தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நாகர்ஜூனா.
இவர் சமீபத்தில் விமான நிலையத்தில் நடந்து வந்தார். அப்பொழுது அங்கிருக்கும் கடையில் வேலை செய்து வரும் வயதான மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் நாகர்ஜுனாவுடன், பேசுவதற்காக ஆசையுடன் வந்தார். ஆனால், அருகில் இருந்த நாகர்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை இழுத்து தள்ளிவிட்டார். இதனால் தடுமாறிய அந்த முதியவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
பரபரப்புடன் வேகமாக நடந்த நாகர்ஜுனா இதை எதுவுமே கவனிக்காமல் செல்கிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பானக் காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. நெட்டிசன்கள் பலரும் இந்தக் காணொலியைப் பகிர்ந்து முதியவரை இப்படி நடத்தியிருக்கக் கூடாது, நாகர்ஜுனா இதுபோன்ற விஷயங்களைக் கவனித்திருக்க வேண்டும் என்றும் பாதுகாவலர்கள் நடந்துகொண்டது விதம் மிகத் தவறானது என்றும் பதிவிட்டு வைரலாக்கினர். சிலர், நகார்ஜுனா இதற்கு மன்னிப்புக் கேட்டாக வேண்டும் என்று கூறினர்.
இந்நிலையில் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாகர்ஜுனா, "இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பதை இப்போதுதான் கவனிக்கிறேன். இந்தத் தவறு நடந்திருக்கக்கூடாது. இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் கவனமாகப் பார்த்துக் கொள்வேன். பாதிகப்பட்ட அந்த நபரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
from விகடன்
Comments