`பிரஸ்மீட்ல பேசினது கடவுளுக்கு கேட்ருச்சு; சேனலுக்கு கேட்ருச்சு; இப்ப சீரியலில் நடிக்கிறேன்!' சுஜாதா
``எந்த சேனலாக இருந்தாலும் எங்களுக்காக இந்த ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுங்க. `உங்களுக்கு ஆடிஷன் வச்சிருக்கோம் வந்து நடிச்சுக் காட்டுங்கன்னு' சொல்லுங்க. உங்க முன்னாடி இப்படிங்கிறதுக்குள்ள யார் நல்லா நடிக்கிறாங்களோ அவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க. நாங்க யாரும் எதுவும் கேட்கல. ஆனா, தமிழ் ஆர்ட்டிஸ்ட் சென்னை ஆர்ட்டிஸ்ட் பலருக்கு இங்க வேலை கிடையாதுங்க சார்.. அந்த லிஸ்ட்ல நான் முதல் ஆளா இருக்கேன்!" என உணர்ச்சி ததும்ப பிரஸ்மீட் ஒன்றில் பேசியிருந்தார் நடிகை `பொன்னேரி' சுஜாதா. அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
" நான் இந்த ஃபீல்டுக்கு வந்து கிட்டத்தட்ட 15 வருஷமாகிடுச்சு. `நாதஸ்வரம்' சீரியல் விளம்பரத்தைப் பார்த்துட்டு தான் ஆடிஷனுக்கு வந்தேன். அதுல இருந்து தான் என் கரியர் ஆரம்பமாச்சு. கொரோனாவுக்கு முன்னாடி வரைக்கும் சீரியல் பண்ணிட்டு இருந்தேன். அதுக்குப் பிறகு சீரியல் வாய்ப்பு எதுவுமே கிடைக்கல. ரொம்ப வருஷமா அதுக்காக ஏங்கிட்டு இருந்தேன்.
நம்மள ஏன் சின்னத்திரையில் அக்செப்ட் பண்ணிக்க மாட்டேன்றாங்க அப்படிங்கிற கேள்வி எனக்குள்ள இருந்தது. டைரக்டர், கோ டைரக்டர் எல்லாம் என் நடிப்பை பார்த்துட்டு ஓகே பண்ணிடுவாங்க.
ஆனா, சேனலில் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியல அங்க செலக்ஷனுக்காகப் போகிற என் ஃபோட்டோ சுவத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்பி வந்துடுது. 15 வருஷமா அடக்கி வச்சிருந்த ஆதங்கத்துல அன்னைக்கு பிரஸ்மீட்ல 50% தான் சொன்னேன். அதுக்கே சிலர் நீ இதெல்லாம் பேசியிருக்கக் கூடாதுன்னு சொன்னாங்க. அந்த நேரத்தில் நான் தப்பா, சரியான்னுலாம் யோசிக்கல
அந்த பிரஸ்மீட்ல முழுக்க முழுக்க எனக்காக மட்டும் பேசல. என்னை மாதிரி பல நடிகர்களுக்கும் சேர்த்துதான் பேசினேன். நான் சீரியலில் சின்ன, சின்ன கேரக்டர் தான் பண்றேன். தமிழா தெரியாம இங்க நடிக்க வர்றாங்க. வந்தாரை வாழ வைக்கும் சென்னை ஓகே தான். ஆனா, நாங்க எந்த ஊருக்குப் போனாலும் எங்களை மதிக்க மாட்டேன்றாங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம்னு சொல்லல. 4 பேருக்கு கொடுக்கிறதுல ஒண்ணு எங்களுக்கு கொடுங்கன்னு தான் கேட்குறேன்.
