16 ஆண்டுகள் ஒன்றாகத் திருமண வாழ்விலிருந்த ஆமிர் கான் - கிரண் ராவ் இருவரும் கடந்த 2021ம் ஆண்டு பரஸ்பர அன்புடன் விவாகரத்துப் பெற்றனர்.
இதையடுத்து கிரண் ராவ், மீண்டும் தனது கனவுகளை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முன்னதாக இவரது முதல் படமான 'தோபிகாட்' படம் சர்வதேச கவனத்தைக் குவித்தது. இரண்டாவது படமாகச் சமீபத்தில் இவர் இயக்கிய 'லாபத்தா லேடிஸ்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஓ.டி.டி-யில் பெரும் கவனம் குவித்தது. வடமாநிலங்களில் ஆணாதிக்கத்தால் தங்களின் சுய அடையாளம், விருப்புவெறுப்புகள் மறுக்கப்பட்டு இன்றும் ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழும் பெண்களின் துயரத்தின் சாட்சியாக வெளியான இத்திரைப்படம் பாராட்டுகளைக் குவித்தது.
இந்நிலையில் இதையொட்டி நேர்காணல்களில் பேசிவரும் கிரண் ராவ், விவாகரத்து பெற்ற பிறகும் தன்னை ஆமிர் கானின் முன்னாள் மனைவி என்று அடையாளப்படுத்துவது வருத்தமளிக்கிறது என்றும் தனக்கெனத் தனி அடையாளம் இருக்கிறது என்றும் பேசியிருந்தார்.
இதையடுத்து தற்போது ஆமிர் கானுடனான விவாகரத்து குறித்துப் பேசியிருக்கும் கிரண் ராவ், "ஆமிர் கானும், நானும் ஆழ்ந்த புரிதலுடனும், மகிழ்ச்சியுடனும் தான் விவாகரத்துப் பெற்றோம். இன்று இருவரும் அவரவர் கனவுகளை நோக்கிப் பயணிக்கிறோம். எங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் ஒன்றாகவே இருக்கிறோம். குழந்தைகள் விஷயத்தில் இருவரும் சேர்ந்தே முடிவுகள் எடுக்கிறோம்.
அதேபோல எனக்கு எப்போதும் துணையாக ஆமிர் கான் இருக்கிறார். நானும் அப்படித்தான். அதில் இருவருக்கும் எந்த குழப்பங்களும் இல்லை. எங்களது இரு குடும்பமும் எங்களின் இந்த முடிவைப் புரிந்து கொண்டு எங்களுக்குத் துணையாக நிற்கின்றன. அந்த வகையில் நான் பாக்கியசாலி. தனியாக இருப்பது ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நாளடைவில் அது பழகிவிட்டது. இப்போது நான் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இது மகிழ்ச்சியான விவாகரத்துதான்" என்று பேசியிருக்கிறார்.
from விகடன்
Comments