Agaram: "நான்தான் அகரம்; அகரம்தான் நான்" - மாணவியின் பதிலைக் கேட்டு நெகிழ்ந்த நடிகர் சூர்யா!

நடிகர் சிவக்குமாருடைய கல்வி அறக்கட்டளையின் 45வது ஆண்டு விழா சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது.

வருடந்தோறும் 12-ம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பில் பரிசுகள் வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டும் பல மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வில் நடிகர்களும் சிவக்குமாரின் மகன்களுமான சூர்யாவும் கார்த்தியும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, "1980-ல இருந்து இது மாதிரியான விருதுகளை மாணவர்களுக்கு அப்பா கொடுத்துட்டு இருக்கார். அகரம் அறக்கட்டளையும் தொடங்கி 25 வருடம் ஆகப் போகிறது. இதில் ரொம்பவே முக்கியமானது 'விதை' நிகழ்வுதான். 2006-ல நானும் திரைப்பட இயக்குநர் த.செ. ஞானவேலும் பேசிட்டு இருந்தோம். அப்ப அவர் கேட்ட கேள்விகள்தான் அகரம் அறக்கட்டளை பிறப்பதற்குக் காரணமாக இருந்துச்சு. 2006-ல முதல் தலைமுறை பட்டதாரி இருந்தார்கள்.

நடிகர் சூர்யா

இப்போதும் மாதம் 3000 ரூபாய் மட்டுமே வருமாம் கிடைக்கிற குடுபத்தை நான் பார்க்கிறேன். தினமும் 100 ரூபாயயைகூட வீட்டிற்குக் கொண்டுச் செல்ல முடியாமல் இருக்கும் பெற்றோர்களுடைய போர் குணத்தைப் பார்த்து நான் தலை வணங்குறேன். 18 வயசுல மாணவர்களெல்லாம் எதிர்நீச்சல் போட்டு வந்திருக்காங்க. இந்தச் சாதனையெல்லாம் நாங்க இருக்கிறதைவிட ரொம்ப உயர்வானது. 6,000 மாணவர்களுடைய வாழ்க்கையை அகரம் மூலமாக மாற்ற முடிஞ்சிருக்கு.

கிட்டதட்ட 350 கல்லூரிகள் எங்களுக்கு உதவி பண்ணியிருக்காங்க. அகரம் அறக்கட்டளையின் முன்னாள் மாணவர்கள்தான் இப்போ அறக்கட்டளையை வழிநடத்தி கொண்டு போறாங்க. அதுமட்டுமில்லாமல், அவங்க புதுப்பிக்கவும் செய்யுறாங்க. பள்ளிக்குச் செல்லாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைச்சு வர்றது சுலபம் இல்ல. இப்படி வந்த ஒரு மாணவி கிட்ட அகரம் பத்தி கேட்டேன். அதுக்கு அந்த தங்கை, "அகரம்தான் நான் . நான்தான் அகரம். அகரம் எனக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கு.

நடிகர் சூர்யா

வாழ்க்கைல எது முக்கியம்னு தெரிஞ்சுகிட்டு எந்தவொரு சமரசமும் இல்லாம நாம நினைச்சதை அடையுறது எப்படினு அகரம் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கு"னு சொன்னாங்க. ரொம்பவே சந்தோஷமாக இருந்துச்சு. வாழ்க்கைல நிறைய எதிர்மறையான விஷயங்கள் நடக்கும். அந்த நேரத்துல நேர்மறையான விஷயங்களை எடுத்துட்டு ஆக்கப்பூர்வமான எண்ணங்களோட இருக்காங்கனா அவங்க அழகான சூழல்ல வளர்றாங்கனு நான் நினைக்கிறேன்." என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில், "நான் ரெண்டு வயசுல இருக்கும்போது அப்பா இந்த அறக்கட்டளையைத் தொடங்கினார். நான் வெளியூர்ல படத்தோட ஷூட்டிங்ல இருக்கும்போது படங்களைத் தாண்டி 'உங்க அப்பா கல்விக்காக இந்த விஷயமெல்லாம் பண்றாரு'னு சொல்வாங்க. 'நான் வாழ்க்கை முழுவதும் உழைக்கிறேன். எனக்கு பெருசா எந்த விஷயமும் கிடைக்கலை'னு நினைக்காதீங்க. கண்டிப்பா ஒரு நாள் பெருசா கிடைக்கும். கிராமத்துல இருந்து இங்க நகரத்துக்கு வந்து படிக்கிற மாணவர்களுக்கு சில எண்ணங்கள் இருக்கும். 'நம்மைவிட மற்றவங்க நல்ல உடை அணிஞ்சிருக்காங்க'னு நினைச்சு கஷ்டப்படுவாங்க. அவங்க பேசுற இங்கீலிஷை சரியானுகூட தெரிஞ்சுக்காம சிலர் 'அந்த மாதிரி நமக்கு இங்கீலிஷ் வரலையே'னு நினைச்சு கஷ்டப்படுவாங்க.

நடிகர் கார்த்தி

இப்படியான விஷயத்தை நினைக்காதீங்க. ரெண்டு வருஷம் கழிச்சு உங்களுக்கும் அந்த விஷயமெல்லாம் கிடைக்கும். நான் என் வாழ்க்கைல ஒரு சமயத்துல கல்விதான் முக்கியம்னு புரிஞ்சுகிட்டு முக்கியத்துவம் கொடுத்தேன். அதுக்குப் பிறகு சினிமானு முடிவு பண்ணி அப்பாகிட்ட சொன்னேன். வாழ்க்கைல என்ன விஷயம் வேணும்ங்கிறதை சீக்கிரமாக முடிவு பண்ணுங்க. இந்த நிகழ்வுல மணிப்பூர் மாணவி பேசுனாங்க. அவங்க, ' எங்க ஊர்ல இப்போ பிரச்னை. எங்களுகாக பிரார்த்தனை பண்ணுங்கனு சொன்னாங்க. எங்களுக்கு பழைய மாதிரி கல்வி கிடைக்கணும்'னு அவங்க ஆங்கிலத்துல பேசுனாங்க." எனக் கூறிய அவர் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லி விடைபெற்றார்.   



from விகடன்

Comments