ஆஸ்கர் விருதுக் குழுவில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைத்துறை கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள்.
அவ்வகையில் ஏற்கனவே நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் 2024க்கான ஆஸ்கர் உறுப்பினர் குழுவின் புதிய உறுப்பினர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது ஆஸ்கர் குழு. தொழில் ரீதியான தகுதி, அர்ப்பணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளைக் கொண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 487 பேருக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய திரை பிரபலங்களான இயக்குநர் ராஜமௌலி, நடிகை ஷபானா ஆஸ்மி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், இயக்குநர் ரீமா தாஸ் மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் உள்ளிட்டோருக்கு உறுப்பினராக இணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அழைப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 10,910 ஆக உயரும் என்றும் அங்கு 9,000க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆஸ்கர் விருதை நடத்தி வரும் அகாடமி நிறுவனத்தின் சி.இ.ஓ-வான பில் கிராமர் இதுதொடர்பாக பேசியபோது, "இந்த ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
உலகெங்கிலும் உள்ள இந்த திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் எங்கள் திரைப்படத் தயாரிப்பு சமூகத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர்" என்று கூறியிருக்கிறார். 2024 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்ற இந்திய திரை பிரபலங்களுக்குப் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
from விகடன்
Comments