Asif Ali: "வெறுப்பு பிரசாரம் வேண்டாம்" - விருது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ஆசிஃப் அலி!

மலையாள மொழியின் பிரபல எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயரின் 9 கதைகளை மையமாகக் கொண்டு ஆந்தாலஜி திரைப்படமாக 'மனோரதங்கள்' திரைப்படம் வெளியாகவுள்ளது. அண்மையில், அப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 9 படங்களில் ஒன்றான 'சொர்க்கம் திறக்கும் சமயம்' என்ற திரைப்படத்துக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணனுக்கு அந்த விழாவில் விருது வழங்கி கவுரவிக்க நடிகர் ஆசிஃப் அலி அழைக்கப்பட்டார்.

அப்போது இசை அமைப்பாளர் ரமேஷ் நாராயணன் ஆசிஃப் அலியிடம் இருந்து விருதை வாங்கி, அப்படத்தின் இயக்குநரான ஜெயராஜை அழைத்து அவரிடம் அந்த விருதைக் கொடுத்தார். பின்னர், இயக்குநர் ஜெயராஜிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டு அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் இசை அமைப்பாளர் ரமேஷ் நாராயணன்.

நிகழ்ச்சியில் நடிகர் ஆஷிப் அலி இசை அமைப்பாளர் ரமேஷ் நாராயணன்

இந்த நிகழ்வைப் பார்த்த நடிகர் ஆசிஃப் அலி புன்னகைத்தபடி அருகில் நின்றுகொண்டிருந்தார். ஆசிஃப் அலி விருது வழங்கியது பிடிக்காமல்தான் ரமேஷ் நாராயணன் மேடையிலேயே நாகரீகம் இல்லாமல் அப்படி நடந்துகொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அந்த நிகழ்வு குறித்த காணொளிகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

இதுகுறித்து ரமேஷ் நாராயணன் கூறுகையில், "நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கக்கூடிய நடிகர் ஆசிஃப் அலி. நான் அவரை அவமானப்படுத்தும்விதமாக அப்படி நடந்துகொள்ளவில்லை. இயக்குநர் ரஞ்சித்தை மேடைக்கு அழைத்தபோது அவருடன் பணிசெய்த இசையமைப்பாளர் உள்ளிட்டோரை மேடைக்கு அழைத்தனர். அதே சமயம் இயக்குநர் ஜெயராஜை மேடைக்கு அழைத்த சமயத்தில் அவரது படத்துக்கு இசையமைத்த என்னை அவர்கள் அழைக்கவில்லை. அதனால் நான் வருத்தம் ஆனேன். அதன் பிறகு எம்.டி.வாசுதேவன் நாயரிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்படத் தயாரானபோது 'உங்களுக்கு நினைவுப் பரிசு தரவில்லையா' எனக் கேட்டார். நான் இல்லை என்றதும், அங்கிருந்தவர்கள் கூறிய பிறகு நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் என்னை அழைத்தார்.

அப்போது, ஆசிஃப் அலியிடம் இருந்து விருதைப் பெற்றுக்கொண்டேன். ஆசிஃப் அலியைப் பாராட்டும் விதமாக அவரது முதுகில் தட்டிக்கொடுத்தேன். அப்போது இயக்குநரும் அந்த நிகழ்வில் என்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஜெயராஜையும் நான் கைகாட்டி அழைத்தேன். அவர் வந்த சமயத்தில் ஆசிஃப் அலி அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார். அதன் பிறகு அடுத்த நிகழ்ச்சி நடக்க இருந்ததால் இயக்குநர் ஜெயராஜிடம் இருந்து பாராட்டு பெற்றுவிட்டு நான் சென்றுவிட்டேன்." என்றார்.

இயக்குநர் ஜெயராஜை அழைத்து விருதை பெற்றுக்கொண்ட ரமேஷ்நாராயணன்

இதுபற்றி இயக்குநர் ஜெயராஜ் கூறுகையில், "படப்பிடிப்பு குழுவினர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்திருந்தார்கள். ஆனால், ரமேஷ் நாராயணனை அழைக்கவில்லை. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறிய பிறகுதான் ரமேஷ் நாராயணனை மேடைக்கு அழைத்து, விருது வழங்க ஆஸிஃப் அலியையும் அழைத்திருந்தனர். ஆசிஃப் அலியிடம் இருந்து விருதைப் பெற்றபிறகுதான் என்னிடம் அந்த விருதைத் தந்தார் ரமேஷ் நாராயணன். இதில் ஆசிஃப் அலி அவமானப்படுத்தப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை" என்றார்.

இந்த விவகாரத்தில் நடிகர் ஆசிஃப் அலிக்கு முழு ஆதரவை அளித்துள்ளது மலையாள திரைத்துறை நடிகர் சங்கமான அம்மா. அம்மா அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், "கர்வத்துக்கு உனது சிரிப்புதான் உண்மையான சங்கீதம். அம்மா அமைப்பு ஆசிஃப் அலிக்கு ஆதரவளிக்கிறது" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்த சர்ச்சை வளர்ந்துகொண்டே செல்வதைத் தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ஆசிஃப் அலி கூறுகையில், "எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. அந்த ஆதரவு மற்றவர்களுக்கு எதிரான பிரசாரமாக மாறிவிடக்கூடாது. நானும் கோபப்படவும், வருத்தப்படவும் செய்யும் நபர்தான். அதை என்னோடு நிறுத்திக்கொள்வேன். நான் எப்போதும் அதை வெளிப்படையாகக் காட்ட மாட்டேன். அவருக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் நடப்பதைப் பார்த்தேன்.

நடிகர் ஆஷிப் அலி

ரமேஷ் நாராயணன் இப்போது அனுபவிக்கும் வேதனை எனக்குப் புரிகிறது. எனக்கு இந்த விஷயத்தில் வருத்தமோ, குழப்பமோ இல்லை. இதைச் சர்ச்சைக்குரிய விஷயமாக நான் பார்க்கவில்லை. கேமராவில் சற்று பெரிதாகக் காட்டிவிட்டார்கள். நான் ரமேஷ் நாராயணனை தொலைப்பேசியில் அழைத்துப் பேசினேன். அவரது வார்த்தை மன்னிப்பு கேட்கும் தொனியில் இடறியது. அது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. உலகெங்கிலும் வசிக்கும் கேரள மக்கள் எனக்கு ஆதரவளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் அவருக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் நடைபெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை" என்றார்.



from விகடன்

Comments