M. M. Keeravani: "ஆஸ்கர் என் வாழ்வில் பெரிதாக எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை" -கீரவாணி

'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' திரைப்படங்களை இயக்கிய ராஜமெளலி, தனது அடுத்த படத்தை மகேஷ் பாபுவை வைத்து இயக்கவிருக்கிறார்.

'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரத்யேகமாகத் திரையிடப்பட்டு, பல விருது விழாக்களில் பங்கேற்றது. அதில் கீரவாணி இசையமைத்த 'நாட்டு நாட்டு' பாடல் 'கோல்டன் குளோப்' விருதினையும், 'ஆஸ்கர்' விருதினையும் வென்றது. இப்படி உலகம் முழுவதும் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் பிரபலமாக, இயக்குநர் ராஜமெளலியும் மிகப்பிரபலமானார். இதனால், மகேஷ் பாபுவை வைத்து எடுக்கப்போகும் ராஜமெளலியின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

ராஜமெளலி,, மகேஷ் பாபு

அதற்கான ப்ரீ புரொடெக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ராஜமெளலியின் படத்திற்கு தொடர்ந்து இசையமைத்து வரும் எம்.எம். கீரவாணிதான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். ஆஸ்கர் வென்ற பிறகு கீரவாணி இசையில் ராஜமெளலியுடன் இணைந்து உருவாகும் திரைப்படம் இது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் கீரவாணி, "ராஜமெளலி, மகேஷ் பாபுவை வைத்து இயக்கும் திரைப்படத்திற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கதை இன்னும் நிறைவு செய்யப்படாததால் நான் அப்படத்திற்கான பணியை இன்னும் தொடங்கவில்லை. ஒரு சில வாரங்களில் கதை முழுமையாக நிறைவு செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது." என்று பேசியிருக்கிறார்.

ராஜமெளலி, கீரவாணி

'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது வென்றது குறித்துப் பேசியிருக்கும் அவர், " 'நாட்டு நாட்டு' படல் மாதிரியான ஒரு பாடல் மீண்டும் அமைவது மிகவும் கடினம்தான். ராஜமெளலி அந்த இடத்தில் வேறு ஒரு ஸ்பெஷல் நம்பர் பாடலைப் போடச் சொல்லியிருக்கலாம். ஆனால், கதையோடு கலந்து வரும் 'நாட்டு நாட்டு' மாதிரியான பாடலைச் சரியாகக் கேட்டு வாங்கினார். அதுதான் அவரது சாமர்த்தியம். அப்பாடலுக்காக ஆஸ்கர் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால், ஆஸ்கர் என் வாழ்வில் பெரிதாக எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை" என்று பேசியிருக்கிறார்.



from விகடன்

Comments