Kalki, புஷ்பா 2, லக்கி பாஸ்கர், OG - ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய படம் - இது டோலிவுட்டின் பக்கா பிளான்!
இந்திய சினிமாவில் பக்கா பிளானோடு எல்லா வேலைகளையும் முடித்து, மற்ற படங்களோடு க்ளாஷ் இல்லாமல் தெளிவாக படங்களை வெளியிடுவதில் டோலிவுட் கில்லி. விடுமுறை தினங்களை முன்னிட்டு, இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் சூழல் இருந்தால், அவர்களுக்குள் பேசி முடிவெடுத்து ஒரு படத்தை முதல் நாளும் இன்னொரு படத்தை மறுநாளும் வெளியிடுவது வழக்கம். ஒரே தயாரிப்பு நிறுவனத்தில் உருவான இரண்டு பெரிய படங்கள் அடுத்தடுத்த நாள்கள் வெளியான சம்பவங்களும் அங்கே உண்டு. அந்த வகையில், 2024ன் பிற்பகுதியை மிக தெளிவாக பிளான் செய்திருக்கிறது தெலுங்கு சினிமா.
2024ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் பெரிய அளவில் அவர்களுக்கு வொர்க் அவுட்டாகவில்லை. மகேஷ்பாபுவின் 'குண்டூர் காரம்', வெங்கடேஷின் 'சைந்தவ்' வெளியாகியிருந்தாலும் அந்தப் படங்களோடு வெளியான 'ஹனுமன்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அடுத்த இடத்தில் இருப்பது மகேஷ் பாபுவின் 'குண்டூர் காரம்' 170 கோடி. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பெரிய படம் என்பதாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறது டோலிவுட்.
ஜூன் 27ம் தேதி பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கல்கி' படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கியிருக்கிறார். கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது இதன் கூடுதல் ஸ்பெஷல்! மிகப் பிரமாண்ட பொருள் செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன.
ஜூலை பெரிய படங்கள் இல்லை. சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாக இருக்கின்றன. ஆகஸ்ட் 15ம் தேதி 'புஷ்பா 2' வெளியாகிறது என்ற அறிவிப்பு தெலுங்குப் படங்கள் தாண்டி மற்ற மொழி படங்களாக இருந்தாலும் அந்தத் தேதியில் யாரும் வர தயங்குவார்கள். காரணம், முந்தைய பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பு அபாரமானது. அதனால் வேறெந்த படமும் அந்தத் தேதியில் வருவதாக அறிவிக்கவில்லை.
அந்த மாதத்தையே 'புஷ்பா 2' படத்திற்காக விட்டுவிட்டார்கள். ஆனால், அவர்களோ டிசம்பர் 6க்கு படத்தைத் தள்ளி வைத்துவிட்டனர். அதனால், ஆகஸ்ட் 15ம் தேதி மற்ற படங்கள் களமிறங்க இருக்கின்றன. அந்தத் தேதியில் வெளியாவதாக அறிவித்திருக்கும் படம், ராம் பொத்தினேனி, சஞ்சய் தத் நடிப்பில் உருவாகி இருக்கும் 'டபுள் ஐ ஸ்மார்ட்'. இயக்குநர் புரி ஜெகன்நாத் 'லைகர்' எனும் ப்ளாப் படத்திற்குப் பிறகு, இந்தப் படத்துடன் வருகிறார். ஏற்கெனவே, சூப்பர்ஹிட்டான 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் சீக்வெல் இது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, துல்கர் சல்மான், மீனாட்சி செளத்ரி நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் 'லக்கி பாஸ்கர்' படமும் அந்த வீக் எண்ட் விடுமுறையை மனதில் வைத்து இறங்கினாலும் இறங்குவார்கள். ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆகஸ்ட் 29ம் தேதி நானி, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சரிபோதா சனிவாரம்' படம் வெளியாக இருக்கிறது. இயக்குநர் விவேக் ஆத்ரேயா - நானி காம்பினேஷனில் ஏற்கெனவே 'அன்டே சுந்தரானிக்கி' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதம் 27ம் தேதி ஜூனியர் என்.டிஆர், ஜான்வி கபூர், சயிஃப் அலி கான் நடித்திருக்கும் 'தேவரா' படம் வெளியாக இருக்கிறது. தன்னுடைய கரியரில் முதன் ப்ளாபான 'ஆச்சார்யா' படத்திற்கு பிறகு, இயக்குநர் கொரடாலா சிவா இயக்கியிருக்கும் படம் இது. கடல் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் அட்வெஞ்சர் படமான இது இரண்டு பாகங்களாக உருவாகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு, அனிருத் இசை, ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் என பயங்கரமான டெக்னீஷியன்களின் உறுதுணையுடன் வருகிறது 'தேவரா'.
இந்தப் படம் வருவதால், பவன் கல்யாணின் 'OG' படம் அக்டோபர் அல்லது நவம்பருக்கு தள்ளிப்போக அதிக வாய்ப்பிருக்கிறது. 'OG' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எங்கேயோ இருக்கிறது. பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, பிரியங்கா மோகன், பிரகாஷ் ராஜ், அர்ஜுன் தாஸ் என நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். பவன் கல்யாண் துணை முதல்வரான பிறகு வெளியாகும் முதல் படமாக இது இருக்கும்.
டிசம்பரில் 'புஷ்பா 2'வுக்குப் பிறகு, ஜனவரியில் சிரஞ்சீவியின் 'விஸ்வாம்பரா' படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் பாலையாவின் படமும் சைலன்டாக தயாராகிக் கொண்டிருக்கிறது. திடீரென்று 'நேனு வஸ்துன்னானு' என அவர் சடன் என்ட்ரி கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆக, பக்கா பிளானுடன் டோலிவுட் ஸ்கெட்ச் போட்டுக்கொண்டிருக்கிறது.
from விகடன்
Comments