Neeya Naana: ``அத்தனை வலியையும் ஒழிச்சுக்கிட்டு வேலைக்கு போயிருக்கான் புள்ள"- ரமேஷின் தாய் உருக்கம்!
படித்துக்கொண்டே வேலை பார்க்கும் சிறுவர்களைப் பற்றிய நீயா நானா நிகழ்ச்சியில் கோவில்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற பையனும் அவருடைய அம்மாவும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் அவர்கள் பகிர்ந்த வலிமிகு வார்த்தைகளை இப்போது பலரும் உருக்கமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நடிகர் மற்றும் த.வெ.க கட்சியின் தலைவரான விஜய்யும் அந்த சிறுவனின் குடும்பத்துக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். இதைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களிடமே பேசினோம்.
ரமேஷின் அம்மா மஞ்சுளாவிடம் பேசினோம், ``எனக்கு மூணு பசங்க சார். வீட்டுகாரரு 30 வருஷமா லாரில டிரைவராதான் ஓடிக்கிட்டு இருக்காரு. வீட்ல ரொம்ப கஷ்டம்தான். ரமேஷ்தான் பெரிய பையன். நல்லா படிக்கக்கூடிய பையன். ஆனாலும் வீட்டு கஷ்டத்தை உணர்ந்துக்கிட்டு வேலைக்கு போயிக்கிட்டே படிக்குறான். அவனுக்குப் பாடம் எடுக்குற சார்தான் அவன நீயா நானாவுக்கு போயிட்டு வான்னு சொல்லி வழிகாட்டியிருக்காரு. முதன் முதல்ல இப்போதான் மெட்ராஸூக்கே போயிட்டு வாரோம். கோபிநாத் சாருமே எங்கக்கிட்ட ரொம்ப நல்லா பேசுனாரு. எல்லாரும் நல்லா கவனிச்சுக்கிட்டாங்க.
எல்லாத்தையும் விட என் புள்ள இப்படி இவ்வளவு பேசுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. கழுத்து, தோள்ப்பட்டைலாம் வலிக்கும்னு அவன் எங்கிட்ட ஒரு நாளும் சொன்னதில்ல. அத்தனை வலியையும் ஒழிச்சுக்கிட்டு வேலைக்கு போயிருக்கான் புள்ள. டிவியில கொஞ்சம்தான் போட்டாங்க. நிகழ்ச்சியில இன்னும் ரொம்ப வேதனையோட பேசியிருந்தான். அதையெல்லாம் கேட்டதுக்கு பிறகுதான் என்னால தாங்கிக்கவே முடியல. அவன பத்தி என்னத்த சொல்ல அவன்தான் என் அம்மா..'
என்றவரிடம், த.வெ.க வினர் செய்த உதவிகளைப் பற்றி கேட்டோம், 'நிகழ்ச்சி ஒளிபரப்பான கொஞ்ச நேரத்துலயே விஜய் ஐயாவோட ஆளுங்க வீடு தேடி வந்துட்டாங்க. என்னெல்லாம் தேவையோ எல்லாத்தையும் பண்ணிக்கொடுத்தாங்க. இப்படி உடனே வந்து உதவி பண்ணுவாங்கனு எதிர்பார்க்கவே இல்ல..' என்றார்.
ரமேஷிடமும் பேசினோம், 'அம்மா சங்கடப்படுவாவோன்னுதான் வலி எடுக்குறத பத்தியெல்லாம் சொல்லிக்கமாட்டேன். அவுகளுக்கு கொஞ்சம் பாரம் குறையணும்னுதான் நான் வேலைக்கு போயிக்கிட்டே படிக்கேன்.
பக்கத்துல இருக்க கவர்மெண்ட் ஸ்கூல்லதான் படிக்கேன். அங்க வரலாறு பாடம் எடுக்குற ஸ்ரீதர் சார்தான், 'உன்ன மாதிரி கஷ்டப்பட்டு படிச்சுக்கிட்டே வேலைக்குப் போற பசங்களோட வலியெல்லாம் வெளிய தெரியணும்.' அப்டின்னு சொல்லி நீயா நானாவுக்கு அனுப்பி வச்சாரு. பத்தாவதுல 300 மார்க் எடுத்து இப்போ அக்கவுண்ட்ஸ் க்ரூப்ல படிச்சுக்கிட்டு இருக்கேன். டீச்சர் ஆகணும் எங்க குடும்பத்த நல்லா பார்த்துக்கணும் இதுதான் என்னோட ஆசை.
