Hema Commitee: "பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மோகன் லால் இருக்கணும், ஆனால்.." - நடிகை சாந்தி பிரியா

மலையாளத் திரையுலகில் பெண்கள் மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து 233 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை நீதிபதி ஹேமா தலைமையிலான குழு வெளியிட்டிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக இருக்கிறது.

திரைப்பட வாய்ப்புகள் தொடர்பாகப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது, குடிபோதையில் சக நடிகைகளின் அறைகளுக்குள் நுழைந்து தொல்லை கொடுப்பது எனப் பல அதிர்ச்சியான தகவல்கள் இந்த அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. தொடர்ந்து பாலியல் ரீதியான புகார்கள் எழுந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை முன்னணி நடிகர் மோகன் லால் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து சங்கத்திலிருந்த 17 நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

Mohanlal

இந்த விவகாரம் தொடர்பாகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், 'எங்க ஊர் பாட்டுக்காரன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, 50 படங்களுக்கும் மேல் நடித்த நடிகை சாந்தி பிரியா, "நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை மோகன் லால் ராஜினாமா செய்திருக்கக்கூடாது" என்று கூறியிருக்கிறார். இதுதொடர்பாகp பேசிய அவர், " மோகன் லால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கக்கூடாது. அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததில் எந்த பயனும் இல்லை.

'உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம், எங்களை நம்புங்கள், தயவு செய்து உங்கள் குரலை உயர்த்தி எங்களிடம் பேச வாருங்கள்' என்று அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், வழிகாட்டியாகவும் இருந்திருக்க வேண்டும். இதுதான் சரியான அணுகுமுறை" என்று கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர், "சினிமா துறையைப் பொறுத்தவரை ஆண்கள் கூட துன்புறுத்தப்படுகிறார்கள்.

சாந்தி பிரியா

பாலியல் துன்புறுத்தல் மலையாள சினிமாவில் மட்டுமின்றி அனைத்து சினிமா துறைகளிலும் இருக்கின்றன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தெலுங்குத் துறையிலிருந்து கூட யாராவது முன்வந்து இதுபோன்ற பிரச்னைகளைச் சொல்லலாம்." என்று கூறியிருக்கிறார்.



from விகடன்

Comments