Haraa: "மாதவிடாய் தொடர்பா மோகன் சார் பேசுற காட்சியில என்ன தப்பு இருக்கு?" - இயக்குநர் விஜய் ஸ்ரீ

ஏஜ் அட்டெண்ட் செய்ததால், மகளைப் பள்ளித்தேர்வு எழுத அனுமதிக்காத `ஹரா' படக் காட்சி நெட்டிசன்களின் விமர்சனதுக்குள்ளாகியிருக்கிறது.

"மாணவிகளுக்கு நாப்கின்களை நாங்களே கொடுக்கிறோம். தேர்வு எழுதலைன்னா மாணவிக்கு ஒரு வருடம் வீணாகிடுமே.. .நாங்களும் பெண்கள்தானே? நாங்களும் இந்தச் சூழல்களை கடந்துதானே வந்திருக்கோம்" என்று பெண் ஆசிரியர்கள் பேசும் சூழலிலும் மேனேஜ்மெண்டிடம் பேசி வீட்டிலாவது தேர்வு எழுதட்டும் என்ற போதிலும் தேர்வு எழுத அனுமதிக்காத அப்பாவாக மோகன் நடித்த காட்சியை விமர்சித்து வருகிறார்கள். அதேநேரம், தகப்பனால்தான் மகளின் வலியை புரிந்துகொள்ள முடியும் என்று அந்தக் காட்சியை சிலர் பாராட்டவும் செய்கிறார்கள். இந்த நிலையில், ’ஹரா’ படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீயிடம் பேசினேன்.

ஹரா இயக்குநர் விஜய் ஸ்ரீ

“நான் பெண்களை மிகவும் மதிக்கக்கூடியவன் என்பதால்தான் எனது மூன்று படங்களிலுமே பெண்களின் உணர்வுகளை மதிக்கும் காட்சிகளை வைத்திருப்பேன். குறிப்பாக, முதல் படத்திலேயே ’பெண்களின் அனுமதி இல்லாமல் தொடுவது சட்டப்படி குற்றம்’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பேன். எனது இரண்டாவது படமான ’பவுடர்’ படத்தில் ’பெண்களை காப்பாற்ற ஹீரோதான் வருவார், ஆண்கள்தான் வரவேண்டும் என்று காத்திருக்கக்கூடாது. நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள, பிரச்னைகளை எதிர்த்து நின்று போராடவேண்டும்’ என்று சொல்லியிருப்பேன். குறிப்பாக, பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வைத்துக்கொள்ளவேண்டும் பதிவு செய்திருப்பேன்.

இந்தப் படத்திலும் பெண்களின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்துகொள்ளும் பல்வேறு காட்சிகள் உள்ளன. அதனாலதான் கூட்டம் கூட்டமாக பெண்கள் இந்தப் படத்தை வந்து பார்க்கிறாங்க. மோகன் சார் ரசிகைகள் ஒரு பக்கம் வர்றாங்கன்னா, இன்னொரு பக்கம் இந்த கதையின் கருவுக்காக வர்றாங்க. அதுவும் குறிப்பிட்ட காட்சிக்குப் பலத்த கை தட்டல் கிடைச்சுக்கிட்டே இருக்கு. படம் வெளியாகி இரண்டாவது வாரம்... அப்படின்னா மக்கள் இதை ஏற்றுக்கிட்டாங்கன்னுதானே அர்த்தம். என் அம்மா, என் அக்கா, என் மனைவி, மகள் என்னைச் சுற்றி எல்லாமே பெண்கள் சூழ்ந்திருக்காங்க. அதனாலதான், பெண்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படங்களா இயக்குறேன். மசாலா படங்கள் பன்றதுக்கு எனக்கு விருப்பமில்ல.

மோகன்

அந்தக் காட்சியில மோகன் சாரோட பொண்ணு ஏஜ் அட்டெண்ட் பண்ணியிருப்பாங்க. முதல் தடவை வலியை அனுபவிக்கும்போது அதைப் பற்றிய புரிதல் இல்லாம வேதனையில் இருப்பாங்க. இப்போல்லாம், அஞ்சாவது ஆறாவது படிக்கும்போதே குழந்தைங்க வயசுக்கு வந்துடுறாங்க. அந்த சூழலில் எக்ஸாம் எழுதச்சொல்லி மன உளைச்சலை ஏற்படுத்துறது அவங்களோட வலியையும் வேதனையையும் அதிகப்படுத்தும்.