நான் பேசுனது செல்லுல எல்லா பக்கமும் ஓடிக்கிட்டு இருக்குன்னு சொல்றாங்க. எனக்கு ஒன்னும் தெரியல. ஏனா எங்கக்கிட்ட சின்ன பட்டன் ஃபோனுதான் இருக்கு. பெரிய ஃபோனு இல்ல. நிறைய பேரு படிக்கிறதுக்கு உதவி பண்றதா சொல்லிருக்காங்க. விஜய் அண்ணனோட ஆளுங்க நேர்லயே வந்து உதவி பண்ணாங்க. வேலைக்குப் போயிட்டு வர்ற வண்டி வாங்கி தர்றதாவும் சொன்னாங்க. ஆனா, 18 வயசு ஆகாததால இப்போதைக்கு வண்டி வேணாம்னு சொல்லிருக்காங்க. அம்மாவுக்குக் கடை வச்சுக் கொடுக்க 15,000 கேட்டேன். அவங்க 25,000 ரூபாய் அனுப்பி விட்ருக்காங்க.' என்றார்.
இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் சத்யாவிடமும் பேசினோம்,
'விஜய் அண்ணனுக்கு எப்பவுமே நீயா நானா பார்க்கிற பழக்கம் உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கோம். நேற்றைய எபிசோடையும் முழுசா பார்த்திருக்காரு. அதுல அந்த கோவில்பட்டி பையன் பேசுனது எல்லாரையும் மாதிரி அவரையும் உருக்கியிருக்கு. உடனே பொதுச்செயலாளர் ஆனந்த் அண்ணங்கிட்ட அந்த பையனை கண்டுபிடிச்சு தேவையான உதவிகளை செய்யுங்கன்னு சொல்லிருக்காரு. அவர் உடனே எங்களை அழைச்சுப் பேசுனாரு. பையன் கோவில்பட்டியைச் சேர்ந்தவன்னு மட்டும்தான் தெரியும். மற்ற விவரம் எதுவும் தெரியல. அப்போதான் அந்த வீடியோவ எங்களோட வாட்ஸ் அப் குழுக்கள்ல ஷேர் பண்ணி விசாரிச்சோம். எங்களுக்கு தகவல் கிடைச்ச 10 நிமிசத்துல பையன் வீடு முத்துநகர்னு கண்டுபிடிச்சிட்டோம். உடனே கொஞ்சம் பழங்கள் வாங்கிட்டு வீட்டுக்கே போயிட்டோம். ஆனந்த் அண்ணனுக்கு ஃபோன் போட்டு பையன்க்கிட்டயும் அவனோட அம்மாக்கிட்டயும் பேசக்கொடுத்தோம். பையன் தன்னோட தேவைகள் எல்லாத்தையும் அண்ணங்கிட்ட சொன்னான்.
நாளைக்குள் எல்லாவற்றையும் செய்து கொடுத்துவிடலாம் என நாங்கள் நினைத்தோம். ஆனால், விஜய் அண்ணன் எல்லா உதவியையும் உடனே அங்கேயே இருந்து பண்ணிக்கொடுக்க சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு.
அதனால உடனே ஒரு கடைய பிடிச்சு மாசமாசம் மளிகை ஜாமான் கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டோம். பையனோட ஆசைப்படி ஒரு பெட்டும் வாங்கிக் கொடுத்துட்டோம். பழக்கடை போடுறதுக்கு உதவி செஞ்சா நல்லா இருக்கும்னு பையன் சொல்லிருக்கான். எவ்வளவு தேவைப்படும்னு கேட்டதுக்கு 15,000 இருந்தால் நல்லாருக்கும்னு சொல்லிருக்கான். உடனே சென்னைல இருந்து அவங்க அக்கவுண்ட் நம்பர் வாங்கி 25,000 ரூபாய் போட்டுவிட்டாங்க. இரவு 7 மணிக்குள்ள எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டோம். இன்னைக்கு கோவில்பட்டியில எங்க கட்சிக்கொடியை ஏத்துறோம். அதுக்கும் அந்த பையனையும் அம்மாவையும்தான் சிறப்பு விருந்தினரா அழைச்சிருக்கோம். இதேமாதிரி வெளிச்சத்துக்கு வர்ற ஆளுங்க மட்டும் இல்ல. வெளியே தெரியாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்குற ஆளுங்களையும் நாமதான் கண்டுபிடிச்சு உதவணும்னு ஆனந்த் அண்ணன் மூலமா விஜய் அண்ணன் அறிவுரை சொல்லிருக்காங்க.' என்றார்.
from விகடன்
Comments