கேரள மாநிலத்தைச் சேர்ந்த சின்னத்திரை பிரபலம் அப்சரா, கலைத்துறையை விட்டு காக்கிச் சட்டை போட்டிருக்கிறார்.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மலையாள தொலைக்காட்சி தொடர் நடிகர் அப்சரா. இவர், மலையாள பிக்பாஸ் (Biggboss) சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவரின் தந்தை ரத்னாகரன் கேரள காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் பணியில் இருந்தபோது, 11 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக மரணம் அடைந்தார்.
காவல்துறையில் பணியில் இருக்கும்போது ஒருவர் மரணமடைந்ததால், அவரின் வாரிசு ஒருவருக்கு அதே துறையில் வேலை வழங்க சட்டத்தில் இடமுள்ளது. அவர் உயிரிழந்தபோது அப்சரா 8-ம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தார். எனவே, தற்போது 30 வயதான அப்சராவுக்கு காவல்துறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பேசிய அப்சரா, "நான் கலைத்துறையில் பயணிப்பதால் காவல் துறையில் சேர விருப்பம் இல்லாமல் இருந்தது.
அரசுப்பணி என்பது நிரந்தர வேலை என்பதால் என் கணவர் மற்றும் குடும்பத்தினர் இதில் சேர அறிவுறுத்தினார்கள். நான் பள்ளியில் படித்தபோது தேசிய மாணவப் படையில் ( NCC - National Cadet Corps) சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறேன். அப்போது ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். தொலைக்காட்சியில் கால் வைத்த பின்பு ராணுவத்தின் மேலிருந்த ஈடுபாடு குறைந்துவிட்டது.
தற்போது காவல்துறையில் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. முழு அர்ப்பணிப்புடன் அந்தத் துறையில் சாதிப்பேன். வேலையில் சேருவதற்கான அரசு ஆணையும் கிடைத்துவிட்டது. விரைவில் காவல்துறையில் பணியில் சேரவிருக்கிறேன். ஒரு பக்கம் காவல்துறையில் பணியாற்றினாலும், முடிந்தவரை கலைத்துறையிலும் தொடர்ந்து பயணிப்பேன்" என்று தெரிவித்திருக்கிறார். அப்சராவுக்கு சக நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
from விகடன்
Comments