Raayan: "ராயன் சம்பளத்துல என் மகள்களுக்கு கொடுத்த கிஃப்ட்..." - நெகிழும் 'கானா' காதர்

'ராயன்' படத்தின் 'வாட்டர் பாக்கெட்' பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து 'மஜா'வாய் இனிக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

இளைஞர்களை செம்ம வைப்பில் வைத்திருக்கும் இப்பாடலை எழுதிய பெயின்டர் 'கானா' காதரை பாடல் ப்ரோமோ வெளியீட்டின்போதே தனுஷும் ஏ.ஆர் ரஹ்மானும் நேரில் அழைத்து பாராட்டியிருந்த வீடியோ வைரலானது. இப்போது, அந்த பாடல் படம் வெளியான பின்பும் பார்வையாளர்களை குத்தாட்டம் போட வைத்துக்கொண்டிருக்கிறது. பாடல் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் காதரிடம் வாழ்த்துகளுடன் பேசினேன்.

சந்தீப் கிஷன்

"வாட்டர் பாக்கெட் பாட்டால என் வாழ்க்கையே மாறும்னு எதிர்பார்க்கல. எல்லோரும் பாராட்டுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வாழ்க்கைல நடந்த பெரிய நல்ல விஷயம்னா 'ராயன்' வாய்ப்புதான். இதுக்குமுன்னாடி, பாடல் வாய்ப்புக்காக நிறைய ஆடிஷனுக்கு போனேன். கெளதம் கார்த்திக் படத்துல வாய்ப்பும் கிடைச்சது. ஆனா, அந்தப் படத்தோட ஷூட்டிங் பாதியிலயே நின்னுடுச்சு. முதல் படமே ஏமாற்றம்தான்.

ஆனா, 'ராயன்' என்னைத் தேடிவந்த வாய்ப்பு. வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த சூழல்ல, தனுஷ் சாரோட உதவி இயக்குநர்கள் என்னைத் தேடி வண்ணாரப்பேட்டைக்கே வந்துட்டாங்க. தனுஷ் சார் படம்னு சொன்னதும் நான் நம்பவே இல்ல. பயத்தோடவே ஆடிஷனுக்குப் போனேன். ஆனா, இந்தமுறை பாட்டு செலெக்ட் ஆகிடுச்சு. என் சந்தோஷத்தை வார்த்தைகளால விவரிக்கவே முடியாது.

ஏன்னா, சின்ன வயசுலருந்தே வலி, வேதனை, நிராகரிப்பு, கஷ்டம் மட்டும்தான் எனக்கு கிடைச்சிருக்கு. என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. பாட்டியோட அன்பு, அரவணைப்புலதான் அண்ணன், தம்பிங்க மூணு பேரும் வளர்ந்தோம். சாப்பாடுக்குக்கூட கஷ்டப்பட்டிருக்கோம். அப்படியொரு வறுமை. அந்தப் பசி, வறுமை எல்லாத்தையும் போக்கினது எனக்குப் பிடிச்ச கானாதான். பசியை மறக்குற அளவுக்கு பாடிக்கிட்டிருப்பேன். அந்த ஆர்வம்தான், இவ்ளோ தூரம் கொண்டு வந்திருக்கு. நான் கானா எழுதின முதல் படம் கைவிடப்பட்டாலும் 'ராயன்' பெரிய ஹிட் அடிச்சு கவலைகளையெல்லாம் போக்கிடுச்சு. நான் குடியிருக்கும் வண்ணாரப்பேட்டை ஏரியாவாசிங்கல்லாம் பாராட்டுறது பெருமையா இருக்கு.

தனுஷுடன் 'கானா' காதர்

தனுஷ் சார், ரஹ்மான் சார் ரெண்டு பேருமே எனக்கு வாழ்க்கையைத்தான் கொடுத்திருக்காங்க. இந்த நேரத்துல அவங்களுக்கும் உதவி இயக்குநர் நிஷாந்த், என் பெஸ்ட் ஃப்ரண்ட் மணி, என் தம்பி ஜாபர் எல்லோருக்கும் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்; சந்தோஷத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்துக்கிறேன்" என்று உணர்வுப்பூர்வமாகப் பேசும் காதரிடம் "அடுத்தப் பட வாய்ப்புகள் குறித்தும் 'ராயன்' சம்பளத்தில் குடும்பத்திற்கு வாங்கிக்கொடுத்த கிஃப்ட் குறித்தும் கேட்டோம்.

"நான் சம்பளம்லாம் பெருசா எதிர்பார்க்கல. சினிமா வாய்ப்புதான் முக்கியம். நம்மோட திறமையும் பேரும்தான் என்னைக்கும் நிலைச்சிருக்கும். 'ராயன்' வாய்ப்பால, இப்போ மூணு பெரிய படங்களுக்கு பாட்டு எழுதற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதனாலதான், சொல்றேன்...'ராயன்' என் வாழ்க்கையையே மாத்திருச்சு! மத்தபடி, 'ராயன்' படத்துக்கு வாங்கின சம்பளத்துல என் மனைவிக்கு பர்தாவும் மகள்களுக்கு நல்ல ட்ரெஸும் வாங்கிக்கொடுத்தேன். நெளஷின், ஆல்யான்னு எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்தவ ரெண்டாவது படிக்கிறா. சின்னவளுக்கு முணு வயசாகுது.

மனைவியுடன் 'கானா' காதர்

பெயிட்ண்டிங் வேலைல ஒரு நாளைக்கு 700 ரூபாய் கிடைக்கும். அது, வீட்டு வாடகைக்கே போய்டும். பொண்ணுங்களுக்கு நல்ல ட்ரெஸ்கூட எடுத்துக் கொடுத்ததில்ல. 'ராயன்' படத்துக்குப்பிறகுதான் எல்லாம் வாங்கிக்கொடுக்க முடியுது. இப்போதான், ஒரு நல்ல அப்பாவாவும் உணர்றேன். ஒரு அப்பாவா மகள்களுக்கு கடமையை செய்யுறேன். ஆனா, ஒரு மகனா, பேரனா கடமையைச் செய்ய அம்மாவும் என்னை வளர்த்தெடுத்த பாட்டியும் இப்போ உயிரோட இல்ல. அவங்க இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க. அந்தமாதிரி கொடுப்பினையெல்லாம் எனக்கு கிடைக்கல. அதுமட்டும்தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு" என்கிறார் சோகமாக.



from விகடன்

Comments