Nana Patekar: "நானா படேகர் ஒரு பொய்யர், அவர் பயந்துவிட்டார்!" - #MeToo புகார் குறித்து தனுஸ்ரீ தத்தா
பாலிவுட் பிரபல நடிகர் நானா படேகர் மீதான பாலியல் குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே பாலிட்டில் சலசலப்பை ஏற்படுத்திய வண்ணமிருந்து வருகிறது.
தமிழில் விஷால் நடித்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா படேகருடன் 'Horn Ok Please (2008)' என்ற படத்தில் சேர்ந்து நடித்திருந்தார். அப்போது படப்பிடிப்பின்போது நானா படேகர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டி இருந்தார். குறிப்பாக 2018ம் ஆண்டு '#MeToo' மூலம் பாலியல் குற்றச்சாட்டுகளைப் பலரும் முன் வைத்தபோது, தனுஸ்ரீ தத்தாவும் நடிகர் நானா படேகர் பாலியல் ரீதியாகத் தன்னைத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
நானா படேகர் மீதான இந்தப் பாலியல் குற்றச் சாட்டு 2018 முதல் தற்போது வரை புகைந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நானா படேகர், "ஆரம்பத்திலிருந்தே அது பொய்யான குற்றச்சாட்டு என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் கோபப்படவில்லை. படப்பிடிப்பில் என்ன நடந்தது என்று அங்கிருந்த அனைவருக்குமே தெரியும்.
திடீரென்று, ‘நீங்கள் அதைச் செய்தீர்கள், இதைச் செய்தீர்கள்’ என்று யாரோ ஒருவர் சொன்னால், நான் என்ன சொல்லமுடியும்? அதற்கு எல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது" என்று காட்டமாகப் பேசியிருந்தார். இது பாலிவுட் திரை வட்டாரத்தில் பேசுபொருளாகி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருக்கும் நடிகை தனுஸ்ரீ தத்தா, "நானா படேகர் பொய் சொல்லும் நோயுள்ளவர். பொய் சொல்வதையே தனது இயல்பாகக் கொண்டவர். ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் மீது வைத்த குற்றச்சாட்டிற்கு இப்போது பதிலளித்துள்ளார். அதுவும் முழுக்கப் பொய்யாகத்தான் பேசியிருக்கிறார். அவருக்கு இப்போது பயம் வந்துவிட்டது. அவருக்கு முன்பிருந்த ஆதரவு இப்போது இல்லை. அவரை ஆதரிக்கும் அவரது நண்பர்கள் கூட்டமே அவரது குணம் தெரிந்து அவரை கைவிட்டு ஓரங்கட்டிவிட்டனர். பேட்டியில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக என் மீது கோபமே கொள்ளவில்லை என்று கூசாமல் பொய் சொல்கிறார். அவரைப் பற்றி எல்லோருக்கும் நன்கு தெரிந்துவிட்டது. அவரது பொய்கள் இனி அவருக்குப் பலனளிக்கப் போவதில்லை" என்று கூறியிருக்கிறார்.
from விகடன்
Comments