ரஜினியின் 'வேட்டையன்', சூர்யாவின் 'கங்குவா' என இரண்டு பிரமாண்ட படங்களும் வருகிற அக்டோபர் 10-ம் தேதி ஒரே நாளில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் 'கங்குவா'வின் வெளியீடு தள்ளிப் போகும் என்றும், தீபாவளிக்கு திரைக்கு வர வாய்ப்பிருக்கிறது என்றும் கோடம்பாக்கத்தில் தகவல் பரவி வருகிறது.
'ஜெய்பீம்' த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் 'வேட்டையன்'. மல்டி ஸ்டார் படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருமென அறிவித்துள்ளனர். அதே தினத்தில் சூர்யா, சிவாவின் கூட்டணியில் பிரமாண்டமாக உருவான 'கங்குவா' படமும் திரைக்கு வருகிறது என அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். சூர்யாவின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்றும், 20 மொழிகளில், 3டி தொழில்நுட்பத்திலும் வெளி வருகிறது.
''வேட்டையன்', 'கங்குவா என இரண்டுமே பெரிய படங்கள். ஆகவே இரண்டும் ஒரே நாளில் திரைக்கு வந்தால், குறைவான திரையரங்குகளிலேயே படத்தை வெளியிட முடியும். அதிலும் 'கங்குவா'வின் பட்ஜெட் மிகப்பெரியது. இரண்டு பாகங்களாக வரவிருக்கிறது. இரண்டுமே பெரிய வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் இரண்டு படங்களுமே வெவ்வேறு தினத்தில் வெளியானால், விநியோகஸ்தர்கள் உள்பட பலருக்கும் லாபகரமானாதாக இருக்கும். 'கங்குவா' ரிலீஸ் குறித்து அதன் தயாரிப்பாளர் பரிசீலிக்க வேண்டும்." என்று கோரிக்கைகள் விடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து `கங்குவா' தயாரிப்பு வட்டத்தினரிடம் பேசியதில் கிடைத்த தகவல்கள் இதோ...
''கடந்த சில நாட்களாக இப்படி ஒரு தகவல் இருக்கு. திட்டமிட்டபடி படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் என்ற இலக்கில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஓவர்சீஸ் பிசினஸ், தெலுங்கு படவுலகினர் எனப் பல தரப்பினரிடமும் 'அக்டோபர் 10' வெளி வருவது குறித்துத் தயாரிப்பாளர் கலந்துபேசி வருகின்றனர். எல்லாரிடமும் பேசிய பின்னர், இறுதியான முடிவு எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகே அதே தினத்தில் படம் திரைக்கு வருகிறதா? அல்லது வேறு தினத்தில் மாற்றம் வேண்டுமா என்பது குறித்துத் தெரியவரும். ஆக, தெளிவான முடிவு இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும். அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்" என்கின்றனர். அது வரை இப்போதுள்ள தேதியை நோக்கித்தான் ரிலீஸ் வேலைகள் நடந்து வருகிறது என்பதுதான் உண்மை.
from விகடன்
Comments