இந்த மாதிரி சூழலில் ஓய்வு எடுத்துக்கிறதுல தப்பே கிடையாது. கொரோனா காலத்துல ரெண்டு வருடம் ஸ்கூலுக்கு அனுப்பாம வீட்டுலேயே இருந்தாங்களே அதனால என்ன இழப்பு ஏற்பட்டுப்போச்சு? இதை நான் முற்போக்காத்தான் காண்பிச்சிருக்கேன்.

அதேமாதிரி, பொண்ணு ஏஜ் அட்டெண்ட் பண்ணினதும் அப்பா மோகன் சார் மகளைப் பார்க்க போவாரு. ஆனா, இந்தச் சூழலில் பார்க்கக்கூடாதுன்னு மனைவி தடுப்பாங்க. ஆனாலும் மகளை போயி பார்க்கிறதுல என்ன தப்பு இருக்குன்னுதான் முற்போக்கா காட்சி வெச்சிருப்பேன். எங்கயும் நான் பிற்போக்கா காண்பிக்கல. அடுத்த தடவையும் அனுமதிக்கலைன்னாதான் பிற்போக்கு.

ஹரா மோகன்

நெதர்லாந்துல ஏஜ் அண்டெண்ட் பண்ணினா லீவு கொடுக்கிறாங்க. அதேமாதிரி, இங்கேயும் லீவு கொடுக்கணும். தன்னோட குழந்தை வலியிலும் வேதனையிலும் உட்கார்ந்து எக்ஸாம் எழுதக்கூடாதுன்னு ஒரு அப்பா நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு? பெண்கள் ஏஜ் அண்டெண்ட் பண்ணும்போது அந்த வலியை உள்ளார்ந்து உணர்ந்து பார்த்தாதான் தெரியும். அப்பாக்களால மட்டும்தான் உள்ளார்ந்து உணர முடியும். அம்மா இல்லைன்னா அப்பாதானே பார்த்துப்பாங்க. மத்தபடி, பீரியட்ஸ் டைம்ல பெண்கள் என்ன வேணாலும் பண்ணலாம். அது அந்தப் பொண்ணோட கட்ஸ்தான்!

மோகன் சார் அந்தக் காட்சியை ரொம்ப விரும்பி நடிச்சாரு. அந்தக் காட்சியை வைக்கலாமா வேணாமான்னு யோசிக்கும்போது கண்டிப்பா வைக்கணும், பெண்களோட வலியை பேசுது, கண்டிப்பா அந்த காட்சி பேசப்படும்னு மோகன் சார் சொன்னார். அதே மாதிரி பேசப்படுறதுல எனக்கு சந்தோஷம். மிக முக்கியமா இணையத்தில் அந்தக் காட்சி பேசுபொருள் ஆகியிருக்கு. ஓர் ஆரோக்கியமான விவாதத்தை தூண்டினதுல ரொம்ப சந்தோஷம்” என்பவரிடம் ”பெண்களுக்கு மாதவிடாய் லீவு கொடுக்க சொன்னா, பணியிடங்களில் வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் ஏற்படுமே?” என்று நாம் கேட்டபோது,

Haraa

”கட்டாயமாக லீவு கொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. தேவைப்படுகிறவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றுதான் சொல்கிறேன். இந்தக் காட்சியை பார்த்துவிட்டு பழைமையானது என்று சொல்லலாம். மாதவிடாய் காலத்தில் இன்னமும் நகர்புறங்களில்கூட துணியைப் பயன்படுத்தும் பெண்கள் இருக்காங்க. தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் இலவசமா நாப்கின் கொடுக்கவேண்டிய சூழல்? அப்படின்னா இன்னும் விழிப்புணர்வு வரலைன்னுதானே அர்த்தம்?” என்று கேள்வியுடன் முடித்தார்.



from விகடன்

Comments