Thangalaan: ``விக்ரம் சாரின் உழைப்பு பிரமிக்க வைக்கும்" - ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம்

விக்ரமின் 'தங்கலான்' படத்தின் ட்ரைலர் மற்றும் 'மினிக்கி மினிக்கி' பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன், படத்தில் இடம்பெற்ற நடிகர்களின் தோற்றமும், காஸ்ட்யூமும் கவனம் ஈர்த்துள்ளன.

இந்தக் காஸ்ட்யூம்களை வடிவமைத்தவர் ஏகன் ஏகாம்பரம். 'சார்பட்டா பரம்பரை'யை அடுத்து மீண்டும் பா.ரஞ்சித்துடன் கைகோத்திருக்கிறார் அவர்.

'தங்கலான்'

''காஸ்ட்யூம்கள்ல நம் மண்சார்ந்து, இயற்கை சார்ந்த விஷயங்களை பயன்படுத்துவது, அதை சினிமாவிலும் சாத்தியப்படுத்த முடியுமா? இப்படியான விஷயங்களையே பல வருஷமா படிச்சிட்டு இருந்தேன். அதை இப்ப 'தங்கலான்' சாத்தியப்படுத்தியிருக்கு. இந்தப் படத்தின் கதை மூன்றாம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு, 18ம் நூற்றாண்டுனு பல்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்குது. இப்படி பீரியட் படங்கள்ல காஸ்ட்யூம்களைப் பொறுத்தவரை கெமிக்கல் சாயங்களோடு இருக்கற ஆடைகளை தான் பயன்படுத்துவாங்க.

ஏகன் ஏகாம்பரம்.

ஆனா, இந்தப் படத்தின் ஆரம்பத்துலேயே கெமிக்கல் டை, பிளாஸ்டிக், மெட்டல் இப்படி எதையும் பயன்படுத்தாமல் அத்தனை பேரின் காஸ்ட்யூம்களையும், நம்ம மண் சார்ந்து இயற்கை வளங்களைப் பயன்படுத்தி வடிவமைக்கணும்னு முடிவு செய்தோம். ஒவ்வொரு ஆடைகளின் சாயம் போடுவதற்கும் காவிரி ஆறு, கிருஷ்ணா நதினு ஒவ்வொரு ஆறுகளாக தேடிப் போய், துணிகளுக்கு வண்ணங்கள் சேர்த்து வந்தேன். 'தங்கலான்'ல பயன்படுத்தின ஆடைகள் எல்லாமே சுற்றுச்சூழலுக்கு உகந்ததது. எந்த தீங்கையும் ஏற்படுத்தாத சாயங்கள்.

படத்தில்..

இந்தக் கதை நிகழும் ஒவ்வொரு காலகட்டத்துக்குமே அந்தக் காலத்துல பிரிட்டிஷ்காரர்கள், நம்ம மக்கள் என அனைத்துத் தரப்பினரும் எப்படிப்பட்ட ஆடைகள், அணிகலன்கள், ஆபரணங்கள் அணிந்திருந்தாங்கன்னு நிறைய ஆராய்ச்சிகள் பண்ணின பிறகே, காஸ்ட்யூம்களை முடிவு செய்தோம். இயக்குநர் ரஞ்சித் சாரும் இதற்கென நிறைய ரெபரன்ஸ்களைக் கொடுத்திருந்தார்.

அதிலும் மூன்றாம் நூற்றாண்டு காலகட்டம் சவாலா இருந்தது. பழங்குடியினரின் ஆடைகளை விலங்குகள், பறவைகளின் உரோமங்கள், இறகுகள் எனப் பயன்படுத்த வேண்டியிருந்ததால், செயற்கையான முறையில் அதனை தயார் செய்ய வேண்டியிருந்தது. வசம்பு, பாக்கு ஆகியற்றைக் கொண்டு கம்மல், நகைகள்னு இயற்கையான முறையில் ஆபரணங்களை வடிவமைச்சிருக்கோம். மொகஞ்சதாரோ, ஹரப்பா காலகட்டத்துல பயன்படுத்தின ஆடை, அணிகலன்களை ரெபரன்ஸா வச்சு உருவாக்கினோம். அதே போல 18ம் நூற்றாண்டில் தான் செம்பு மாதிரி உலோகங்களைப் பயன்பத்தினோம். விக்ரம் சாரிலிருந்து படத்தில் நடித்த அத்தனை பேரின் பேப்ரிக்ஸும் இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட பருத்தி ஆடைகள். சாயங்களும் கெமிக்கல்களைப் பயன்படுத்தாமல் மூலிகைச் செடிகள், பழங்கள், கொட்டைகள் என இயற்கை சார்ந்த சாயங்களைக் கொண்டே உருவாக்கினோம். பிரிட்டிஷ்காரர்கள், ஜமீன்தார்கள், கணக்குப் பிள்ளைகள் என ஒவ்வொருத்தருக்குமான காஸ்ட்யூம்களையும் தனித்தனி கவனத்துடன் தயார் செய்தோம்.

காவிரி ஆற்றில்...

காஸ்ட்யூம்களை எல்லாம் விக்ரம் சார், வியந்து பார்த்தார். 'இதை எப்படி தயார் பண்ணுனீங்க.. இந்தத் தோடு எப்படி? இந்த மாலை எப்படி?'னு ஒவ்வொரு விஷயங்களை ஆர்வமாகக் கேட்பார். பிளாஸ்டிக்கோ, மெட்டல்களோ இல்லாமல் ஆபரணங்களை உருவாக்கினது அவருக்கு ஆச்சரியமா இருந்துச்சு. கூப்பிட்டு பாராட்டினார். இயற்கையான சாயத்திற்கும் கெமிக்கல் சாயத்துக்குமான வித்தியாசத்தை அவரும் உணர்ந்தார்.

ஆத்துல குளிக்கற சீன்ல அவர் அணிந்திருந்த ஆடையில் சாயமே போகல. ஆனா, பயணத்தின் போது அதே காஸ்ட்யூமோடு நீச்சல் குளத்து தண்ணீரில் குளிக்கும் போது, தண்ணீரில் உள்ள குளோரினால் காஸ்ட்யூமில் இருந்த இயற்கை சாயங்கள் மறைய ஆரம்பிச்சது. இதைக் அவர் குறிப்பிட்டுச் சொன்னார். விக்ரம் சாரோட உழைப்பு பிரமிக்க வைச்சது. கடுமையான வெயில், பனி எல்லாத்திலும் இந்த காஸ்ட்யூமோடு அவர் இருப்பார். அவரோட கடுமையான உழைப்பு, மேக்கிங் வீடியோக்களிலும் பார்த்திருப்பீங்க. ஷாட் நல்லா வரணும்னு அவர் அவ்ளோ மெனக்கெடுவார். 'இன்னொரு டேக் வேணும்னாலும் போயிடுவோம்'னு சொல்லி, நடித்தார். அவரோட உழைப்பு நிச்சயம் பேசப்படும்'' என்கிறார் ஏகன் ஏகாம்பரம்.



from விகடன்

Comments