித பிராமணரிடம் பணிந்து உத்தரவு வாங்கும் காட்சியைப் பார்க்கலாம்.
`தங்கலான்' படத்தில்...

இந்தத் தொன்ம வரலாற்றினை மறந்து இந்தியத் தேசம் முழுக்க பரவியிருந்த நாகர் மக்கள் குடியானவர்களாக வர்ணத்துக்கு வெளியே நின்று சண்டையிட்டு அவனர்களாக, பஞ்சமர்களாக அவதியுற்றனர். ஆனால் வரலாற்றினை அவர்களுக்கு எடுத்துக் கூற நாதியில்லை. இந்நிலையில் படத்தில் 'ஆரனே ஆரனே' என்று தங்கலானின் உண்மை நிலையை உணர்த்த கூர்க்கொம்பினை சுழற்றும் 'ஆரத்தி' போல, அம்பேத்கரும் பேனாவைச் சுழற்றி இந்த வரலாற்றினை எழுத்தாக உருவாக்கினார். அகத்திய முனி நாகர்களைக் காப்பாற்றியது போல, சாக்கிய முனியான புத்தரை ஒற்றை ஆளாக மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்த்தார். தன்னை உணர்ந்த அம்பேத்கர், புத்தரை இறுதியாகக் கைகாட்டி சென்றார். இங்கே இறுதி காட்சியில் ஆரத்தி தங்கலானுக்கு ஆரனை உணர்த்தி விடைபெற்றுக்கொள்கிறார். ஆனால் படம் அங்கேயே முடியவில்லை. ஆரத்தி, புத்தரின் சிலை அருகே நிற்க, தங்கலான் தனக்கான ஒளியைப் பெறுவதாக முடிகிறது. அது உன் வேரினை அறிந்த பின், நீ யார் என்று நீ அறிந்த பின், உனக்கு நீயே ஒளி எனும் புத்தரின் தம்மத்தை நம்மிடம் விட்டுச்செல்கிறது.

Thangalaan
இப்படியாக தங்கலானிலிருக்கும் மாய எதார்த்த எழுத்து, அம்பேத்கரின் எதார்த்த எழுத்துக்கான நன்றி நவில்தல்! பா.இரஞ்சித் தன்னை எப்போதும் எல்லா இடங்களிலும் அம்பேத்கரின் மாணவன் என்பார். அப்படியான ஆசிரியருக்குரிய மரியாதையை இந்த படைப்பின் மூலம் செவ்வனே செய்திருக்கிறார் என்று நிச்சயம் சொல்லலாம்.


from விகடன்

Comments