1970களில் இந்தி, பெங்காலி ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி (74). 2014 -2016 வரை ராஜ்ய சபா உறுப்பினராகவும் அரசியலில் வலம் வந்தவர்.
திரைத்துறையிலும், அரசியலிலும் மிதுன் சக்கரவர்த்தி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு 'பத்ம பூஷன்' விருது வழங்கியது. நடிகர், தயாரிப்பாளர், அரசியல் என்பதையெல்லாம் தாண்டி மிதுன் ஒரு தீவிரமான செல்லப்பிராணி காதலர். குறிப்பாக நாய்கள் மீது அதீத அன்பு கொண்டவர்.
தனது விட்டில் மட்டும் கிட்டத்தட்ட 65 நாய்கள் வரை வைத்து வளர்த்திருக்கிறார். உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் அங்கிருக்கும் நாய் வகைகளை வாங்கி வந்துவிடுவாராம். அதேபோல சுற்றுலா செல்லும்போது தனது நாய்களைக் கையோடு குழந்தைகளைப் போல அழைத்துச் சென்றுவிடுபவர்.
சுமார் 119 நாய்கள் வரை வைத்துள்ள மிதுன், இந்த நாய்களுக்கெனப் பிரத்தியேகமாக மும்பை அருகில் இருக்கும் மட் தீவில் 1.5 ஏக்கரில் பெரிய பண்ணை ஒன்றை வைத்துப் பராமரித்து வருகிறார். பல பணியாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர். ஏராளமான தெரு நாய்களையும் தத்தெடுத்து இங்குப் பராமரித்து வருகிறார்.
ஒவ்வொரு நாய்களுக்கும் தனித்தனியே அறைகள் இருக்கின்றன. விளையாட்டு மைதானம், உணவு சாப்பிடும் இடம், மருத்துவ வசதி எனப் பல வசதிகள் அங்கு இருக்கின்றன. நாய்களைப் பராமரிப்பதற்காகவே ரூ. 45 கோடி சொத்தை எழுதி வைத்துள்ளார். இதை மிதுன் சக்கரவர்த்தியின் மருமகள் மதால்சா ஷர்மா நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். இதைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் நாய்களுக்கு ரூ.45 கோடி சொத்தை ஒதுக்கிய மிதுன் சக்கரவர்த்தியின் நாய்கள் மீதான அளவற்றக் காதலை வியந்து பாராட்டி வருகின்றனர்.
from விகடன்
Comments