"ஜீ தமிழும் விஜய் டி.வி-யும் சேர்ந்து சன் டி.வி-க்கு விருது கொடுப்பதுபோல இருக்கிறது" - திருச்செல்வம்
தமிழ் சின்னத்திரை உலகின் முதல் முயற்சியாக அனைத்துத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சின்னத்திரைத் தொடர்கள், ரியாலிட்டி ஷோக்களில் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கலைஞர்களை கௌரவிக்கும் ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023 விழா பிரமாண்டமாக நடைபெற்றது. சின்னத்திரை, வெள்ளித்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்
இதில் சிறந்த தொலைகாட்சித் தொடருக்கான விருதை சன் டி.வி -யின் `எதிர்நீச்சல்' தொடர் வென்றது. விருதினைப் பெற்ற பிறகு பேசிய இயக்குநர் திருச்செல்வம், “எல்லா வாழ்க்கையும் சேர்த்து எல்லோரிடமிருந்தும் எடுக்கப்பட்ட கதைதான் எதிர்நீச்சல் தொடர். இந்த மிகப்பெரிய வெற்றியை எனக்குக் கொடுத்த சன் தொலைக்காட்சி, சன் குழும தலைவர் திருமிகு கலாநிதி மாறன் சார் அவர்களுக்கும் திருமிகு காவேரி மேம் அவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். கோலங்கள் தொடருக்குப் பிறகு, தேவையான வாய்ப்பையும் சுதந்திரத்தையும் அளித்துள்ளதால் இந்த விருதை நான் அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
இந்த விருது எனக்கு சிறந்த தயாரிப்பாளருக்காகக் கிடைத்த விருது. நான் ஒரு நல்ல தயாரிப்பாளரா என்று எனக்குத் தெரியாது. ஏன்னா, நான் ஒருபோதும் தயாரிப்பது பற்றி யோசித்ததே இல்லை. கதை கேட்பேன், படிப்பேன், யோசிப்பேன், இது மட்டுமே எனது நோக்கமாக இருந்தது. அதன் தொடர் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியிருக்கிறது என்றால் இதற்குக் காரணம் வசனம் எழுதிக் கொடுத்த ஸ்ரீவித்யா அவர்களும்தான். எல்லாவற்றிலும் பெரிய சப்போட்டா இருந்தது அவர்கள்தான்.
பெண்கள் சூழ்ந்த கதையைத் திருப்பதால் எல்லாப் பெண்களும் என்னைக் காப்பாற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன்.
சீரியல் ஏன் முடிந்தது எதற்கு முடிந்தது என்று கேட்ட மக்கள் ஏராளம். நைட் எல்லாம் போன் கால் பண்ணி சீரியல் ஏன் முடிந்தது என்று கேட்பது, பரபரப்பாகப் பேசுவது, இந்த மாதிரி உணர்வுகள் எல்லாம் இதற்கு முன்னாடி நான் எடுத்த தொடர்களில் எனக்கு வந்ததில்லை. ஏனென்றால், எதிர்நீச்சல் அதற்கான ஒரு வெற்றியைத் தேடியிருக்கிறது. மொத்தமாக 80 எபிசோடுகள்தான் எதிர்நீச்சல் தொடர் போயிருக்கிறது. ஒரு 1000 எபிசோடுகள் 2000 எபிசோடுகள் போயிருக்கலாமே என்று கேட்பார்கள்.
எண்ணிக்கை பெரிதல்ல! மக்கள் எண்ணங்களில் எவ்வளவு தூரம் இருக்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று எண்ணினேன். இன்னும்கூட அந்தத் தொடரின் கேரக்டர்களில் இருந்து நாங்கள் யாரும் மீளவே இல்லை. நான் விகடனால் இந்த விருதைப் பெறுகிறேன். ரொம்ப நல்லா இருக்குது, இந்த நிகழ்வில் , ஜீ தமிழும் விஜய் டி.வி-யும் சேர்ந்து சன் டி.வி-க்கு விருது கொடுப்பது போல இருக்கிறது.
இது விகடனால் மட்டுமே சாத்தியம். மிகவும் ஆரோக்கியமான போட்டியாகவும் இருக்கிறது , இது மேலும் தொடரும் என்று விரும்புகின்றேன்.”
“எல்லோரும் விரும்புகிற மாதிரி எதிர்நீச்சல் 2 வருமா?” என ஹோஸ்ட் அர்ச்சனா கேட்டதற்கு,
“எதிர்நீச்சல் எப்பொழுதும் வரும்; எப்பொழுதும் இருக்கும்” என்று அழகாகக் கூறினார் ’எதிர்நீச்சல்’ தயாரிப்பாளர்.
மேலும், “விகடன் குழுமத்திற்கும் திரு.பா.சீனிவாசன் சார் அவர்களுக்கும் எனது மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
- இனியா
from விகடன்
Comments