Sarfira: "இத்தனை வருஷத்துல இதுதான் என் முதல் இந்திப் படம்!"- இந்தி `சூரரைப் போற்று'வில் சரத்குமார்

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் நடித்த 'சூரரைப் போற்று' படத்திற்குப் பாராட்டுகள் குவிந்தன. இந்தப் படத்திற்காக சுதா கொங்கரா, சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை இந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்வதாக அறிவிப்பு வந்தது. தற்போது அந்தப் படம் ரிலீஸுக்கு ரெடி!

'சர்ஃபிரா' என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் சூர்யா ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது, அதில் சர்ப்ரைஸாக இருந்தவர் சரத்குமார். தமிழில் மோகன் பாபு நடித்த கேரக்டரில் இந்தியில் சரத்குமார் நடித்திருக்கிறார் எனத் தெரிந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழியில் நடித்துள்ள சரத்குமாருக்கு இதுதான் முதல் பாலிவுட் படம். அந்த அனுபவம் குறித்துத் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டு பேசினேன். 

'சர்ஃபிரா'வில் சரத்குமார்

"விமானப் பயணம் அப்படிங்கிறது எல்லோருக்குமானதா மாத்த கேப்டன் கோபிநாத் அவர்கள் எடுத்த முடிவு அபாரமானது. அவர் வாழ்க்கையைத் தழுவி எடுத்த படம் 'சூரரைப் போற்று'. ரொம்ப பிரமாதமான படம். சூர்யா, அபர்ணா ரெண்டு பேரும் அவ்வளவு நேர்த்தியா நடிச்சிருந்தாங்க. அதற்கான அங்கீகாரமும் அவங்களுக்குக் கிடைச்சது. இதை சுதாவே இந்தியில் ரீமேக் பண்ணியிருக்காங்க. அக்‌ஷய் குமார் நடிச்சிருக்கிறார். இதில் என்னுடைய கேரக்டர் கேமியோ மாதிரிதான். இத்தனை வருஷத்துல இதுதான் எனக்கு முதல் இந்திப் படம். நல்ல எக்ஸ்போஷர் எனக்கு. சுதாவுடன் வொர்க் பண்ணது ரொம்ப நல்லாயிருந்தது... ரொம்ப சந்தோஷம். ஒரு மொழியில முதன்முதல்ல நடிக்கிறோம்னா அது எப்படி வரும், சரியா இருக்குமான்னு சின்ன பயம் இருக்கும். ஆனா, 'சூரரைப் போற்று' மாதிரி ஏற்கெனவே சூப்பர்ஹிட்டான படத்தின் மூலமா அங்க அறிமுகமாகும்போது அந்த விஷயங்கள் எல்லாம் இல்லை.

என் கதாபாத்திரமும் ரொம்ப நல்லா எழுதியிருந்தாங்க. இந்தி ஆடியன்ஸுக்கு நிச்சயம் பிடிக்கும். ஏற்கெனவே நம்ம படங்கள் அங்க டப்பாகி ரிலீஸாகியிருக்கு. முதல்முறையா இந்தியில பேசி நடிக்கும்போது அந்த ஊர் மக்களுக்கு நம்மளை பத்தி தெரிய வரும். இப்போதான் பேன் இந்தியா படங்கள்னு சொல்றோம். நான் நடிச்ச 'சூர்யவம்சம்', 'நாட்டாமை' மாதிரி நிறைய படங்கள் தமிழ்ல சூப்பர் ஹிட்டானவுடன், இந்தியில ரீமேக் பண்ணியிருக்காங்க. அப்போ இந்தளவு புரொமோஷனெல்லாம் இல்லை. அப்போவே அதெல்லாம் பண்ணியிருந்தால் நான் அப்பவே இந்தியில பாப்புலரான நடிகனா இருந்திருப்பேன். இப்போ மார்க்கெட்டிங் யுக்திகள் எல்லாம் மாறிடுச்சு.

நல்ல படத்தின் மூலமா அந்த ஊர் மக்களுக்கு பரிச்சயமாகுறோம்னு சந்தோஷமா இருக்கு. இயக்குநர் ஷங்கருடைய பார்ட்டியில ஒருமுறை அக்‌ஷய் குமாரைச் சந்திச்சிருக்கேன். இப்போ அவரும் நானும் சேர்ந்து நடிச்சிருக்கோம். ரொம்ப திறமையான நடிகர்! என்னைப் போலவே ஃபிட்னஸ் ஃப்ரீக். அவர் கூட நடிச்சது ரொம்ப சந்தோஷம். 'வீர் மாத்ரே'ங்கிற கேரக்டரை அவ்வளவு பிரமாதமா வெளிப்படுத்தி இருக்கார். நான் நடிச்ச கேரக்டருக்கு வேற யாரை வேணாலும் நடிக்க வெச்சிருக்கலாம். ஆனா, நான் பண்ணா நல்லாயிருக்கும்னு இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகானு எல்லோரும் நினைச்சு என்னை அழைச்சதுக்கு ரொம்ப நன்றி!" என்றார் நெகிழ்ச்சியாக.



from விகடன்

Comments