டெக்னிக்கலா ஒர்க் பண்ற எல்லாரும் கார்டு இருக்கிறவங்க மட்டும்தான் பண்றாங்க. ஆர்ட்டிஸ்ட் ஒருத்தங்க தான் இங்க கார்டு இல்லாம ஒர்க் பண்றாங்க. அதிலேயும் குறிப்பா மெயின் கேரக்டர் பண்ற பலர் கார்டு இல்லாம ஒர்க் பண்றவங்க தான். கார்டு வச்சிருக்கிறவங்க வீட்டுல வெத்தா அடுப்பங்கரையில தான் கிடக்குறோம்!' என படபடவென பேசியவரிடம் அவருடைய புராஜக்ட் குறித்துக் கேட்டோம்.
"சினிமாவில் என் நிறத்தினால் நிறைய வாய்ப்பு வருது. காவல்துறை உங்கள் நண்பன், விசித்திரன், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன், மகாராஜா போன்ற படங்களில் நடிச்சிருக்கேன். வாஸ்கோடகாமா படத்துல கே எஸ் ரவிக்குமார் சாருக்கு மனைவியா நடிச்சிருக்கேன். தவிர இன்னும் சில படங்களும் வெளி வர இருக்கு. படங்களில் நடிக்கிறப்ப சில நாட்கள் தான் ஷூட் இருக்கும். சீரியல்னா அப்படியில்ல. பப்ளிசிட்டி கிடைக்கும்... சம்பளமும் கிடைக்கும். அதனால சீரியல் பண்ணனுங்கிறது என் ஆசை!
கொரோனாவுக்கு முன்னாடி வரைக்கும் சீரியலில் நடிச்சேன். அடுத்து எந்த வாய்ப்பும் வரல. டைரக்டர் டேபிளில், கோ டைரக்டர் டேபிளில் எல்லாம் நான் பாஸ் ஆகிடுறேன். மேனேஜர் டேபிளில் மட்டும் தான் இப்ப வரைக்கும் நான் ஃபெயில் ஆகிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். நிறைய நிராகரிப்புகளை எதிர்கொண்டிருக்கேன். ஒரு சீரியலில் ஒரு சின்ன கேரக்டருக்காக பேசியிருந்தாங்க. ஒருநாள் தான் ஷூட். ஃபோட்டோவும் சேனலுக்குப் போய் ஓகே ஆகி வந்திடுச்சு.ஸ்பாட்டும் போயிட்டேன். கேமரா முன்னாடி நின்னு டேக் போகிற டைம் ஒருத்தர் வந்து டைரக்டர்கிட்ட பேசினார். டைரக்டர் என்கிட்ட வந்து, `தப்பா எடுத்துக்காதீங்க. சேனலில் உங்களை விட பெட்டரா பார்க்குறாங்க'னு சொன்னார். 2 நாளைக்கு முன்னாடியே என் ஃபோட்டோவை கொண்டு போனீங்க.. ஓகேன்னு சொல்லி நடிக்கவும் நின்னாச்சு அதுக்கப்புறம் ஏன் என்னை விட பெட்டரா ஒருத்தரை தேடுறீங்க? அப்படி இல்லைன்னா என் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு ஒரு டேக் எடுத்துட்டாச்சும் என்னை மரியாதையா அனுப்பி இருக்கலாமே? அன்னைக்கு ஒருநாள் முழுக்க அந்த பாதிப்பு இருந்துச்சு. பிறகு இதுவும் கடந்து போகும்னு என்னை நானே தேத்திக்கிட்டேன்!" என்றவர் சில நொடி மெளனமாக அவரிடம் புதியதாக நடிக்க இருக்கும் தொடர் குறித்துக் கேட்டோம்.
" அன்னைக்கு நான் பிரஸ்மீட்ல பேசினது யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ கடவுளுக்கு கேட்டுருச்சு.. சேனலுக்கு கேட்டுருச்சு... ஒரு நல்ல வாய்ப்பு நல்ல இடத்துல இருந்து வந்திருக்கு. பிரஸ்மீட்டிற்கு பிறகு தான் இந்த சீரியல் வாய்ப்பு எனக்கு கிடைச்சதுன்னு நான் உறுதியா நம்புறேன்!" என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து சுஜாதா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
from விகடன்
Comments